

தமிழ்ப் படைப்பாளி தொ.மு. சிதம்பர ரகுநாதனின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து.
• ‘தினமணி’யில் உதவி ஆசிரியர், வை.கோவிந்தன் நடத்திய ‘சக்தி’ இதழின் ஆசிரியர், ‘சோவியத் நாடு’ இதழின் ஆசிரியர் போன்ற பொறுப்புகளில் செயல்பட்டார்.
• ‘சாந்தி’ என்னும் முற்போக்கு இலக்கிய மாத இதழைத் தொடங்கி நடத்தியவர், அதன் வாயிலாக டேனியல் செல்வராஜ், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், கி.ராஜநாராயணன் உள்ளிட்ட அன்றைய இளம் எழுத்தாளர்களை தமிழ் இலக்கிய உலகுக்கு அறிமும் செய்தார்.
• தமிழின் முன்னோடி எழுத்தாளரான இவரது முதல் சிறுகதை 1941-ல் ‘பிரசண்ட விகடன்’ இதழில் வெளிந்தது. முதல் புதினம் ‘புயல்’ 1945-ல் வெளியானது. தமிழக கைத்தறி நெசவாளர்களின் துயர வாழ்வை உருக்கமாக விவரிக்கும் ‘பஞ்சும் பசியும்’ இவரது முக்கியமான நாவல். இது ‘செக்’ மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு ஏராளமான பிரதிகள் விற்றன. பண்டைய இலக்கியம் குறித்த இவரது படைப்பில் குறிப்பிடத்தக்க ஆய்வு நூல் ‘இளங்கோ அடிகள் யார்?’ என்பதாகும்.
• இடதுசாரிக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்ட இவர், சோவியத் நாடு பதிப்பகம் மூலம் ரஷ்யப் படைப்புகளின் தமிழ் மொழிபெயர்ப்புகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளார். மாக்சிம் கார்க்கியின் ‘தாய்’, லெனின் கவிதாஞ்சலி ஆகியன இவரது முக்கியமான மொழிபெயர்ப்புகள்.
• புதுமைப்பித்தனின் நெருங்கிய நண்பர். அவரது மறைவுக்குப் பிறகு, அவரது படைப்புகளை சேகரித்து வெளியிட்டு மகத்தான சேவை புரிந்துள்ளார். புதுமைப்பித்தனின் வாழ்க்கை வரலாற்றையும் எழுதியுள்ளார். இந்த படைப்பு அவரைப் பற்றிய முக்கியப் பதிவாகப் போற்றப்படுகிறது.
• பண்டைய இலக்கியம், நவீன இலக்கியம் ஆகிய இரண்டு தளங்களிலும் ஆழ்ந்த ஈடுபாட்டுடனும் புலமையுடனும் விளங்கியவர்.
• ‘பாரதியும் ஷெல்லியும்’, ‘கங்கையும் காவிரியும்’ ஆகிய படைப்புகள் மூலம் ஒப்பிலக்கியத் தடத்தை தமிழில் விரிவுபடுத்தினார்.
• ‘பாரதி காலமும் கருத்தும்’ என்ற இவரது இலக்கிய விமர்சன நூல் சாகித்ய அகாடமி விருதை வென்றது. சோவியத் லேண்ட் நேரு விருது, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் ‘தமிழ் அன்னை’ பரிசு, பாரதி விருது உள்ளிட்டவற்றையும் பெற்றுள்ளார்.
• 4 சிறுகதைத் தொகுப்புகள், 3 கவிதைத் தொகுப்புகள், 3 நாவல்கள், 2 நாடகங்கள் உள்ளிட்ட படைப்புகள் மூலம் தமிழ் இலக்கியத்தில் தனி முத்திரை பதித்த தொ.மு.சிதம்பர ரகுநாதன் 2001-ல் பாளையங்கோட்டையில் காலமானார்.