Published : 19 Sep 2013 20:12 pm

Updated : 06 Jun 2017 11:35 am

 

Published : 19 Sep 2013 08:12 PM
Last Updated : 06 Jun 2017 11:35 AM

தகுதியானவரா மோடி?

ஒரு தரப்புக்கு மோடி பிரதமராவது இறைவனின் சித்தம்; மறுதரப்புக்கோ மோடி ஒரு சாத்தான்.

மோடி பிரதமராகவே கூடாது என நினைப்பவர்களின் குற்றச்சாட்டுகள் பரவலாக அறியப்பட்டவைதான். கோத்ரா ரயில் எரிப்பு மரணங்களை அவர் கையாண்ட விதம், குஜராத் படுகொலை, என்கவுன்டர் கொலைகள், அவரது பாஸிச அணுகுமுறை எனப் பல. இக்குற்றச்சாட்டுகள் உண்மையெனில் மோடி நிச்சயம் பிரதமராகத் தகுதியானவர் அல்ல. ஆனால், இக்குற்றச்சாட்டுகள் உண்மையாகவே இருந்தாலும் அவை முக்கியமல்ல, 'வளர்ச்சிப் பாதையில்' இந்தியாவை வேகமாக முன்னெடுத்துச் செல்லும் அவருடைய திறனே முக்கியமானது என்று ஒரு கூட்டம் நினைக்கிறது.


கட்டுப்பாடற்ற வளர்ச்சியைவிட சமூக ஒருங்கிணைப்பே முக்கியமானது. வளர்ச்சி என்பது மனிதனின் மேம்பாட்டுக்குத்தான். மனித உயிர்களுக்கு உத்திரவாதம் இல்லாத சமூகத்தில் வளர்ச்சி எலும்புக்கூடுகளுக்குத்தான் பயன்படும்.

சுதேசி கொள்கையுடைய ஆர்எஸ்எஸின் சேவகர் ஒருவர் வளர்ச்சிப் பாதையில் தீவிரவாதியாகச் செயல்பட்டு கார்ப்பரேட்டுகளின் கனவுத் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இவரைப் பல எதிர்ப்புகளையும் மீறிப் பிரதமர் வேட்பாளராக ஆர்எஸ்எஸ் முன்னிறுத்தியிருக்கிறது. இது வலதுசாரிகளின் கவனத்திற்குரிய முரண்பாடு.

மதச் சிறுபான்மையினர் அடக்கி ஒடுக்கப்பட வேண்டும்; அதேபோல, வளர்ச்சிப் பாதைக்குக் குறுக்கே வரும் பழங்குடியினர், மாவோயிஸ்டுகள், சுற்றுச்சூழலியலாளர்கள் போன்றவர்களும் அடித்து நொறுக்கப்பட்டு இந்தியா 'வல்லரசு' ஆக வேண்டும்; அதற்கு மோடி பிரதமராக வேண்டும் என்று நினைப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால், இக்கருத்துகளை இவர்கள் பொது இடத்தில் பச்சையாக முன்வைப்பது அரிது.

சந்தையில் அடித்ததற்கும் நீதிமன்றத்தில் சாட்சி வேண்டும். எனவே சமூக உண்மை பல சமயங்களில் நீதிமன்ற உண்மையாக இருப்பதில்லை. ஒரு பேச்சுக்காக மோடி அப்பாவி என்று கொள்வோம்.

அப்படியெனில் சட்ட ஒழுங்கைப் பாதுகாக்க அவருக்குத் திறன் இல்லை, கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவத்தை அவருக்குக் கையாளத் தெரியவில்லை, இந்தியச் சட்ட அமைப்பு முன்வைக்கும் ஒரு முதல்வரின் முக்கியக் கடமைகளான பொது மக்களின் உயிர்களையும் சொத்துகளையும் பாதுகாத்தல், சிறுபான்மையினரைப் பாதுகாத்தல் ஆகியவற்றை அவரால் நிறைவேற்ற முடியவில்லை, தனது காவல் அதிகாரிகளை அவரால் கட்டுப்படுத்த முடியவில்லை, அவர்கள் அப்பாவி இளைஞர்களைச் சுட்டுக் கொன்றது அவருக்குத் தெரியவில்லை, எல்லாவற்றுக்கும் மேல் பல ஆண்டுகளான பின்னரும் உண்மையை விசாரித்தறிந்து நீதியை நிலை நாட்டவும் முடியவில்லை என்றே பொருள்படும். எனவே மோடி அப்பாவி என்று நினைத்தால்கூட பிரதமராகும் தகுதி அவருக்கு இல்லை.

மோடியின் போர் வாளாக அறியப்படும் அமித் ஷாவுக்கு உத்தரப்பிரதேசத்தின் பாஜக கட்சிப் பொறுப்பு கொடுக்கப்பட்ட பின்னர் அங்கு இந்துத்துவவாதிகளின் போக்கு தீவிரமடைந்துள்ளது. மதக் கலவரங்களும் படுகொலைகளும் பரவிவருகின்றன. மதவாதத் தீயை பாஜக அரசியல்வாதிகள் பரப்பினார்கள் என்பதும் சமாஜ வாதிக் கட்சியும் அரசும் நிர்வாகமும் அதற்கு உடந்தையாக இருந்தன என்பதும் ஊடகங்களால் தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. சிலர் சொல்வதுபோல மோடியின் பாதையில் குஜராத் கலவரம் ஒரு விதிவிலக்கல்ல, அதுவே தில்லிக்குச் செல்லும் அவர் செயல்முறை என்பதையே இவை காட்டுகின்றன.

எப்படிப் பார்த்தாலும் மோடி இந்தியாவுக்கு ஒரு பெரும் பிறழ்வாகவே இருப்பார்!

கண்ணன் - தொடர்புக்கு: kannan31@gmail.comமோடிநரேந்திர மோடிபிரதமர் வேட்பாளர்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x