Last Updated : 18 Oct, 2013 10:54 PM

 

Published : 18 Oct 2013 10:54 PM
Last Updated : 18 Oct 2013 10:54 PM

ஹாஷ்டேக் எனும் ஆன்லைன் ஆயுதம்!

தனி மரம் தோப்பாகாது என்பது பழமொழி. தனி ட்வீட் அதிக தாக்கத்தை ஏற்படுத்தாது என்பதை ட்விட்டர் மொழியாக வைத்து கொள்ளலாம். அதே போல கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதையும் கூடி ட்வீட் செய்தால் உண்டு நன்மை என புது மொழியாக்கி கொள்ளலாம். இப்படி கூடி ட்வீட் செய்து பல அற்புதங்கள் நிகழ்ந்திருக்கின்றன. குறும்பதிவு சேவையான ட்விட்டரை தீவிரமாக பயன்படுத்தும் எவரும் இந்த கருத்துக்களை ஏற்றுக்கொள்வார்கள். அந்த அளவுக்கு ட்விட்டர் உலகில் 'ஹாஷ்டேக்' குறியீடு பயனுள்ளதாக விளங்குகின்றன.

குறிப்பிட்ட தலைப்பிலான குறும்பதிவுகளை அதாவது ட்வீட்களை ஒன்றாக பார்க்க உதவும் அடையாளமாக ஹாஷ்டேக் அமைந்துள்ளன. ட்விட்டரில் ஹாஷ்டேகுகளை எளிதாக கண்டு கொள்ளலாம். எண்களை குறிக்க பயன்படுத்தப்படும் # எனும் குறியீட்டுடன் இவை கண்சிமிட்டும். உதாரணம் # ஹாஷ்டேக்!

ஷாஷ்டேகுகள் பொதுவாக ஒரு சொல்லாகவோ அல்லது இரண்டு, மூன்று சொற்களைக் கொண்டதாகவோ இருக்கும். இதற்கு உதாரணம் #prayforpeace சொல்லோ சொற்றொடரோ அவை ஒரு மைய கருத்தை சுட்டிக்காட்டுவதாக அமைந்திருக்கும்.

ஒரு விதத்தில் ட்விட்டர் சேவையை பயனுள்ளதாக ஆக்குவதே ஹாஷ்டேக் தான்.

காலையில் சாப்பிட்ட சிற்றுண்டி போன்ற ஒன்றுக்கும் உதவாத தகவல்களை பகிர்ந்து கொள்வதற்காக அறிமுகம் செய்யப்பட்ட ட்விட்டர் , அதன் பிறகு இணைய உலகின் இன்றியமையா சேவையாக உருவெடுத்து வியக்க வைத்து வருகிறது. செய்தி வெளியீட்டு சாதன‌மாக, உரையாடலுக்கான வழியாக, உடனடித் தகவல் பரிமாற்ற வாகனமாக என பலவிதங்களில் ட்விட்டர் அவதாரம் எடுத்திருக்கிறது.

தினுமும் 50 கோடி குறும்பதிவுகள் ட்விட்டரில் வெளியாகின்றன. இது கடந்த ஆண்டு அக்டோபர் மாத புள்ளிவிவரம். இப்போது இன்னும் அதிகரித்திருக்கும். 2012 ஜூன் மாதம் வெளியிடப்பட்ட புள்ளி விவரத்தின் படி தினமும் 40 கோடிகள் குறும்பதிவுகள் வெளியாகி கொண்டிருந்தன என்றால் தற்போது எந்த அளவுக்கு வளர்ந்திருக்கக்கூடும் என்று யூகித்துக்கொள்ளலாம். ட்விட்டரில் 50 கோடி பயனாளிகள் இருக்கின்றனர். இவர்களில் 20 கோடி பேர் அடிக்கடி குறும்பதிவிடும் தீவிர பயனாளிகள்.

இது போன்ற எண்ணிக்கைகள் ட்விட்டரின் செல்வாக்கை மட்டும் உணர்த்தவில்லை; ட்விட்டர் எத்தனை குழப்பமானதாக இருக்கும் என்பதையும் தான் உணர்த்துகின்றன. ஆம், தினமும் கோடிக்கணக்கில் குறும்பதிவுகள் வெளியாகி ட்விட்டர் கடலில் கலந்து கொண்டிருக்கும் நிலையில் நமக்கு தேவையான குறும்பதிவை அடையாளம் காண்பது எப்படி? ஒவ்வொருவரும் தங்களுக்கு ஆர்வம் உள்ள நபர்களின் ட்விட்டர் கணக்குகளை பின் தொடரலாம் தான். ஆனால் இது சின்ன வட்டம். ட்விட்டர் பெருவெளியில் வெளியாகிக் கொண்டிருக்கும் எண்ணற்ற குறும்பதிவுகளில் முக்கிய குறும்பதிவுகளை அடையாளம் காண்பது எப்படி?

