Published : 22 Jun 2016 10:40 AM
Last Updated : 22 Jun 2016 10:40 AM

அதா யோனத் 10



அதா யோனத் - நோபல் பரிசு பெற்ற இஸ்ரேல் ஆராய்ச்சியாளர்

நோபல் பரிசு பெற்ற இஸ்ரேல் ஆராய்ச்சியாளரும், பேராசிரியருமான அதா யோனத் (Ada Yonath) பிறந்த தினம் இன்று (ஜூன் 22). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* இஸ்ரேலின் ஜெருசலேம் நகரில் (1939) பிறந்தார். மளிகைக் கடை நடத்திய தந்தை, மோசமான உடல்நிலை காரணமாக அவ்வப் போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். இதனால் போதிய வருமானம் ஈட்ட முடியவில்லை. ஆனாலும், மகளுக்கு நல்ல கல்வியை அளிப்பதில் பெற்றோர் உறுதியாக இருந்தனர்.

* தரமான பள்ளியில் ஆரம்பக் கல்வி கற்றார். 4 அறைகள் கொண்ட வாடகை வீட்டில் மேலும் 2 குடும்பத்துடன் இவர்களது குடும்பம் வசித்தது. வறுமை வாட்டிய சூழலில் புத்தகங்கள் மட்டுமே இவரது பொழுதுபோக்கு. அறிவை ஈட்டுவதற்கான ஆதாரங்களும் அவைதான்.

* தந்தை காலமானதும், படிப்பைத் தொடர்ந்துகொண்டே சிறு சிறு வேலைகள் பார்த்து, அம்மாவுடன் சேர்ந்து குடும்ப பாரத்தை சுமக்கத் தொடங்கினாள் சிறுமி. பிறகு, அம்மாவின் சகோதரிகள் வசிக்கும் டெல்அவிவ் நகருக்கு குடிபெயர்ந்தனர்.

* பள்ளிப் படிப்பை முடித்து, கட்டாய ராணுவ சேவையில் ஈடுபட்டார். மருத் துவப் பிரிவில் பணியாற்றியவர் மருந்துகள், நோய், மருத்துவப் பிரச்சினைகள் குறித்து நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டார்.

* ஜெருசலேமில் உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் வேதியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். உயிரி வேதியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். வெய்ஸ்மான் கல்வி நிறுவனத்தில் எக்ஸ்ரே படிகவியலில் முனைவர் பட்டம் பெற்றார். கொலோஜென் புரோட்டீன் பொருளின் வடிவமைப்பு குறித்து ஆராய்ந்தார்.

* பிட்ஸ்பர்க், பென்சில்வேனியாவில் உள்ள பிரபல ஆய்வுக்கூடங்களில் பல ஆய்வுகளை மேற்கொண்டார். பிறகு மசாசூசெட்ஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (எம்ஐடி) ஆய்வுகளில் ஈடுபட்டார். சிகாகோ பல்கலைக்கழகத்தில் வருகைதரு பேராசிரியராகப் பணிபுரிந்தார்.

* மீண்டும் வெய்ஸ்மான் திரும்பியவர், இஸ்ரேலின் முதல் உயிரியியல் படிகவியல் ஆய்வகத்தை முன்னின்று தொடங்கிவைத்தார். செல்களில் புரத உற்பத்தி அமைப்பு மற்றும் எதிர்உயிரிகளால் அவற்றில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ரிபோசோம் செல்களுக்குள் புரதங்கள் உற்பத்தியாவது தொடர்பாக ஆய்வு நடத்தினார்.

* தாக்கும் நோய்க் கிருமிகளிடம் இருந்து ரிபோசோம்களை ஆன்டிபயாடிக் மருந்துகள் எவ்வாறு பாதுகாக்கின்றன என்று கண்டறிந்தார். 20 ஆண்டுகால கடுமையான உழைப்பில் இதை சாதித்தார். இவரது கண்டுபிடிப்புகள் சக்திமிக்க ஆன்டிபயாடிக் மருந்துகள் உற்பத்தி செய்ய வழிவகுத்தன.

* இஸ்ரேல் அறிவியல் அகாடமி, அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமி ஆகியவற்றின் உறுப்பினராக 2000-ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரிபோசோம்களின் வடிவமைப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்த ஆராய்ச்சிகளுக்காக, வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன், தாமஸ் ஸ்டெய்ஸ் ஆகிய இருவருடன் இணைந்து வேதியியலுக்கான நோபல் பரிசை 2009-ம் ஆண்டு பெற்றார்.

* நோபல் பரிசு பெற்ற முதல் இஸ்ரேலியப் பெண் என்ற பெருமைக்கு உரியவர். இதுதவிர, ஏராளமான பரிசுகள், விருதுகளைப் பெற்றுள்ளார். இன்று 78-வது வயதில் அடியெடுத்து வைக்கும் அதா யோனத், தற்போது வெய்ஸ்மான் கல்வி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ‘ஹெலன் அண்ட் மில்டன்’ உயிரியல் மூலக்கூறு கட்டமைப்பு ஆய்வு மையத்தின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x