பஸ்டர் கீட்டன் 10

பஸ்டர் கீட்டன் 10
Updated on
1 min read

மவுனத் திரைப்பட யுகத்தின் ஜாம்பவான் பஸ்டர் கீட்டனின் பிறந்த நாள் இன்று. இந்த நாளில் அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

• சொந்தப் பெயர் ஜோசப் பிராங்க் கீட்டன். பெற்றோர் ஜோ கீட்டன் - மைரா கீட்டன் இருவரும் நாடக நடிகர்கள். மூன்று வயதில் படிக்கட்டில் இருந்து தடுக்கி விழுந்த கீட்டனுக்கு அதிர்ஷ்டவசமாக அடிபடவில்லை. ‘பஸ்டர்’ (விளையாட்டாக குழந்தைகளைத் திட்டும் சொல்) என்று கூறி அவனைத் தூக்கினார் குடும்ப நண்பர். அது பெயருடன் ஒட்டிக்கொண்டது.

• பள்ளிக்கு போகாமல் அப்பா, அம்மாவுடன் நாடகங்களில் நடித்தார். அம்மா சாக்ஸபோன் வாசிப்பார். அப்பா கூட்டத்தில் இவரைத் தூக்கிப் போட்டுப் பிடித்து சாகசம் செய்வார். எவ்வளவு உயரத்தில், எவ்வளவு வேகமாகத் தூக்கிப் போட்டாலும் அடிபடாமல் லாவகமாக கீழே விழுவார் கீட்டன்.

• அந்த நிகழ்ச்சிகளுக்கு பெருத்த வரவேற்பு இருந்தாலும், அப்பா அடிக்கடி எக்குதப்பாக தூக்கி வீசியதால், அதை நிறுத்தவேண்டியதாயிற்று. அப்போது பரவலாகத் தொடங் கிய மவுனப் படத்தில் தலைகாட்ட ஆரம்பித்தார் கீட்டன்.

• உணர்வுகளைக் காட்டாமல் எப்படி அடித்தாலும், அடிபட்டாலும் கல் மாதிரி இருந்த கீட்டனின் நகைச்சுவைகள் ரசிகர்களைக் கட்டிப்போட்டன. அவரது படத்துக்கு அலைகடலெனக் கூட்டம் கூடியது.

• வசனங்களுடன் கூடிய படங்கள் வரத் தொடங்கியபோதும், மவுனப் படங்களை விட்டு விலக மறுத்து அதிலேயே பல படங்கள் எடுத்தார் கீட்டன். பிரம்மாண்டக் காட்சிகளை திரையில் கொண்டுவந்து அசத்தினார்.

• பணத் தட்டுப்பாட்டால் எம்.ஜி.எம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தார். போகப்போக கட்டுப்பாடுகள் அதிகரித்தன. குடும்பப் பிரச்சினைகளும் சேர்ந்துகொண்ட தில் கம்பெனியில் இவர் தொடர முடியவில்லை.

• பல ஆயிரம் டாலர் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தவர், ஒருகட்டத்தில் சுத்தமாக வாய்ப்பு இழந்தார். வாரத்துக்கு நூறு டாலர் வாங்கிக்கொண்டு படத்தில் நடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டது. சாப்ளினுடன் ‘லைம்லைட்’ படத்தில் தோன்றினார்.

• அப்பா, மகன் இருவரும் குடிநோயாளிகளாகினர். கீட்டனின் பின்னடைவுக்கு காரணமே அவரது குடிநோய்தான். சில காலம் குடிநோய் முற்றி, மனநோயாளியானார். மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின்பு மீட்கப்பட்டார்.

• பிரிட்டிஷ் தொலைக்காட்சியில் நாடகங்களில் தோன்றியதால் மீண்டும் புகழ் கூடியது. அவர் நடித்து தோல்வியடைந்த படங்கள் மீண்டும் திரையிடப்பட்டு வசூலை அள்ளின. அவரைப் பற்றிய படத்துக்கு 50 ஆயிரம் டாலர் சம்பளம் பேசினார்கள். கவுரவ ஆஸ்கார் வழங்கியும் சிறப்பிக்கப்பட்டார்.

• இறுதிப் படத்தை நுரையீரல் புற்றுநோயோடுதான் முடித்துக் கொடுத்தார். உணர்ச்சிகளைக் காட்டாமல் நடிக்கும் முகபாவத்துக்கும், டைமிங் காமெடிக்கும் பிதாமகர் என்று உலகம் முழுவதும் பல கோடி ரசிகர்களால் இப்போதும் கொண்டாடப்படுகிறார் கீட்டன்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in