Published : 14 Mar 2017 10:13 AM
Last Updated : 14 Mar 2017 10:13 AM

சங்கரன்குட்டி பொற்றெக்காட் 10

ஞானபீட விருது பெற்ற மலையாள எழுத்தாளர்

‘ஞானபீட விருது’ பெற்ற சிறந்த மலையாள மொழி படைப்பாளியான சங்கரன்குட்டி பொற்றெக்காட் (Sankaran Kutty Pottekkatt) பிறந்த தினம் இன்று (மார்ச் 14). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* கேரள மாநிலம் கோழிக்கோட்டில் (1913) பிறந்தார். தந்தை பள்ளி ஆசிரியர். கோழிக்கோடு இந்து பள்ளி யிலும், சமோரியன் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். சிறுவயதி லேயே நூல்கள் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

* இவரது முதல் கதையான ‘ராஜநீதி’ வெளிவந்தபோது, இவருக்கு 15 வயது. சமோரியன் கல்லூரியில் 1934-ல் இளங்கலைப் பட்டம் பெற்றார். கல்லூரியில் படிக்கும்போதே, நிறைய எழுதிவந்தார். இவரது கதை, கவிதை உள்ளிட்ட படைப்புகள் உள்ளூர் இதழ்களில் வெளிவந்தன.

* படித்து முடித்த பிறகு வேலை கிடைக்காததால் இந்திய, ஐரோப்பிய பண்டைய இலக்கிய நூல்களைப் படிப்பதில் கவனம் செலுத்தினார். கோழிக்கோட்டில் இருந்த குஜராத்தி பள்ளியில் சிறிதுகாலம் பணியாற்றினார். 1939-ல் திரிபுரா காங்கிரஸ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பணியை ராஜினாமா செய்தார்.

* பின்னர் பாம்பே சென்றவர், அங்கேயே தங்கினார். பல்வேறு வேலைகளைச் செய்து வருமானம் ஈட்டினார். சுதந்திரப் போராட்டங்களில் கலந்துகொண்டார். சில காலம் கழித்து, சொந்த ஊர் திரும்பினார். ‘நாடன்பிரேமம்’ என்ற இவரது முதல் நாவல் 1941-ல் வெளிவந்தது.

* விரைவில் மலையாள புனைகதை களத்தில் முன்னணி எழுத்தாளராகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். தன் பம்பாய் பயணத்தை விவரித்து ‘என்டே வரியம்பலங்கள்’ என்ற நினைவுச் சித்திரத்தைப் படைத்தார். கொஞ்சம் பணம் சேர்ந்த பிறகு, காஷ்மீர் உட்பட பல இடங்களுக்கும் பயணம் செய்தார்.

* அதுமுதல் இவருக்கு பயணம் செய்வதில் அலாதியான ஆர்வம் பிறந்தது. அமெரிக்கா, ஐரோப்பா, தெற்கு ஆசியா, தூரக்கிழக்கு நாடுகளுக்கு பலமுறை பயணம் மேற்கொண்டார். பழகுவதற்கு இனிமையானவர் என்பதால், அந்த நாடுகளில் உள்ள சாதாரண மக்களுடன் வெகு சுலபமாக ஒன்றிப்போய்விடுவார்.

* அந்த நாடுகளைப் பற்றிய தனது பயண அனுபவங்களையும் பல நூல்களாகப் படைத்தார். அவை பெரும் வரவேற்பைப் பெற்றன. இவரது சரளமான மொழிநடையும், எளிமையான பாணியும் ஆத்மார்த்தமான பிணைப்பை ஏற்படுத்துவதாக வாசகர்கள், விமர்சகர்கள் போற்றிப் பாராட்டினர்.

* ‘ஒரு தெருவின்டே கதா’ நூலுக்காக இவருக்கு கேரள சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. ‘ஒரு தேசத்தின்டே கதா’ இவருக்கு 1972-ல் கேந்திரிய மற்றும் கேரள சாகித்ய அகாடமி ஆகிய 2 விருதுகளையும் பெற்றுத் தந்தது. இவரது இலக்கியப் பங்களிப்புக்காக 1980-ல் ‘ஞானபீட விருது’ வழங்கப்பட்டது. ‘தேசத்தின்டே கதா’ கதை, திரைப்படமாகத் தயாரிக்கப்பட்டு, விருது வென்றது.

* சாகித்ய அகாடமி தலைவராக 1971-ல் செயல்பட்டார். பயண நூல், சிறுகதை, நாவல், கட்டுரை, கவிதைத் தொகுப்பு, நாடகங்கள் என 60-க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார். இவரது பல படைப்புகள் இந்திய மொழிகள் மட்டுமல்லாமல் ஆங்கில, ரஷ்ய, செக், ஜெர்மன், இத்தாலிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டன. வெளிநாடுகளிலும் இவரது நூல்கள் பரபரப்பாக விற்பனையாகின.

* அரசியலிலும் ஈடுபட்ட இவர், 1962-ல் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இலக்கியத்தின் பல களங்களிலும் முத்திரை பதித்தவரும், தன் படைப்புகள் மூலம் மலையாள மொழி இலக்கியத்துக்கு வளம் சேர்த்தவருமான சங்கரன்குட்டி பொற்றெக்காட் 69-வது வயதில் (1982) மறைந்தார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x