Last Updated : 27 May, 2017 09:40 AM

 

Published : 27 May 2017 09:40 AM
Last Updated : 27 May 2017 09:40 AM

அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமானவரித் துறை மீண்டும் சோதனை

கொட்டை எழுத்து தலைப்பு செய்திகள் மட்டும் நிஜம். உள் செய்தி எல்லாம் மிஸ்டர் உல்டாவின் பீம் சர்வீஸ் - அதாவது மோட்டுவளையைப் பார்த்து எழுதும் கற்பனை நியூஸ்!)

“என்ன இது சோதனை மேல் சோதனை” என்று அமைச்சர் விஜயபாஸ்கரிடம் கேட்டபடியே அவர் வீட்டுக்குள் மிஸ்டர் உல்டா போனபோது, “அதெல்லாம் இல்லீங்க.. நம்பாதீங்க வதந்தி” என்று யாரிடமோ அமைச்சர் செல்போனில் சொல்லிக் கொண்டிருந்தார்.

“என்ன வதந்தி? எங்கிட்ட சொல்லக்கூடாதா?” என்று உல்டா கேட்டார்.

“வருமானவரித் துறை சோதனை பிரிவு என்று தனியா எங்கள் வீட்டிலேயே ஆபீஸ் திறந்துட்டதா ஒரு பிரேக்கிங் நியூஸ் போவுதாம். இது உண்மையான்னு கேக்கறாங்க. டார்ச்சர் தாங்க முடியலை... ஏன் உல்டா சார்... இந்த தனியார் டிவி சேனல் நிருபர்கள் தினம் 15 பிரேக்கிங் நியூஸாவது தந்தாத்தான் மாசக் கடைசியில் அவங்களுக்கு சம்பளமாமே... உண்மையா?” என்றார் அமைச்சர்.

“அதை விடுங்க... உங்க சம்பந்தப்பட்ட இடங்களில் சோதனை முடிந்து அதிகாரிகள் ஆதாரங்களை மூட்டை கட்டி எடுத்துக்கிட்டு போனாங்களாமே?” என்று மிஸ்டர் உல்டா கேட்டார்.

“அதுவும் தப்பான பிரேக்கிங் நியூஸ்தான் உல்டா... சோதனை செய்ய வந்த அதிகாரிங்க தண்ணி பாட்டில், பிளாஸ்கில் காபி, ஸ்நாக்ஸ் பாக்ஸ், சாப்பாடு கேரியர் எல்லாம் எடுத்து வந்திருந்தாங்க. கிளம்புறப்ப அதையெல்லாம் மறந்து இங்கேயே வச்சிட்டுப் போயிட்டாங்க. அதைத்தான் மறுபடி வந்து மூட்டை கட்டி எடுத்துட்டு போனாங்க. இதைப் போயி, ‘அதிகாரிகள் மறுபடி சோதனை’ன்னு டி.வி-யில சொல்றாங்க” என்று விஜய பாஸ்கர் சொல்லிக் கொண்டிருந்தபோதே, யாரோ நாலு பேர் காரில் வந்து இறங்கினார்கள்.

“மறுபடி ரெய்டு எல்லாம் இல்லே.. எங்க கட்சிக்காரங்கதான். வருமான வரி அதிகாரிங்க குடைச்சலுக்குப் பயந்து கரை வேட்டி கட்டாம, பேண்ட் சட்டைக்கு மாறிட்டாங்க. பயப்படாதே” என்றார் ஓட்டம் எடுத்த உல்டாவிடம்.

-----------------

அரசியலில் நுழைய ரஜினி அச்சாரம்!

ரஜினி வீட்டுக்கு மிஸ்டர் உல்டா போனபோது திருமதி ரஜினி அவரது செல்ல மகள்களிடம், “ருத்திராட்ச சின்னம்தான் நல்லது.. வரையறது ஈஸி... ஆளுக்கொரு ருத்திராட்சம்னு வாக்காளருக்கு தந்தால் தேர்தல் கமிஷன் தடை பண்ணாது” என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

“அப்ப ரஜினி கட்சி ஆரம்பிக் கிறது உறுதிதானா?” என்றபடி குறுக்கே புகுந்தார் உல்டா.

அப்போது அங்கு ரஜினியே வந்துவிட... “இவர்கிட்டேயே எல்லாம் கேட்டுக்கோ” என்று ஒதுங்கினார் லதா.

ரஜினியோ சூடாக, “மிஸ்டர் உல்டா, தமிழ்நாட்டிலே எல்லா ஓட்டல்லேயும் சேர்த்து ஒரு நாளைக்கு நாற்பத்தி ஏழு லட்சம் மைசூர் போண்டா போடறாங்க... அந்த போண்டா அத்தனையும் சாப்பிடறது தமிழன்தான். வெளி மாநிலத்தில, வெளிநாட்டில எந்தெந்த தமிழன் எவ்ளோ சொத்து சேர்த்து வச்சிருக்கான் அப்படிங்கிற விவரம்கூட என்கிட்ட இருக்கு. ஓவரா பேசினா அதையெல்லாம் எடுத்து வுடுவேன்’’ என்று உறுதியான குரலில் சொன்னார்.

“அது சரி தலைவா... நீங்க ஸ்டாலினை சிறந்த நிர்வாகின்னு பாராட்டி பேசியிருக்கீங்க. அடுத்த தேர்தலில் ‘அன்புதலைவர் ரஜினியின் பாராட்டு பெற்ற வருங்கால முதல்வர்’ அப்படின்னு அவங்க பிரச்சாரம் செய்ய ரெடி ஆயிட்டாங்க... இதுக்கு என்ன பண்ணுவீங்க” என்று மடக்கினார் உல்டா.

அப்போது அங்கு வந்த தனுஷ், “இதெல்லாம் மாமாவுக்கு ஒரு பிரச்சினையே இல்லே.. ஸ்டாலினை சிறந்த நிர்வாகின்னுதானே சொன்னாரு. நிர்வாகின்னா மானேஜர்னு அர்த்தம். அவரை அறிவாலய மானேஜர் என்ற அர்த்தத்தில்தான் சொன்னதா சமாளிச்சுட்டுப் போயிடுவோம்” என்றார்.

“சரி... உங்க முப்பாட்டன் எல்லாம் கிருஷ்ணகிரி பக்கம்தான்னு சொன்னீங்களே... அதுக்கு என்ன ஆதாரம்?” என்று உல்டா கேட்டதற்கும் தனுஷே பதில் சொன்னார்.

“கிருஷ்ணகிரி தாசில்தார் கிட்டே மாமாஜியோட தாத்தாஜி வாங்கிய கம்யூனிட்டி சர்டிபிகேட் ரெடியா இருக்கு. அதுக்கும் சந்தேகம் வந்தா என்ன பண்றதுனுதான்... ரசிகர்கள் சந்திப்பு சமயத்துல தாசில்தாரை ராகவேந்திரா மண்டபத்துக்கு வரவச்சு அவரையும் மாமாவோட சேர்ந்து போட்டோ எடுத்து அனுப்பிட்டோம்’’ என்று தனுஷ் சொல்ல, “இந்த போட்டோ மேட்டர் சூப்பரா வேலை செய்யுது இல்லே” என்று தாடியைத் தடவியபடி சிரித்தார் ரஜினி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x