Published : 19 Oct 2014 12:18 PM
Last Updated : 19 Oct 2014 12:18 PM

நுங்கு வண்டி

‘பசுமை நிறைந்த நினைவுகளே… பாடித் திரிந்த பறவை களே!’ இந்தப் பாடலை எங்கு கேட்டாலும் லேசாகக் கண் கலங்கிப்போவேன். நாம் எல்லோருமே ஒரு காலத்தில் இந்தப் பாடலுக்கு இலக்கணம் தந்தவர்கள்தான்.

சேர்ந்தாற்போல் நான்கு நாட்கள் பள்ளிக்கு விடுமுறை என்றால், வீட்டில் இருப்பவர்களுக்குத் தானாகவே ஜுரம் வந்துவிடும். “ஐயையோ, நாலு நாள் அவுத்து விட்டுட்டாங்களா… இனி ஆட்டம் கிடுகிடுத்துப் போகுமே’’ என்று வானிலை அறிக்கை வாசிப்பார்கள்.

போதுமா ஆட்டம்?

எங்கள் வீட்டைச் சுற்றி அப்போது வாதரசா மரங்கள் நிறைய இருக்கும். அவைதான் எனக்கும் நண்பர்களுக்கும் அணில்-ஆமை விளையாட்டுக் களம். மரத்தடியில் அணில் - ஆமை விளையாட்டைத் தொடர்வதற்காக நண்பர்கள் குழாம் காத்திருக்கும். தின்ற சோறு செரிக்க மறுபடியும் ‘சாட் பூட் த்ரீ...’ தடதடக்கும். பொழுதோடு ஆட்டத்தை முடித்து வீட்டுக்கு வந்தால், “போதுமா ஆட்டம்..? இன்னைக்கிப் போட்ட வெயிலெல்லாம் ஒங்க தலையிலதானோ’’ மரியாதை கொடுத்து விசாரணை கமிஷன் வைப்பார் அப்பா. “சரி, சரி… கைகால் மூஞ்சியக் கழுவிட்டுப் பொஸ்தகத்தை எடுத்து வைச்சுப் படி’’ என்று அப்பாவிடமிருந்து எங்களை லாவகமாகக் காப்பாற்றி விடுவார் அம்மா.

கைகால் மூஞ்சி கழுவி, பாதி துடைத்தும் துடைக்காமல் ஈரத்துடன் புத்தகப் பையைப் பிரித்தால் கண்களில் தூக்கம் கபடி விளையாடும். கொஞ்ச நேரத்துக்கு அதை விரட்டி யடிக்க வேண்டும் என்பதற்காகவே, அடுத்த தெருவுக்குக் கேட்பதுபோல், நன்கு தெரிந்த பாடத்தையே உரக்கப் படிப்பது நடக்கும். புரியாத பாடப் பகுதி வந்தால் இடையில் குரல் சன்னமாகிப் போகும். அதுவும் எட்டு மணிக்கு மேல் தாக்குப் பிடிக்காது.

உட்கார்ந்தபோது இருந்த வேகத்தைவிட இரட்டை வேகத்தில் புத்தகப் பையை மூட்டை கட்டி வைத்துவிட்டு, அடுப்படியில் போய் நிற்போம். அந்த நேரம் பார்த்து, அரைக்கால் டிரவுசரின் பின் பகுதியில் மரக் கிளை குத்தி, தபால் பெட்டி திறந்திருப்பது அம்மாவின் கண்ணில் பட்டுவிடும். “இந்த டவுசரையும் கிழிச்சாச்சா? நாளைக்கெல்லாம் மரத்துல ஏறுனீன்னு வெச்சுக்க, கால் ரெண்டையும் கெரண்டைக்கி (கணுக்கால்) கீழ வெட்டிருவேன்’’ என்பார் அம்மா.

மறுநாள் பொழுது விடியும். எங்கள் அப்பா எப்போது வெளியில் கிளம்புவார் என்று நண்பர்கள் காத்துக்கொண்டிருப்பார்கள். அவரது தலை தெருக் கோடியில் மறைந்ததும் அத்தனை பேரும் எங்கள் வீட்டு வாசலில் நிற்பார்கள். “இன்னைக்கி சந்தடோய்… நுங்கு எடுத்துட்டு வந்து நுங்கு வண்டி செய்வோம்டா’’ என்று நாராயணன் எடுத்துக் கொடுப்பான். அத்தனை பேரும், கற்பனை ஸ்டியரிங்கை கையால் திருப்பி கார் ஓட்டிக்கொண்டே சந்தைக்குப் பறப்போம்.

