

நீங்கள் ‘ஆயிரத்தில் ஒருவன்’ படப்பிடிப்பு இடைவேளையில் தனியாக ஒதுங்கி அமர்ந்து ஆங்கிலப் புத்தகங்கள் படித்துக் கொண்டிருப்பதை எம்.ஜி.ஆர். நோட்டம் விட்டுக் கொண்டிருப்பார்... உங்கள் அறிவுத் திறனை எடைபோட்டுக் கொண்டிருப்பார். அதே படத்தில் நாகேஷுக்கு ஜோடியாக நடித்த மாதவியுடன் அவ்வப்போது ஆங்கி லத்தில் உரையாடுவது உங்கள் வழக்கம். மாதவி சிங்கப்பூரை சேர்ந்த நடிகை. ஆங்கில அறிவும் அவருக்கு அதிகம்.
‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்தின் கதை ‘கேப்டன் பிளட்’ என்ற ஆங்கிலப் படத்தின் கதை போல் இருப்பதாக மாதவி கூற, ''இருக்கலாம். ஆனால் நமது படப்பிடிப்பில் இதனைப் பேசுவது தவறு. இதனால் இங்கு பணி செய்பவர்களின் திறமையை நாம் குறைத்து மதிப்பீடு செய்வது போல் ஆகிவிடும்” என்று நீங்கள் அந்தப் பேச்சுக்கு முற்றுப் புள்ளி வைத்தீர்கள்.
இந்த விவரம் எம்.ஜி.ஆரின் காதுக்குச் சென்றது. படப்பிடிப்புக்கு கடலில் தனியே படகில் வந்த உங்கள் துணிச்சலும், படப்பிடிப்புக்கு ஒத்துழைப்பதும், மனதில் பட்டதை வெளிப்படையாக பேசும் குணமும், அறிவுத் திறனும் பிடித்து விட தங்களை மேலும் சில படங்களுக்கு கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய எண்ணினார். அந்தக் காலகட்டத்தில் எம்.ஜி.ஆருடன் சரோஜாதேவி பல படங்களில் நடித்துவிட்டதால் ரசிகர்கள் அவரது ஜோடியாக ஒரு புதிய முகத்தை பார்க்க விரும்பினர். ரசிகர்களின் நாடித்துடிப்பை எம்.ஜி.ஆரும் அறிந்திருந்தார். எனவே, உங்களை தனது படங்களில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்ய விரும்பினார்.
தனது அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தம் செய்வது பற்றி எம்.ஜி.ஆர். கேட்டபோது, பதில் கூற சந்தியா தயங்கினார். காரணம், உங்கள் தாய் சந்தியாவோ சிவாஜி கணேசனின் நண்பர். உங்களின் பரதநாட்டிய அரங்கேற்றத்திற்கு தலைமை வகித்து ‘தங்கச் சிலை’ என்கிற பட்டத்தை சிவாஜி கணேசன் தங்களுக்கு வழங்கியிருந்தார். உங்கள் தாயாருக்கு சிவாஜி கணேசன் தனது படங்களில் தொடர்ந்து வாய்ப்பு வழங்கிக் கொண்டிருந்தார்.
எம்.ஜி.ஆர். தனது படங்களில் மீண்டும் மீண்டும் கதாநாயகியாக உங்களை ஒப்பந்தம் செய்தால், தனக்குக் கிடைத்து வரும் வாய்ப்புகள் பறிபோகுமோ என்கிற அச்சம் உங்கள் தாயார் சந்தியாவுக்கு இருந்திருக்க வேண்டும். இந்தக் காரணங்கள் நினைவில் நிழலாடியதால், தனது படங்களில் உங்களை ஒப்பந்தம் செய்வது பற்றி எம்.ஜி.ஆர். கேட்டபோது, சந்தியா தயக் கத்துடன் ஒப்புக் கொண்டார்.
