Published : 11 Jun 2016 10:50 AM
Last Updated : 11 Jun 2016 10:50 AM

ராம் பிரசாத் பிஸ்மில் 10

புரட்சி வீரர், இலக்கியவாதி

விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு நாட்டுக்காக உயிரை நீத்த வீரரும், சிறந்த படைப்பாளியுமான ராம் பிரசாத் பிஸ்மில் (Ram Prasad Bismil) பிறந்த தினம் இன்று (ஜூன் 11). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

l உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் (1897) பிறந்தார். தந்தை நகராட்சி ஊழியர். அவரிடம் இந்தியும், ஒரு மவுல்வியிடம் உருதும் கற்றார். உள்ளூர் பள்ளியில் ஆரம்பக் கல்வி தொடங்கியது. பிறகு ஓர் ஆங்கிலப் பள்ளியில் சேர்ந்து பயின்றார்.

l ஆரிய சமாஜம் அமைப்பில் இணைந்தார். சுவாமி தயானந்த சரஸ்வதி எழுதிய ‘சத்யார்த்த பிரகாஷ்’ என்ற நூலை வாசித்தது இவரது வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தாய்நாடு, அதன் விடுதலை பற்றிய எண்ணமே அவரிடம் எப்போதும் மிகுந்திருந்தது. தீவிர பிரம்மச்சரியத்தைக் கடைபிடித்தார்.

l ஷாஜஹான்பூர் சேவா சமிதியில் தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றினார். 19 வயதுமுதல் விடுதலை இயக்கத்தின் புரட்சிகரமான பாதையில் செல்லத் தொடங்கினார். அரசியல், மத விஷயங்களில் சுவாமி சோமதேவ்ஜியிடம் ஆலோசனை பெற்று செயல்பட்டார்.

l அஷ்ஃபாகுல்லா கான், சந்திரசேகர ஆசாத், பகவதி சரண், ராஜகுரு போன்ற புரட்சி வீரர்களுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். ‘மாத்ரிவேதி’ என்ற புரட்சி அமைப்பை உருவாக்கினார்.

l சிறு வயதுமுதல் கவிதை எழுதும் ஆற்றலும் பெற்றிருந்தார். ஏராளமான நூல்களை எழுதி, தானே வெளியிட்டார். அவற்றை விற்று கிடைக்கும் பணத்தை புரட்சி செயல்பாடுகளுக்கு ஆயுதங்கள் வாங்கப் பயன்படுத்தினார். புரட்சிக் கருத்துகள் கொண்ட இவரது நூல்களை பிரிட்டிஷ் அரசு தடை செய்தது.

l ‘இந்துஸ்தான் சோஷலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன்’ என்ற புரட்சி அமைப்பு தொடங்கப்பட்டது. அதன் சட்டதிட்டங்களை வரையறுப்பதில் முக்கியப் பங்காற்றினார். ‘என் நாட்டு மக்களுக்கு ஒரு செய்தி’ என்ற தலைப்பில் ஏராளமான துண்டுப் பிரசுரங்களை வெளியிட்டார்.

l அரவிந்தரின் ‘யோகிக் சாதனா’ நூலை மொழிபெயர்த்தது இவர்தான். பல வங்கமொழிப் படைப்புகளை இந்தியில் மொழிபெயர்த்தார். இந்தி, உருது மொழிகளில் ‘அஞாத்’, ‘ராம்’ என்ற புனைப்பெயர்களிலும் எழுதினார்.

l சகாக்களுடன் இணைந்து புரட்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டார். மணிப்பூர் சதித் திட்டம், காகோரி சதித் திட்டத்தில் முக்கியப் பங்காற்றினார். 1925-ல் காகோரி என்ற இடத்தில் ரயிலில் கொண்டு வரப்பட்ட பிரிட்டிஷாரின் பணத்தை கொள்ளை அடிக்க முயன்றனர். இதில், சந்திரசேகர் தவிர மற்ற அனைவரும் கைது செய்யப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்டது. கோரக்பூர் சிறையில் ராம் பிரசாத் பிஸ்மில் 1927 டிசம்பர் 19-ம் தேதி 30-வது வயதில் தூக்கிலிடப்பட்டார்.

l தேசபக்தியையும் புரட்சி உணர்வையும் தூண்டக்கூடிய வகையில் ‘சர்ஃபரோஷ் கீ தமன்னா’ என்ற கவிதை நூலை சிறைவாசத்தின்போது எழுதினார். தான் இறப்பதற்கு 3 நாட்களுக்கு முன் அவர் எழுதி முடித்த இந்நூல், இவரது மரணத்துக்குப் பிறகு வெளியிடப்பட்டது.

l ஷாஜஹான்பூர், கோரக்பூரில் அருங்காட்சியகம், நினைவகம் ஆகியவை உருவாக்கப்பட்டன. புரட்சி வீரர், தேசபக்தர், சிறந்த கவிஞர், மொழிபெயர்ப்பாளர், வரலாற்று அறிஞர், இலக்கியவாதி என்ற பன்முகப் பரிமாணம் கொண்ட இவரது நினைவாக பிறந்தநாள் நூற்றாண்டில் தபால்தலை வெளியிடப்பட்டது.

- ராஜலட்சுமி சிவலிங்கம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x