Last Updated : 28 May, 2017 11:05 AM

 

Published : 28 May 2017 11:05 AM
Last Updated : 28 May 2017 11:05 AM

சிறுதெய்வ வழிபாட்டில் இருந்து பிரிக்கவே முடியாத ரத்த பலி

பசு, காளை, ஒட்டகம் போன்ற மிருகங்கள் இறைச்சிக்காக கொல்லப்படுவதைத் தடுக்கும் வகையில் மத்திய அரசு புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. இந்த மிருகங்களை வாங்குபவர் கோயிலில்கூட அவற்றை பலியிடக் கூடாது என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பெரும்பாலான கோயில்களில் ஆடுகள்தான் வெட்டி பலியிடப்படுகின்றன. இதற்கு எந்தத் தடையும் கிடையாது. கட்டுப்பாடும் கிடையாது. மாடுகளை பலியிடுவது அரிதான விஷயமாகவே உள்ளது. இதனால் புதிய கட்டுப்பாடுகளால் பெரிய அளவுக்கு பாதிப்புகள் ஏற்படாது என்ற நிலைதான் உள்ளது.

தமிழகத்தில் பல்லாயிரக்கணக்கான சிறுதெய்வக் கோயில்கள் இருக்கின்றன. சிறுதெய்வங்கள் இல்லாத கிராமங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவை பரவலாக அமைந்திருக்கின்றன. குறிப்பிட்ட சில சமூகங்களைத் தவிர பிற அனைத்து சமூகங்களிலும் சிறுதெய்வ வழிபாட்டு முறையும், அவற்றுக்கு விலங்குகளைப் பலியிடும் சடங்கும் உள்ளது. இதற்கான அடையாளமாக, அக்கோயில்களில் சிறிய பலிபீடங்கள் இருக்கின்றன.

ஆனால், மனிதருக்கு மனிதர் வாழ்க்கை முறையும், உணவு முறையும் மாறுபடுவதைப் போல இந்தச் சிறு தெய்வங்களுக்கான பலி முறையிலும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. பொதுவாக மனிதர்கள் தாங்கள் ஆசை யாய் வீட்டில் வளர்க்கும் மிருகங்களைத் தான் சாமிகளுக்கு நேர்ந்து பலி கொடுக் கின்றனர். அதிலும், ஆண் விலங்குகளைப் பலியிடுவதே வழக்கம். ஆட்டுக்கிடா, எருமைக்கிடா, சேவல், ஆண் பன்றிகளே பொதுவாகப் பலியிடப்படுகின்றன. எந்தக் கோயிலிலும் பசு மாடோ, காளை மாடோ பலியிடப்படுவதில்லை.

சினை ஆடு பலியிடுதல்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங் களில் உள்ள சில பெண் தெய்வங் களுக்கு நிறைமாத சினையாக உள்ள பெண் ஆடுகளைப் பலியிடும் வழக்கம் இருக்கிறது. சாமியின் முன் நிறுத்தப்படும் சினை ஆட்டின் வயிற்றை குத்திக்கிழித்து உள்ளே இருக்கும் குட்டியை எடுத்து பலி பீடத்தின் மீது வைப்பார்கள். குத்திக்கிழிப்பதால் தாய் ஆடும் இறந்து விடும், குட்டியும் இறந்துவிடும். இதனை சூலாடு குத்துதல் அல்லது துவளக்குட்டி கொடுத்தல் என்று அழைக்கிறார்கள். இந்தச் சடங்கு கோபாலசமுத்திரத்தில் உள்ள சீவலப்பேரி சுடலை கோயிலில் வருடந்தோறும் நடைபெறுகிறது.

வள்ளியூர் அருகே பெருமளஞ்சி சுடலைமாடன் கோயிலில் இசக்கியம் மனுக்கு குட்டியாட்டைப் பலி கொடுக்கும் முறை வித்தியாசமானது. இசக்கியம்மன் முன் தொட்டில் கட்டி அதில் பிறந்து ஓரிரு நாளே ஆன குட்டியை குழந்தையைப் போல படுக்கை வைத்து ஆட்டுவார்கள். பிறகு தொட்டிலுக்குள்ளேயே அதன் நெஞ்சைக்கீறி, இதயத்தை அம்மனுக்குப் படைப்பார்கள். இதுபோன்ற சடங்குகள் பெண்களுக்கு பெரும் அச்சம் தரும் சடங்கு என்பதால், பெண்களையும், குழந்தைகளையும் அங்கிருந்து அப்புறப்படுத்திவிடுவார்கள்.

மதுரை மாவட்டம் வன்னிவேலம்பட்டி சந்தனமாரியம்மன் கோயிலில், இளம் ஆடு மற்றும் பன்றிக்குட்டிகளின் தலையை அறுத்து கோயில் அருகே புதைக்கும் வழக்கம் உள்ளது.

எருமை பலி

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மட்டப்பாறைப்பட்டி பத்திரகாளி யம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆயிரம் முதல் 1500 எருமைக்கிடாக்கள் பலியிடப்படுகின்றன. அதே மாவட்டத்தில் தொட்டியம் மதுரகாளியம்மன் கோயிலி லும் எருமைகிடாக்கள் பலியிடப்படு கின்றன. பொதுவாக பலியிடப்படும் விலங்குகளை பலியிட்டவர்களே சமைத் துச் சாப்பிடுவது வழக்கம். ஆனால், பெரும்பாலான எருமைக்கிடாக்கள் அப்படியே புதைக்கப்பட்டு விடுகின்றன.