சென்னையில் ‘வெண்ணிற ஆடை’ படம் ஓடிக்கொண்டிருந்த அதே சமயம், எம்.ஜி.ஆரின் ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படம் வெள்ளி விழாவை நோக்கி சக்கை போடு போட்டு கொண்டிருந்தது. ‘ஆயிரத்தில் ஒருவன்’ நூறு நாட்கள் ஓடியது. என்றாலும், ‘எங்க வீட்டுப் பிள்ளை’ வெள்ளி விழா கொண்டாடியதால் இரண்டு படங்களையும் ஒப்பிட்டு, சரோஜா தேவிதான் எம்.ஜி.ஆருக்கு பொருத்தமான நாயகி என்று ஒரு பேச்சு அடிபட்டது. அதுவும் இல்லாமல், எம்.ஜி.ஆர். பட வாய்ப்பு யாருக்கு என்பதில் உங்களுக்கும் சரோஜா தேவிக்கும் பிணக்கு என்றெல்லாம்கூட கூறப்பட்டது. நீங்கள் அதனை அடியோடு மறுத்தீர்கள்!
‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்துக்குப் பிறகு, பந்துலு தான் தயாரித்த ‘நாடோடி’ படத்தில் எம்.ஜி.ஆருடன் சரோஜா தேவியை இணைய வைத்தார். நீங்கள் எம்.ஜி.ஆருடன் தேவர் பிலிம்ஸின் ‘கன்னித்தாய்’ படத்தில் நடித்தீர் கள். ஆக, உங்கள் இருவருக்கும் இடையே எம்.ஜி.ஆர். படங்களில் நடிப்பதற்கு ஒருவித போட்டியே நிலவத் தொடங்கியது.
எம்.ஜி.ஆருடன் நீங்கள் நடித்த இரண்டாவது படம் ‘கன்னித்தாய்’ வெற்றிகரமாக ஓடியது. அதே சமயம், சரோஜா தேவி எம்.ஜி.ஆருடன் நடித்த ‘நாடோடி’ அந்த அளவுக்கு ஓடவில்லை. இதனால், எம்.ஜி.ஆருக்கு நீங்களே பொருத்தமான நாயகி என்கிற பேச்சு எழத் தொடங்கியது.
என்னருமை தோழி!
அப்போது தமிழ் ரசிகர்களின் கனவுக் கன்னியாக விளங்கிய நீங்களும், கன் னடத்து பைங்கிளி சரோஜா தேவியும் ஒரே சமயத்தில் எம்.ஜி.ஆரின் படங் களில் நடித்துக் கொண்டிருந்தீர்கள். 1966-ஜனவரியில் எம்.ஜி.ஆர். - சரோஜா தேவி நடித்த ‘அன்பே வா’வும் பிப்ரவரி 1966-ல் ‘முகராசி’யும் வெளியாயின. இரண் டுமே வெற்றி பெற்றன.
அதன்பின், எம்.ஜி.ஆர். படங்களான ‘சந்திரோதயம்’, ‘தனிப்பிறவி’ இரண்டிலும் தாங்களே கதாநாயகி. தொடர் வெற்றிகளால் எம்.ஜி.ஆரும் நீங்களும்தான் பொருத்தமான ஜோடி என்கிற நிலை தோன்றியது. இதே போல் ஜெமினி கணேசன்-சாவித்ரி, சிவாஜி கணேசன் -பத்மினி என்று ஜோடிகளை வெற்றி அடையச் செய்தனர் தமிழ் ரசிகர்கள்!
தமிழக திரையுலகில் தன்னிரகற்ற தாரகையாக ரசிகர்களின் உள்ளங்களில் நிறைந்திருந்தீர்கள். அந்த சமயத்தில் எம்.ஜி.ஆர் படங்களில் அதிகம் நடித்துக் கொண்டிருந்த தங்களை ஏவிஎம் நிறுவனம் தனது புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் செய்தது. பெரிய நிறுவனத்தின் படத்தில் நாயகியாக தன் மகள் நடிக்கப் போவதில் உங்கள் தாய் சந்தியா பெருமைப் பட்டார்.
ஆனால், அந்த படத்தின் இயக்குநருக்கும் தங்களுக்கும் எழுந்த ஒரு பிரச்சினையால்.. கடைசி வரை அவர் படத்தில் இனி நடிக்க போவதில்லை என்று நீங்கள் சபதம் செய்யும் அளவுக்கு நிலைமை போனது. உங்களை பொறுத்தவரை உங்கள் வைராக்கியத்துக்கு விடப்பட்ட சோதனையாகவே அதை நினைத் தீர்கள்.
1966-இல் வெளிவந்தது அந்த படம்...!
- தொடர்வேன்...
தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in
படம் உதவி: ஞானம்