சுட்டது நெட்டளவு: ‘உலகிலேயே மோசமான இடம்’

சுட்டது நெட்டளவு: ‘உலகிலேயே மோசமான இடம்’
Updated on
1 min read

ஆன்மிக குருவிடம் ஆசி வாங்க வந்திருந்த ஒரு செல்வந்தர் சோகமாக இருந்தார்.

அவரை அழைத்த குரு, “சோகத்துக்கு என்ன காரணம்?” என்று கேட்டார்.

அதற்கு செல்வந்தர், “என் மனம் மிகவும் குழப்பத்தில் இருக்கிறது. என் பணியாட்கள்கூட எனக்கு உண்மையாக இல்லை. என் மனைவி, பிள்ளைகள் உட்பட உலகமே சுயநலக் கூட்டமாக உள்ளது. யாருமே சரியில்லை” என்றார்.

இதைக்கேட்டு புன்னகைத்த குரு, செல்வந்தருக்கு ஒரு கதை சொன்னார்.

“ஒரு ஊரில் ஆயிரம் கண்ணாடிகள் கொண்ட அறை இருந்தது. அதற்குள் சென்று ஒரு சிறுமி விளையாடினாள். அப்போது அவள் தன்னைச் சுற்றி ஆயிரம் குழந்தைகளின் மலர்ந்த முகத்தைக் கண்டு மகிழ்ந்தாள். அவள் கை தட்டியவுடன், ஆயிரம் பிம்பங் களும் கை தட்டின. ‘உலகிலேயே மகிழ்ச்சி யான இடம் இதுதான்!’ என்று எண்ணி, அடிக்கடி அங்கே சென்று விளையாடினாள்.

அதே இடத்துக்கு ஒருநாள் கோபக்கார மனிதர் ஒருவர் வந்தார். அறைக்குள் நுழைந்ததும் தன்னைச் சுற்றி ஆயிரம் கோபமான மனிதர்களைக் கண்டார். அச்சம் கொண்ட அவர், அந்த மனிதர்களை அடிக்க கை ஓங்கினார். உடனே ஆயிரம் பிம்பங்களும் அவரை அடிக்க கை ஓங்கின. ‘உலகிலேயே மோசமான இடம் இதுதான்!’ எனக் கூறி, அங்கிருந்து வெளியேறினார்.

இந்த சமூகம்தான் ஆயிரம் கண்ணாடிகள் இருக்கிற அறை. நாம் எதை வெளிப்படுத்துகிறோமோ அதையே சமூகம் பிரதிபலிக்கிறது. உன் மனதைக் குழந்தையைப் போல் வைத்திரு... உலகம் உனக்கு சொர்க்கமாகும்!” என்றார் குரு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in