தமிழகம் முழுவதும் முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் அசைவ உணவகம் நடத்துவோரின் குல தெய்வக்கோயில்கள் மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி கிராமத்தில் உள்ளன. இங்கு நூற்றுக்கணக்கான ஆடுகளை வெட்டி, அங்கேயே பிரியாணியாக சமைத்து லட்சக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானமாக வழங்கி விடுகிறார்கள்.

ரத்தம் குடித்தல்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங் களில் உள்ள பெரும்பாலான சுடலை மாடன் கோயில்களில் ஆடுகளை நெஞ்சைப் பிளந்து, சாமியாடிகள் ரத்தம் குடிக்கும் சடங்கு நடைபெறுகிறது. திசையன்விளையில் நூறுக்கும் மேற்பட்ட ஆடுகளைப் பலியிட்டு ரத்தம் குடிக்கும் நிகழ்ச்சி நடைபெறும். சில கோயில்களில் சாமியாடிகள் குட்டி ஆடு அல்லது சேவலை வெறும் பற்களால் கடித்தே ரத்தம் குடிப்பதுண்டு.

சில கோயில்களில் சமைக்கப்பட்ட உணவில் பலியிட்ட ஆட்டின் ரத்தத்தைக் கலந்து அவற்றை வானத்தை நோக்கி வீசும் (சூறையிடுதல்) நிகழ்ச்சி நடை பெறுகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள விலங் காமுடி பத்திரகாளியம்மன் கோயிலில் சுமார் 500 பன்றி, 500 ஆடுகளைப் பலியிடுகிறார்கள்.

அப்போது ஓர் ஆட்டை மட்டும் பரண் மீது வைத்து வேலால் குத்துவார்கள். அதன் ரத்தத்தை அரிசிப்பொரி, வாழைப்பழம், உப்பு கலந்து பிசைந்து வானத்தை நோக்கி வீசுவார்கள். அதைப் பிரசாதமாகப் பிடித்து மக்கள் சாப்பிடுவதுண்டு.

கழுமரத்தில் குத்துதல்

தென்மாவட்டங்களில் அருகி வருகிற முக்கியமான சடங்குகளில் ஒன்று கழுமரத்தில் குத்துதல். கழுமரம் எனும் கூர்மையான ஆயுதத்தின் மீது பன்றி அல்லது ஆட்டை உயிருடன் குத்தி வைக்கிற பலி முறை இது. தற்போது இதற்குப் பதிலாக மூங்கில் குச்சியால் செய்யப்பட்ட சிறு கழுமரத்தில், சேவலைக் குத்துகிற வழக்கம் அம்மன், சுடலைமாடன் கோயில்களில் நடைமுறையில் உள்ளது.

108 வைணவத்தலங்களில் ஒன்றான அழகர்கோயிலிலும் ஆடு பலியிடும் முறை உள்ளது. அங்குள்ள பதினெட்டாம்படி கருப்பசாமிக்காக மாதந்தோறும் நூற்றுக்கணக்கான ஆடுகள் பலியிடப் படுகின்றன. இதேபோல மதுரை பாண்டி கோயில், மேட்டுப்பாளையம் வனபத்திர காளியம்மன் கோயில், திருப்பூர் பாதைக் கருப்பராயன் கோயில்களில் நூற்றுக்கணக்கான ஆடுகள் வெட்டப் படுகின்றன. சில கோயில்களில் ஆடுகளை வெட்டுவதற்குப் பதில் கழுத்தை அறுப்பதுமுண்டு.

பிற மத ஆலயங்களில்

இந்துக்கோயில்கள் மட்டுமின்றி அபூர் வமாக சில கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் தர்காக்களிலும் விலங்குகள் பலியிடப்படுகின்றன. தூத்துக்குடி மாவட்டம் புளியம்பட்டி அந்தோணியார் கோயில், புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் செங்கலாகுடி சேக் மைதீன் ஆண்டவர் தர்கா போன்றவை அதற்கு உதாரணங்கள். பக்ரீத் பண்டிகையின் போது, ஆடு, ஒட்டகம் போன்றவை பள்ளிவாசல் அருகில் குரானில் சொல் லப்பட்டுள்ள முறைப்படி வெட்டப்பட்டு, அதன் இறைச்சி அனைவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படுகிறது.

கடந்த 2003-ம் ஆண்டு தமிழகக் கோயில்களில் விலங்குகளைப் பலியிடக் கூடாது என்று முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார். “கோயில்கள் மற்றும் கோயில்களைச் சுற்றிலும் ஆடுகள், மாடுகள், கோழிகள் ஆகியவற்றை பலியிடக்கூடாது. அதுபோன்ற செயல்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. இதனை செய்வோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

அதன்பின்னர் நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக தோல்வியடைந் ததைத் தொடர்ந்து, அந்த உத்தரவை அவர் திரும்பப்பெற்றார். மீண்டும் அதேபோன்ற நிலை வந்துவிடுமோ என்று கிராம மக்கள் கவலையில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x