Last Updated : 12 Jan, 2017 11:11 AM

 

Published : 12 Jan 2017 11:11 AM
Last Updated : 12 Jan 2017 11:11 AM

என்னருமை தோழி..! -10: அந்த தற்கொலை காட்சி!

அந்த தற்கொலை காட்சி!

பொதுவாகவே அவமானம் ஏற்படும் சமயங்களில் பெண்கள் கண்ணீர் விட்டு மனதினுள் குமைவார்கள். தாங்களோ சபதமே போட்டு, பிரச்சினைக்குரிய நபர் யாராக இருந்தாலும்... அவருக்குப் பாடம் புகட்டாமல் விட்டதில்லை.

சிறுவயதில், பள்ளித் தோழியின் பிறந்தநாள் விழாவில் சொல்லடிபட்டு, அம்மாவின் மடியில் ஆறுதல் தேடியபோது, மனதுக்குள் மூன்று வைராக்கியம் ஏற்றதாகப் பிறகு சொல்லி இருக்கிறீர்கள். ‘யாருக்கும் கூழை கும்பிடு போட மாட்டேன். யாரும் என்னை கேவலப்படுத்த இடம் தர மாட்டேன். யாருக்கும் பயந்து என் தன்மானத்தை விட்டுத்தர மாட்டேன்’ இவையே அந்த மூன்று சபதங்கள்!

ஆனால், அந்த சபதத்துக்கு 1966-ம் வருடம் ஒரு பெருத்த சவால் வந்தது. எம்.ஜி.ஆருடன் கதாநாயகியாகப் பல வெற்றிப் படங்களை தந்து கொண்டிருந்த நேரம்... ஏவிஎம் நிறுவனம் புதிய படம் ஒன்றில் தங்களை ஒப்பந்தம் செய்ய அணுகியது. படத்தில் நீங்கள் கதாநாயகி என்று மட்டும்தான் தங்களிடம் முதலில் கூறப்பட்டது. படத்தின் இயக்குநர் அப்போது பெரிய ஜாம்பவான் இல்லையென்றாலும், அதற்குரிய தகுதிகள் அவருக்குத் துளிர் விட்டுக்கொண்டிருந்தன.

அவர் நல்லவர்தான்... திறமை யானவர்தான்... பின்னாளில் பல சாதனை யாளர்களை அறிமுகப்படுத்தியவர்தான். ஆனால், ‘தனது படைப்பாற்றலுக்கு மட்டுமே அந்த இயக்குநர் முக்கியத்துவம் கொடுப்பவர். கலைஞர்களின் உணர்வுகள் அவருக்கு இரண்டாம் பட்சம்தான்’ என்று சிலர் குற்றச்சாட்டு கூறுவதுண்டு.

தனது மகள் பெரிய நிறுவனத்தின் கதாநாயகி என்னும் மலைப்பில் கதையைக் கேட்காமல் சம்மதித்து விட்டார் உங்கள் தாய் சந்தியா. தாங்களும் அந்த இயக்குநரின் திறமைகளை பற்றி அறிந்திருந்ததால், கொடுக்கப்பட்ட பணியை சீரிய முறையில் செய்து வந்தீர்கள். இருப்பினும் மனதில் சிறு நெருடல்.

எம்.ஜி.ஆர். படங்களில் ஆட்டம் பாட்டம், கண்ணீர், காதல், கிண்டல், கேலி, என்று நவரசங்களை கொட்டித் தீர்த்த நிலையில்... படம் ‘மேஜராக’ இருந்தாலும்...நீங்கள் மைனர் முக்கியத்துவத்துடன் மட்டுமே நடத்தப்படுவதாக உணர்ந்தீர்கள்!

ஆனால், இதுகுறித்து இயக்குநரிடம் ஒன்றும் கேட்கவில்லை. அவரும் ‘இதுதான் கதை’ என்று உங்களிடம் சொல்லவில்லை. மொத்தத்தில் எம்.ஜி.ஆர். படங்களில் உங்களுக்கு இருந்த முக்கியத்துவம் இப்படத்தில் இல்லாத ஒரு நிலை. இதனால் உங்கள் ‘இமேஜ்’ பாதிக்கப்படுமோ என்கிற அச்சம் உங்களுக்கு. இருந்தாலும் ‘ஒருநாள் யாரோ...என்ன பாடல் சொல்லித் தந்தாரோ...’ என்று இயக்குநர் சொன்னபடி சோக கீதம் பாடி நடிக்கத்தான் செய்தீர்கள்!

திடீரென்று ஒருநாள், ‘தற்கொலை காட்சியில் நடிக்கத் தயாராகுங்கள்’ என்று உங்களிடம் கூறப்பட்டது. திடுக்கிட்டுப் போனீர்கள். ‘‘என்ன சொல்கிறீர்கள்? இதுவரை பெரிதாக காட்சிகள் ஒன்றும் எனக்குத் தரப்படவில்லையே? அதற்குள் கதாநாயகி தற்கொலை செய்து கொள்கிறாளா...?’’ என்று அயர்ந்துபோய் கேட்டீர்கள்.

