Published : 29 Apr 2017 10:12 AM
Last Updated : 29 Apr 2017 10:12 AM

ஹரால்டு கிளேட்டன் யூரே 10

நோபல் பெற்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர்

வேதியியலுக்கான நோபல் பரிசை வென்ற அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஹரால்டு கிளேட்டன் யூரே (Harold Clayton Urey) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அமெரிக்காவின் இண்டியானா மாநிலத் தில் உள்ள வாக்கர்காட்டன் நகரில் (1893) பிறந்தார். சிறு விவசாயி, பள்ளி ஆசிரியர், மத போதகர் என பல பணிகளைக் கவனித்துவந்த தந்தை, இவருக்கு 6 வயதாக இருந்தபோது இறந்தார்.

* அதன்பிறகு, பாட்டி வீட்டில் வளர்ந்தார். அப்பா தன் பிள்ளைகளின் படிப்புச் செலவுக்காக காப்பீடு செய்து வைத்திருந்ததால் படிப்பு தடையின்றித் தொடர்ந்தது. பொறுப்பை உணர்ந்து படித்த இவர், கல்வியில் சிறந்து விளங்கினார். விவாதப் போட்டிகளில் கலந்துகொண்டார். சக மாணவர்கள் இவரை ‘பேராசிரியர்’ என்றுதான் அழைப்பார்கள்.

* மாண்டானா பல்கலைக்கழகத்தில விலங்கியலில் பட்டம் பெற்றார். சிறிது காலம் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் பெர்க்கேலியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் வெப்ப இயக்கவியல் பற்றி ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டம் பெற்றார்.

* டென்மார்க் தலைநகர் கோபன்ஹேகனில் உள்ள நீல்ஸ்போர் இன்ஸ்டி டியூட்டில் ஃபெலோஷிப் பெற்றார். அணுக் கட்டுமானம் குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டார். பின்னர் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக் கழகத்தில் ஆய்வு அசோசியேட்டாக இருந்தார். பின்னர் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் அசோசியேட் பேராசிரியராகப் பதவி ஏற்றார்.

* அங்கு ஆய்வுக் குழுவை உருவாக்கி ஆர்தர் ருவார்க்குடன் இணைந்து அணு, மூலக்கூறு, குவான்டம் குறித்த நூலை எழுதி வெளியிட்டார். அணுக்கருவியல் ஆராய்ச்சிகள் குறித்து ஆர்வம் கொண்டார். யுரேனியம் செறிவூட்டல் குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ஐசோடோப்களைப் பிரித்தெடுக்கும் ஆய்வில் ஈடுபட்டார்.

* தனது குழுவினருடன் இணைந்து வாயுப் பரவல் கோட்பாட்டைப் பயன்படுத்தி ஐசோடோப்பை பிரித்தெடுக்கும் வழிமுறையை மேம்படுத்தினார். அது ‘ஹெவி ஹைட்ரஜன்’ (டியூட்டிரியம்) கண்டறிய வழிகோலியது. இதற்காக 1934-ல் வேதியியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

* கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன், கந்தகத்தில் இருந்து கனமான ஐசோடோப்களைப் பிரித்தெடுத்தார். வானியல், நிலவியல், உயிரியல் துறைகளிலும் பல ஆய்வுகளை மேற்கொண்டார். இரண்டாம் உலகப்போர் தொடங்கியபோது, ஐசோடோப்பை பிரிப்பதில் இவரது நிபுணத்துவம் உலகம் முழுவதும் அங்கீகாரம் பெற்றது.

* அமெரிக்கா அணுகுண்டு தயாரிக்கும் முடிவை எடுத்ததும், இவரும் அக்குழுவில் இடம்பெற வேண்டும் என தீர்மானிக்கப்பட்டது. போரின்போதும், அதற்கு முன்னதாகவும், ஐரோப்பாவின் பல இடங்களில் இருந்தும் நாஜிக்களின் கட்டுப்பாட்டில் இருந்து யூத விஞ்ஞானிகள் தப்பிச்செல்ல உதவுவதில் சிறப்பாகப் பணியாற்றினார். யுரேனியம் கமிட்டி தலைவராக 1941-ல் நியமிக்கப்பட்டார்.

 மன்ஹாட்டன் திட்டத்தில் 1943-ல் இணைந்தார். அங்கு விஞ்ஞானிகளின் குழுவோடு இணைந்து யுரேனியத்தைப் பிரித்தெடுக்கும் ‘யூரே டிஃப்யூஷன்’ முறையை மேம்படுத்தினார். இத்திட்டத்தில் அணுகுண்டு உருவாக்கத்துக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். உயிரற்ற பொருள்களில் இருந்து உயிருக்குத் தேவையான கரிமப்பொருள்கள் உருவாவது குறித்த கோட்பாடுகளை உருவாக்கியதிலும் சிறந்த பங்களிப்பை வழங்கினார்.

* காஸ்மோ வேதியியல் துறை உருவாக தீவிர முயற்சி மேற்கொண்டார். பல்வேறு பரிசுகள், பதக்கங்கள், விருதுகளைப் பெற்றார். இறுதிவரை பல்வேறு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வந்த ஹரால்டு கிளேட்டன் யூரே 88-வது வயதில் (1981) மறைந்தார். கோள் அறிவியலில் சாதனை புரிந்தவர்களுக்கு அமெரிக்க வானியல் கழகம் இவரது பெயரில் விருது வழங்கிவருகிறது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x