

இலங்கை தமிழ் அறிஞர்
இலங்கை தமிழ் அறிஞரும், தமிழ் ஆசிரியருமான சி.கணேசய்யர் (C.Ganesha Iyer) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 1). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து: இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதி யில் புன்னாலைக்கட்டுவன் என்ற கிராமத்தில் (1878) பிறந்தவர். குடும்பத்தில் பலரும் கற்றறிந்தவர்கள், ஆசிரியர்களாக இருந்தனர். தந்தை சொந்த செலவில் நடத்திவந்த சைவப் பள்ளிக்கூடத்தில் 8-ம் வகுப்பு வரை கல்வி பயின்றார்.
* வீட்டிலும் அப்பாவிடம் தனிப்பட்ட முறை யில் பாடம் கற்றார். சிறுவயதிலேயே இலக்கணம், இலக்கியம், சரித்திரம், சமயம், கணிதம் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றார். யாழ்ப்பாணம் வித்வத்சிரோமணி ந.ச.பொன்னம்பலப் பிள்ளையின் திண்ணைப் பள்ளியில் சேர்ந்து இலக்கணத்தில் உயர்கல்வி கற்றார்.
* சுன்னாகம் அ.குமாரசுவாமிப் புலவரிடம் இலக்கணம், சமஸ்கிருதம் கற்றார். இலக்கணத்தில் நல்ல புலமை பெற்றிருந்தார். ஆசிரியர் பயிற்சிக்குப் பிறகு, பல பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். ஏராளமான கட்டுரைகள், உரைகள் எழுதினார். சதாசிவ ஐயர் தொடங்கிய சுன்னாகம் பராசீன பாடசாலையில் தலைமை ஆசிரியராக 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினார்.
* மாணவர்கள் விரும்பும் ஆசிரியராகப் புகழ் பெற்றார். கடினமான இலக்கண, இலக்கியங்களை மாணவர்களுக்கு எளிமையாக கற்பிக்கும் வகையில் பாடக்குறிப்புகளை எழுதினார். இவை பின்னர் கட்டுரைகள், நூல்களாக வெளிவந்தன.
* வண்ணார்பண்ணை விவேகானந்தா வித்யாசாலை, நாவலர் காவியப் பாடசாலையிலும், புன்னாலைக்கட்டுவன், குரும்பசிட்டி, வயாவிளான் உள்ளிட்ட ஊர்களிலும் ஆசிரியராகப் பணி யாற்றினார். எழுத்தாற்றல் மிக்க இவர், மதுரை தமிழ்ச்சங்க வெளியீடாக வெளிவந்த செந்தமிழ் இதழ்களில் அரிய ஆராய்ச்சிக் கட்டுரைகளை எழுதி வந்தார்.
* பல இலக்கிய ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் எழுதினார். மேலும் ‘ஈழகேசரி’ உட்பட அனைத்து இலக்கிய இதழ்களிலும் இவரது கட்டுரைகள் வெளிவந்தன. சைவ சித்தாந்தக் கட்டுரைகளும் எழுதினார். அந்தக் காலகட்டத்தில் பத்திரிகைகள், இதழ்கள் வாயிலாக இலங்கை மற்றும் தமிழக தமிழ் அறிஞர்கள் இடையே பல விவாதங்கள் நடந்துவந்தன. தமிழறிஞர் அரசன் சண்முகனாருடனான இவரது விவாதம் மிகவும் பிரபலமடைந்தது.
* கவியின்பம், ஒரு செய்யுட் பொருளாராய்ச்சி, நச்சினார்க்கினியார், உரைநயம், ராமாயண செய்யுள், அளபெடை, போலி எழுத்து, தொல்காப்பியச் சூத்திரப் பொருளாராய்ச்சி உள்ளிட்ட ஏராளமான தலைப்புகளில் பல கட்டுரைகளை எழுதினார். மரபுக்கவிபாடும் வல்லமை பெற்றிருந்தார். தொல்காப்பிய நூல் உரை விளக்கக் குறிப்பு எழுதியதன் மூலம் மிகவும் பிரபலமானார்.
* தொல்காப்பிய உரைகளின் ஏட்டுப் பிரதிகளைத் தேடி எடுத்து, அவற்றை ஒப்புநோக்கி பல ஆண்டுகாலம் பாடுபட்டு குறிப்புகள் எழுதி வந்தார். தான் கண்ட பிழைத் திருத்தங்களை அவ்வப்போது பத்திரிகைகளில் வெளிப்படுத்தி அறிஞர்களின் ஒப்புதலையும் பெற்றார். விளங்காத பகுதிகளுக்கு குறிப்புகள் எழுதி நூலுரைகளைத் திருத்தமாக பதிப்பித்து வெளியிட்டார். மருதடி விநாயகர் பிரபந்தம், மருதடி விநாயகர் இருபா இருபது, திருச் செல்வச்சந்நிதி நான்மணிமாலை, திணை மயக்கம், திருக்குறள் பரிமேலழகர் உரைவிளக்கம், குசேல சரித்திரம், ஈழநாட்டுத் தமிழ்ப் புலவர் சரித்திரம் உள்ளிட்ட இவரது படைப்புகள் குறிப்பிடத்தக்கவை.
* எழுத்து, ஆசிரியப் பணியில் இருந்து ஓய்வுபெற்ற பிறகும், பலருக்கு தொல்காப்பியம் முதலான இலக்கண நூல்கள், சங்க இலக்கியங்களைக் கற்பித்தார். ‘தொல்காப்பியக் கடல்’, ‘ஈழத்து இலக்கிய ஞான்று’, ‘கவிபாடும் புலமைக்கோன்’ என்றெல்லாம் புகழப்பட்ட சி.கணேசய்யர் 80-வது வயதில் (1958) மறைந்தார்.