Published : 20 Aug 2016 10:49 AM
Last Updated : 20 Aug 2016 10:49 AM

கோவை புத்தகக் காட்சி: சில துளிகள்

விற்பனையாளர்களின் எதிர்பார்ப்பு என்ன?

“கோவைக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு புத்தகக் காட்சிக்கென வந்தேன். பெரிசா வியாபாரம் இல்லை. கடந்த ஆண்டு புத்தகக் காட்சியில் இதே கொடீசியாவில் 4 ஸ்டால்கள் எடுத்தேன். கிட்டத்தட்ட17 லட்சத்துக்கு புத்தகங்கள் விற்பனை ஆச்சு. இந்த முறை புத்தகக் காட்சி இரு மடங்கு வளர்ந்திருப்பதால், விற்பனை அதிகம் இருக்கும் என்று நினைக்கிறேன்!” என்கிறார் ‘மீனாட்சி புக் ஷாப்’ விற்பனையாளர் அருணாச்சலம்.

ஆங்கிலப் புத்தக அரங்கு வைத்திருந்த ஆசியன் புக்ஸ் மணிமேகலை கூறுகையில், “1 ஸ்டாலுக்கு ரூ.3 லட்சம் வரை விற்பனை இலக்கு. 2 கடைகள் எடுத்திருக்கிறோம். நிச்சயம் ரூ. 6 லட்சம் வரை விற்பனை இருக்கும். ‘டிரெய்ன் யுவர் பிரெய்ன்’, ‘பவர் ஆஃப் சப்கான்சியஸ் மைன்ட்’ மற்றும் ‘செல்ஃப் இம்ப்ரூவ்மெண்ட் புத்தகங்கள் நிறைய விற்பனையாகின்றன!’ என்றார்.

‘தி இந்து’ அரங்கில் என்ன சிறப்பு? (அரங்கு எண்: 244.)

‘தி இந்து’ அரங்கில் சலுகைக் கட்டணத்தில் சந்தா சேர்ப்பும் நடப்பதால் கணிசமான வாசகர்கள் குவிகிறார்கள். இங்கு சிறப்புத் தள்ளுபடி விலையில் ‘நம் மக்கள் நம் சொத்து’, ‘மெல்லத் தமிழன் இனி’, ‘கடல்’, ‘வேலையைக் காதலி’, ‘வெள்ளித் திரையின் வெற்றி மனிதர்கள்’, ‘மண் மணம் சொல்லும் மாவட்ட சமையல்’, ‘ஆங்கிலம் அறிவோமே’, ‘நம் கல்வி நம் உரிமை’, ‘இந்தியாவும் உலகமும்’, ‘ஜெயகாந்தனோடு பல்லாண்டு’, ‘வீடில்லா புத்தகங்கள்’, ‘ஆங்கிலம் அறிவோமே: பாகம்- 2’, ‘மனசு போல வாழ்க்கை’, ‘பெண் எனும் பகடைக்காய்’, ‘ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு’, ‘காற்றில் கலந்த இசை’, ‘தொழில் கலாச்சாரங்கள்’, ‘தொழில் ரகசியம்’ போன்ற புத்தகங்களும் ‘ ராமானுஜர் 1000’, ‘ஆனந்த ஜோதி’ உள்ளிட்ட சிறப்பிதழ்களும், ஏற்கெனவே விற்பனையில் சக்கைப்போடு போடும் ஆங்கில வெளியீடுகள் அனைத்தும் கிடைக்கின்றன.

அறிவுக்கேணி!