‘‘கதைப்படி நீங்கள் தற்கொலை செய்து கொள்ள வேண்டும். storyline is director's prerogative...’’ என்று உங்களுக்குக் கூறப்பட, தங்களின் தன்மானத்திற்கு அந்த இயக்குநரால் ஒரு சவால் விடுக்கப்பட்டதாக நினைத்தீர்கள். உங்கள் கண்களில் உணர்வுகள் உறைந்து போயின.

வறண்ட புன்முறுவலுடன் இயக்குநரை நோக்கி ஆங்கிலத்தில் பதில் தந்தீர்கள்...

‘‘Oh! Is that so? Well...go ahead and kill me soon! So...when I am dead, there won't be any need for you in future to come to me offering roles. Thank You!’’

...என்றபடி தங்கள் காரை நோக்கி நடந்து போனீர்கள். ஒப்புக்கொண்டபடி, அந்த தற்கொலை காட்சியில் நடித்தும் தந்தீர்கள். அதன்பின், அந்த இயக்குநரின் படங்களில் நீங்கள் நடிக்கவே இல்லை. உங்கள் தன்மானத்தை ஒருபோதும் விட்டுக் கொடுக்கவும் இல்லை.

அதேசமயம், அந்த இயக்குநர் உங்களை அவமானப்படுத்தி விட்டதாக நீங்கள் ஒருபோதும் பத்திரிகைகளுக்கு பரபரப்பு பேட்டி தரவில்லை. தமிழ் திரையுலகின் ‘நம்பர் ஒன்’ நாயகியாக கொடி கட்டிப் பறந்த நீங்கள் பேட்டி கொடுத்தால் அது தமிழகமெங்கும் எதிரொலிக்கும். என்றாலும் யாரையும் குறைகூறாத உங்கள் பண்பினால் கண்ணியம் காத்தீர்கள்.

ஆனால், இந்த கசப்பான அனுபவத்துக்குப் பின் உங்கள் வைராக்கியம் இன்னும் உறுதிப்பட்டது. உங்களுக்கு மட்டுமல்ல... உங்களுக்கான கதாபாத்திரத்துக்கும் மரியாதை கொடுக்காவிட்டால்... அந்தப் பட வாய்ப்புகளை ஏற்கப் போவதில்லை என்று சபதம் செய்தீர்கள்.

என்னருமை தோழி...!

இதே படத்தில் உங்களுக்கு அண்ணனாக நடித்த நாகேஷுக்கும் ஒரு வருத்தமான அனுபவம் ஏற்பட்டது. ‘கல்யாண சாப்பாடு போடவா...’ பாட்டின்போது அவரது வாயசைப்பு சற்று மிகைப்பட்டு இருந்ததாக நினைத்த தயாரிப்பு தரப்பினர் அவரை அழைத்து கடிந்து கொண்டனர். மீண்டும் அக்காட்சியில் நடித்துக் கொடுக்கும்படி கூற, நாகேஷ் வருத்தத்துடன் செட்டில் அமர்ந்திருந்தார். நடந்ததை அறிந்த நீங்கள்தான் அவருக்கு ஆறுதல் சொன்னீர்கள்.

‘‘எனக்கும் இப்படம் ஏமாற்றம்தான், நாகேஷ்...! ஆனால், தொழில் சுத்தம் வேண்டும். அவர்களது எதிர்பார்ப்புகளை முடித்துத் தந்துவிட்டு, நாம் விலகிவிட வேண்டும். பிரச்சினை செய்து போராடுவதால், நம் பெயர் கெட்டுப் போகும்’’ என்று அவரை மீண்டும் நடித்து தரும்படி கூறினீர்கள்.

பின்னர் ஒரு சமயம் - தமிழக முதல்வராக இருந்த தங்களிடம் - அந்த இயக்குநர் appointment கேட்டபோது, ‘‘It is Chief Minister's prerogative to give appointement...’’ என்று சொல்லாமல், அவரை சந்திக்க அனுமதி தந்து... உரிய மரியாதை அளித்து, நன்றாகவே அவரிடம் பேசி அனுப்பி, உங்கள் பெருந்தன்மையை நிரூபித்தீர்கள்.

ஆனால், கூடிய மட்டும் அந்தப் படம் குறித்த நினைவுகளை உங்கள் மனதிலிருந்தே நீக்கி விட்டதாக உங்களுக்கு நெருக்கமானவர்கள் பிறகு, உங்கள் மூலம் அறிந்து கொண்டார்கள்.

இதுபோன்ற ஒரு கசப்பான அனுபவத் திலிருந்து நீங்கள் மீள்வதற்குள், உங்களை பேரதிர்ச்சியில் ஆழ்த்திய அந்த செய்தி வந்தடைந்தது. தங்களை மட்டுமல்ல, தமிழகத்தையே நிலைகுலைய வைத்து, திரையுலகைத் தடுமாறவும் வைத்தது அந்த செய்தி....!

- தொடர்வேன்...
தொடர்புக்கு: narasimhan.ta@thehindu.co.in

படம் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x