

பிரிட்டிஷ் தொல்பொருள் ஆய்வாளர்
‘இந்திய தொல்லியல் ஆய்வுகளின் தந்தை’ எனப் போற்றப்படும் பிரிட்டிஷ் ஆய்வாளர் அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் (Alexander Cunningham) பிறந்த தினம் இன்று (ஜனவரி 23). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* லண்டனில் (1814) பிறந்தார். இவரது தந்தை கவிஞர். லண்டன் கிரைஸ்ட் ஹாஸ்பிடல் பள்ளியில் தொடக்கக் கல்வி பயின்றார். பின்னர், அடிஸ்கோம்பே என்ற இடத்தில் இருந்த கிழக்கிந்திய கம்பெனியின் மடாலயக் கல்வி நிறுவனத்தில் பயின்றார்.
* ராயல் இன்ஜினீயர்ஸ் எஸ்டேட் கல்விக்கூடத்தில் தொழில்நுட்பப் பயிற்சி பெற்றவர், 19 வயதில் இந்திய - பிரிட்டிஷ் ராணுவத்தில் ‘பெங்கால் இன்ஜினீயர்ஸ்’ பிரிவில் 2-ம் நிலை லெப்டினென்டாக சேர்ந்தார். 28 ஆண்டு ராணுவப் பணியில், பல உயர் பதவிகளை வகித்தார். மேஜர் ஜெனரல் ஆனபிறகு, ஓய்வு பெற்றார்.
* இந்தியாவுக்கு 1833-ல் வந்தபோது, ஜேம்ஸ் பிரின்செப் என்ற அகழ்வாராய்ச்சி நிபுணரின் நட்பு கிடைத்தது. பல்வேறு இடங்களுக்குச் சென்று அந்தந்த இடங்களின் வரலாறு குறித்து அறிந்தார். அகழ்வாராய்ச்சியிலும் ஈடுபட்டார். அவாத் மன்னரின் தலைமைப் பொறியாளராக நியமிக்கப்பட்டார். குவாலியரில் அரசுப் பொறியாளராக நியமிக்கப்பட்டார்.
* குவாலியர் நகரின் மோரார் நதியில் வளைந்த கல் பாலம், பஞ்சாபில் 2 பாலங்கள் ஆகியவற்றை கட்டும் பொறுப்பு இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1856-ல் பர்மாவின் தலைமைப் பொறியாளராக நியமனம் பெற்றார். வடமேற்கு மாகாணங்களிலும் பணியாற்றினார்.
* இந்தியாவில் தொல்பொருள் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியத்தை அரசுக்கு எடுத்துக்கூறி தேவையான நிதியுதவியும் பெற்றார். 1861-ல் புதிதாக உருவாக்கப்பட்ட இந்திய அகழ்வாராய்ச்சியின் சர்வேயராக நியமிக்கப்பட்டார். பிறகு, அதன் தலைமை ஆய்வாளராக நியமிக்கப்பட்டார். சில காலம் கழித்து, இந்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைமை இயக்குநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* ஏராளமான நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள் எழுதினார். பல அரிய தொல்பொருள்களைக் கண்டறிந்தார். பண்டைய இந்தியாவின் பல பகுதிகள், நாணயங்களைக் கண்டறியும் பணிகளுக்கு உதவினார். பழைய எழுத்துமுறைகளை அறியவும் நிபுணர்களுக்கு உதவினார்.
* இந்தியா குறித்து பழங்கால சீன, கிரேக்கப் பயணிகள் தெரிவித்த கருத்துகளை மொழிபெயர்க்கவும் அவற்றை வெளியிடவும் உறுதுணையாக இருந்தார். அகழ்வாராய்ச்சித் துறையிலும் உயர் பதவிகளை வகித்தார். இந்தியாவின் மறக்கப்பட்ட வரலாற் றுப் பெருமைகள் பற்றிய பல தகவல்களை உலகுக்கு எடுத்துக் கூறினார். இந்தியாவின் பண்டைய வரலாற்று குறித்த ஆராய்ச்சி யில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு வழிகாட்டியாக இருந்து உதவினார்.
* ராணுவத்தில் இவர் ஆற்றிய சேவைக்காக ‘ஆர்டர் ஆஃப் ஸ்டார் ஆஃப் இந்தியா’ பதக்கம், ‘ஆர்டர் ஆஃப் இந்தியன் எம்பயர்’ விருது கிடைத்தன. ‘நைட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் இந்தியன் எம்பயர்’ என்ற கவுரமும் பெற்றார். சிறந்த புராதன, வரலாறு, புவியியல் வல்லுநராகப் புகழ்பெற்றார்.
* இந்தியா முழுவதும் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த பல பொருட்கள், நினைவுச் சின்னங்கள் பவுத்த மதம் சார்ந்தவையே எனக் கண்டார். தனது ஆராய்ச்சிகளைத் தொகுத்து 23 தொகுதிகள் அடங்கிய ‘ஏன்ஷியன்ட் ஜியாகரபி ஆஃப் இந்தியா’ என்ற நூலாகப் படைத்தார்.
* இந்தியத் தொல்லியல் ஆராய்ச்சிகளின் தந்தை எனக் குறிப்பிடப்பட்டார். இறுதிவரை ஆராய்ச்சிகளில் ஈடுபட்டும், அதுகுறித்து எழுதியும் வந்த அலெக்சாண்டர் கன்னிங்ஹாம் 79 வயதில் (1893) மறைந்தார்.