நுங்கு வண்டி ரேஸ்

சந்தையின் முகப்பில் நுங்குகளைக் குன்றுபோல் குவித்து வைத்திருப்பார்கள். அங்கே, யாராவது குடி நுங்கு (சுளைகளை எடுக்காமல் அப்படியே நோண்டிச் சாப்பிடுவது) வாங்கிக் குடித்தால் “இது எனக்குப்பு…’’ என்று சொல்லி அவர்கள் குடித்துவிட்டுப் போடும் நுங்குக் குடுவைக்கு ஆளாளுக்கு முன்பதிவு செய்துவிட்டுக் காத்திருப்போம். அத்தனை பேருக்கும் குடுவை கிடைத்ததும் அதை எடுத்துக்கொண்டுவந்து நுங்கு வண்டி செய்வோம்.

வண்டி செய்வதைவிட, அதை ஓட்டுவதற்குக் கவட்டைக் கம்பைத் தேடிப் பிடிப்பதுதான் கம்பசூத்திரமாய் இருக்கும். வண்டி ஓடும்போது ‘டப… டப…’ என சத்தம் வர வேண்டும் என்பதற்காக, சைக்கிள் டியூப்பைக் கத்தரித்து, நுங்கு குடுவையின் மீது ஆணி அடித்துப் பொருத்திவிடுவோம். அதன் பிறகு வண்டியை ஓட்டினால் சத்தம் ராயல் என்ஃபீல்டு அளவுக்குப் படபடக்கும். சீசனுக்கு மட்டும்தான் நுங்கு வண்டிகள். மற்ற நேரங்களில் ஓட்டுவதற்கு வசதியாக எல்லோர் வீட்டிலும் (சைக்கிள்) டயர் வண்டிகளை வைத்திருப்போம்.

அதிலும் ஒன்றிரண்டு பேர் சைக்கிள் ‘ரிம்’ வைத்திருப்பார்கள். அந்தக் காலத்தில் பள்ளிக்கூடத்துக்கு நாங்கள் காதறுந்த ஜவுளிக் கடை பையைத்தான் முக்காலி முடிச்சு போட்டுக்கொண்டு போவோம். பணக்கார வீட்டுப் பையன்கள் அலுமினியப் பெட்டிகளில் புத்தகங்களை அடுக்கிக்கொண்டு வருவார்கள். அன்றைய தேதிக்கு அந்தப் பெட்டி பத்திருபது ரூபாய்தான் இருக்கும்.

ஆனாலும், அன்றைக்கு எல்லோரும் அதை வாங்க முடியாத நிலையில்தான் இந்தியப் பொருளாதாரம் இருந்தது. அந்த அலுமினியப் பெட்டிகளுக்குள் வைத்தால் புத்தகங்கள் கிழியாமல், மூலை மடங்காமல் அப்படியே இருக்கும் என்பதால் எங்களுக்கு அந்தப் பெட்டியைக் கொண்டுவரும் பையன்களைப் பார்த்தால் பொறாமை பொங்கி வரும்.

‘ரிம்’ வண்டி மீதும் அப்படியொரு மோகம். நாங்கள் எல்லாம் டயர் வண்டியை அடித்து ஓட்டிக்கொண்டிருப்போம் ‘ரிம்’வண்டி வைத்திருப்பவர்கள், ‘ரிம்’மின் பள்ளத்தில் குச்சியை உரசி உரசி ஓடவிட்டுப் பந்தா காட்டுவார்கள். டயர் வண்டிகளை ஓட்டும்போது அது எசகுபிசகாய் ஓடி எதிரே வரும் வாகனங்களில் விழுந்து வாங்குபட்ட சம்பவங்களும் உண்டு.

அந்த நாட்களில் வீட்டுக்கு வீடு பிள்ளைகள் ஓட்டி விளையாட இரண்டு மூன்று சைக்கிள் டயர்கள் சர்வசாதாரணமாய்க் கிடக்கும். ஆனால், இன்றைக்கு அதே வீடுகளில் ஓட்ட ஆளில்லாமல் சைக்கிள்களே முடங்கிக் கிடக்கின்றன. இந்தியப் பொருளாதாரம் அந்த அளவுக்கு வளர்ந்துவிட்டது.

- குள.சண்முகசுந்தரம்
தொடர்புக்கு: shanmugasundaram.kl@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x