கோவையில் உள்ள 50-க்கும் மேற்பட்ட முக்கிய எழுத்தாளர்களை அழைத்துக் கூட்டம் நடத்தி, அவர்களின் ஆலோசனையையும் ஒத்துழைப்பையும் கொடீசியா பெற்றுள்ளது. மாவட்டத்தில் உள்ள 1,500-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி அமைப்புகளை ஒருங்கிணைத்து ‘அறிவுக்கேணி’ என்ற வாசிப்புப் பேரியக்கத்தை இந்தப் புத்தகத் திருவிழாவில் தொடங்க ஏற்பாடு செய்துள்ளனர். ‘புத்தகங்களை மக்களிடம் கொண்டுபோவதை நாங்கள் சேவையாகவே பார்க்கிறோம். இது ஆரம்பம்தான். அடுத்தடுத்து நடைமுறைக்கு ஏற்ப வாசிப்பில் புதுப்புது உத்திகளைத் தீட்டுவோம்!’ என்கிறார் கொடீசியா தலைவர் சுந்தரம்.

பாலகுமாரனுக்கு விருது!

புத்தகத் திருவிழாவில், இந்த ஆண்டு ‘வாழ்நாள் சாதனையாளர் விருது’ பாலகுமாரனுக்கும், ‘சிறந்த சேவைபுரிந்த பதிப்பாளர் விருது’ சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துக்கும் வழங்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி, 35 வயதுக்குட்பட்ட இளம் எழுத்தாளர்களுக்கு விருது கொடுக்கவும் திட்டமிடப்பட்டது. ஆனால், போதிய அவகாசம் இல்லாததால் அடுத்த ஆண்டு முதல் அது தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.2 கோடிக்கு விற்பனை இலக்கு!

பபாசி தலைவர் காந்தி கண்ணதாசன் கோவை புத்தகத் திருவிழாவைப் பற்றிக் குறிப்பிடும்போது, "அதிகமான அரங்குகள் என்பதைவிட, அதிகமான மக்கள் பயன்படுத்துகிற மாதிரியான அரங்குகளை இந்தக் கண்காட்சியில் அமைத்துள்ளோம். குடும்பத்தோடு வரக்கூடிய கணவன், மனைவி, அவர்களின் பிள்ளைகள் ஆளுக்கு ஒரு புத்தகமாவது வாங்கிச் செல்லும் வண்ணம் புத்தகத் தலைப்புகள் உள்ளன. கொடீசியாவில் கடந்த முறை நடந்த கண்காட்சியில் அமைந்த 160 ஸ்டால்களில் 50 ஆயிரம் புத்தகங்கள் ரூ.1 கோடிக்கு மேல் விற்பனையானது. இந்த முறை 1 லட்சம் புத்தகங்கள் ரூ.2 கோடிக்கு மேல் விற்கும் என எதிர்பார்க்கிறோம்!” என்றார்.

எழுத்தாளர்கள் என்ன சொல்கிறார்கள்?

கவிஞர் கீதா பிரகாஷ்-: குடும்பத்தையும் கவனித்து, வாசிப்பு, படைப்பிலும் ஆர்வம் கொண்ட பெண்களுக்கு புத்தகத் திருவிழா என்பது வெறும் கனவாகவே இருந்தது. சென்னை, மதுரை, தஞ்சை, ஈரோடு என நடப்பதைப் பார்க்கும்போதெல்லாம் நாமும் போக முடியாதா? புத்தகப் படையலை ருசி பார்த்து வாங்க முடியாதா என்ற ஏக்கத்தை கொடீசியாவில் நடக்கும் புத்தகக் கண்காட்சி தீர்த்து வைத்துள்ளது.

இளஞ்சேரல்:

சென்னை, ஈரோடு, மதுரையில் புத்தகத் திருவிழா நடக்கும்போது அங்கு செல்வதும், புத்தகங்கள் வாங்குவதும் வெளியூர் சந்தைகளுக்குப் போவது போல. அங்கு சக எழுத்தாளர்களை சந்திப்பதுகூட விருந்தில் சந்திப்பது போலவே இருக்கும். நம்ம ஊரிலேயே புத்தகத் திருவிழா நடப்பது என்பது நம் வீட்டு விசேஷம் போல இருக்கிறது. எழுத்தாளர்களையும் வாசகர்களையும் அழைத்து, உபசரித்து அனுப்புவது மனநிறைவைத் தரும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x