இந்த குழப்பத்தை தான் ஹாஷ்டேக் தீர்த்து வைக்கின்றது. குறும்பதிவுகளை வெளியிடும்போது அவற்றின் நோக்கம் அல்லது மையக்கருத்தை குறிக்கும் பதத்தை ஹாஷ்டேகாக அதற்கு முன்னர் சேர்த்து குறிப்பிடும் போது, மற்றவர்களும் அந்த பதத்தை தங்கள் குறும்பதிவுகளில் சேர்த்துக் கொண்டால், அந்தக் குறும்பதிவுகள் அனைத்தும் அவற்றுக்காக உருவாக்கப்பட்ட ஹாஷ்டேகால் ஒன்றிணைக்கப்பட்டு விடும். அதன் பிறகு அந்த தலைப்பிலான குறும்பதிவுகள் அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்கலாம். அது மட்டும் அல்ல, இவை மேலெழும் தலைப்புகளாக (டிரெண்டிங் டாபிக்ஸ்) ட்விட்டரின் அதிகாரபூர்வ தளத்திலும் அடையாளம் காட்டப்படும். இந்த தலைப்புகளின் பட்டியலை பார்த்தாலே குறிப்பிட்ட நேரத்தில் ட்விட்டர் வெளியில் எந்த தலைப்பு அதிக விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிந்து கொள்ளலாம்.

ஆக, ட்விட்டர் வெளியில் சிதறிப்போகும் குறும்பதிவுகளில் பொதுத்தன்மை கொண்டவற்றை ஒன்றாக சேர்த்து, கொத்தாக முன்வைக்கின்றன ஹாஷ்டேகுகள். ட்விட்டர் இறைச்சலுக்கு மத்தியில் தனித்து எழும் குரலைப் புரிந்து கொள்ள உதவும் ஹாஷ்டேக் பயன்படும் விதம் ட்விட்டருக்கே புதிய அர்த்தத்தை கொடுத்துள்ளது.

ஹாஷ்டேகை பலவிதங்களில் பயன்படுத்தலாம். ஆன்லைனில் பேசப்படும் தலைப்புகளை அடையாளம் காண உதவும் ஹாஷ்டேகுகள் ஆன்லைனில் உரையாடலை உருவாக்கவும் கைகொடுக்கின்றன.அதாவது ஹாஷ்டேக் மூலமே குறிப்பிட்ட தலைப்பில் விவாதத்தை உருவாக்கலாம். இந்த பண்பே ஹாஷ்டேகை ஆன்லைன் ஆயுதமாக்கியிருக்கிறது.எந்த ஒரு நிகழ்வு குறித்து ஆதரவு தேவை என்று ட்விட்டர் பயனாளிகள் கருதுகின்றனரோ, அதற்கான ஹாஷ்டேகை உருவாக்கி ஒரு குறும்பதிவு மூலம் ஆரம்பித்து வைத்தால் போதும். மற்ற ட்விட்டர் பயனாளிகளும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து குறும்பதிவிட்டு அதற்கான ஹாஷ்டேகையும் குறிப்பிடத் துவங்கினால் ட்விட்டர் வெளியில் அந்த தலைப்பு பற்றிக்கொள்ளும். அதன் பிறகு அந்த விவாதத்தை யாராலும் அலட்சியப்படுத்த முடியாது.

எகிப்து நாட்டில் சமூக ஊடகம் மூலமான புரட்சி வெடித்த போது அதன் மையமாக இருந்தவை ஹாஷ்டேகுகள் தான். எகிப்தில் மாற்றம் வேண்டி தாஹீர் சதுக்கத்தில் 2011 ஜனவரி 25 ம் தேதி மக்கள் திரண்டதை அடுத்து, இந்த எழுச்சி குறித்து அறிவிக்கும் குறும்பதிவுகள் #ஜன்25 எனும் பதத்தோடு வெளியாகி ட்விட்டரில் முன்னிலை பெற்றன. #எகிப்து போன்ற ஹாஷ்டேகுகளும் அந்நாட்டின் கொந்தளிப்பை உலகிற்கு உணர்த்தின.

இதே போலவே தமிழக மீனவர்கள் மீதான இலங்கை கடற்படைத் தாக்குதல் அதிகரித்த போதும் ட்விட்டரில் #TNfishermen மற்றும் #SaveTnFishermen எனும் ஹாஷ்டேகுகளுடன் குறும்பதிவுகள் பகிரப்பட்டு மக்கள் மன‌நிலை ட்விட்டரில் எதிரொலித்தது. இந்த குறும்பதிவுகள் ஒரு இயக்கமாகவே உருவாகி மீனவர்கள் பிரச்சினையை மையப்படுத்தின.

தில்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி கொடுர வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்ட போது தேசத்தின் கொந்தளிப்பு ட்விட்டரில் #தில்லிகேங்ரேப் எனும் தலைப்பில் வெளிப்பட்டது.

போராட்ட களத்தில் மட்டும் அல்லாமல் அரசியல் களத்திலும் ஹாஷ்டேக் ஒரு பிரச்சார கருவியாக பயன்படுத்தப்படுகிறது. பா.ஜ.க சார்பில் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்வர் நரேந்திர மோடி முன்னிலை பெற்றதில் ட்விட்டருக்கு முக்கிய பங்குண்டு. மோடியின் ஆதரவாளர்கள் ட்விட்டரில் அவர் சார்பாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டனர்.அவர்கள் அப்போது கையில் எடுத்துக்கொண்டதும் பொருத்தமான ஹாஷ்டேகுகள் தான். 2013 ஏப்ரல் மாதம் மோடி தில்லியில் ஃபிக்கி பெண்கள் மாநாட்டில் உரையாடிய போது அவர் ஏற்படுத்திய தாக்கத்தை குறிக்கும் முயற்சியாக #மோடிஸ்டிராம்ஸ்ஃபிக்கி எனும் ஹாஷ்டேகுடன் குறும்பதிவுகள் வெளியாயின.

ஆனால் காங்கிரஸ் தரப்பில் மோடியை விமர்சிக்கும் வகையில் #ஃபெகு எனும் ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு பா.ஜ.க முயற்சிக்கு பதிலடியாக அமைந்தது. இதே மருந்தை பா.ஜ.க காங்கிரஸ் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி சி.ஐ.ஐ மாநாட்டில் உரையாற்றிய போது அவரை விமர்சிக்கும் வகையில் #பப்பு எனும் ஹாஷ்டேகுடன் குறும்பதிவுகளை வெளியிட்டன.

திரைப்படங்கள் வெளியாகும் போதும் ஹாஷ்டேக் வாயிலாக ரசிகர்கள் வரிந்து கட்டிக்கொண்டு கருத்துக்களை பகிர்ந்து கொள்வதுண்டு. ஆகஸ்டு மாதம் ஷாருக்கானின் 'சென்னை எக்ஸ்பிரஸ்' படம் வெளியானது. ட்விட்டரில் இந்த படம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் அதே நாளில் வெளியாக இருந்த நடிகர் விஜயின் 'தலைவா' படம் வெளியாகாமல் தாமதமானது. விஜய் ரசிகர்கள் இது பற்றி #Thalaivaa எனும் ஹாஷ்டேக் கீழ் ஒன்று சேர்ந்து கருத்துக்களை வெளியிடத் துவங்க ஷாருக்கின் 'சென்னை எக்ஸ்பிரஸ்' ட்விட்டரில் பின்தங்கிப்போனது.

சமீபத்தில் ரஜினிகாந்தின் 'கோச்சடையான்' முன்னோட்டம் வெளியான போது #Makewayforrajinisir எனும் ஹாஷ்டேக் முன்னிலை பெற்று அவரது செல்வாக்கை பறைசாற்றியது.

இணையத்தில் துடிப்புடன் இயங்கும் அஜித் ரசிகர்கள் யாருமே எதிர்பாராத நேரத்தில் #Arrambam, #Ajith என 'தல' தொடர்புடைய ஹேஷ்டேக்குகளை தேச அளவில் டிரெண்டில் கொண்டுவந்துவிடுவதும் சமீபகாலமாக நடக்கிறது.

சச்சினின் நூறாவது சதம், ஓய்வு அறிவிப்பு, ஒலிம்பிக்ஸில் உசேன் போல்ட்டின் சாதனை போன்ற சர்வதேச நிகழ்வுகளின் போதும் இவற்றைக் கொண்டாடும் ஹாஷ்டேகுகள் உருவாக்கப்பட்டுள்ளன. வர்த்தக பிராண்டுகளும் விளம்பர நோக்கில் ஹாஷ்டேகுகளை உருவாக்குகின்றன. நுகர்வோர் நினைத்தாலும் அவற்றை ஹாஷ்டேக் வாயிலாக தட்டிக்கேட்கலாம்.

ஆக, ஹாஷ்டேக் என்பது இணையத்தின் புதிய குறியீடாக உருவெடுத்துள்ளது.

சைபர்சிம்மன், கட்டுரையாளர் - தொடர்புக்கு enarasimhan@gmail.com

கட்டுரையாளரின் வலைப்பதிவுத் தளம் >http://cybersimman.wordpress.com

*****

| தி இந்து வலைத்தளத்தின் 'வலைஞர் பக்கம்' பகுதிக்காக கட்டுரைகளை அனுப்ப விரும்புவோர் webadmin@kslmedia.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு படைப்புகளை அனுப்பலாம். உங்களின் முழுப் பெயர், தொடர்பு எண், வலைப்பதிவுத் தள முகவரி அவசியம். ஏற்கெனவே வெளியிடப்படாத கட்டுரைகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் |

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x