

* விடுதலை இயக்க வீரரும், ஆன்மிக ஞானியுமான ஸ்ரீஅரவிந்தர் (Sri Aurobindo) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 15). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* கல்கத்தாவில் (1872) பிறந்தவர். முழு பெயர் அரவிந்தகோஷ். டார்ஜிலிங்கில் ஒரு கான்வென்ட்டில் பயின்றார். பள்ளிப்படிப்பை முடித்து இங்கிலாந்து சென்றார். கேம்ப்ரிட்ஜில் இந்தியன் சிவில் சர்வீஸ் பணிக்கான உயர் கல்வி பயின்றார்.
* வங்காளம், இந்தி, சமஸ்கிருதம், ஆங்கிலம், லத்தீன், பிரெஞ்ச், கிரேக்கம், ஜெர்மன் உட்பட பல மொழிகளைக் கற்றார். கல்வி கற்கும்போதே புரட்சிகர சிந்தனைகள் இவருக்குள் கிளை விரித்தன. 1893-ல் நாடு திரும்பினார். அப்போது கப்பல் விபத்தில் இவர் இறந்ததாக கிடைத்த தவறான தகவலால் தந்தை இறந்தார்; தாய் மனநோய்க்கு ஆளானார்.
* பரோடா சமஸ்தானத்திலும், அரசுப் பணியிலும் இருந்தார். ‘இந்து பிரகாஷ்’ என்ற இதழில் கட்டுரைகள் எழுதினார். கல்கத்தா சென்று, வங்க தேசியக் கல்லூரி முதல்வரானார். 1904-ல் பிரணாயாமம் பயின்றது, இவரது சிந்தனைப் போக்கை மறுவடிவம் பெறச்செய்தது. யோகநெறியில் நாட்டம் கொண்டார்.
* வங்கப் பிரிவினை இவரை இந்திய விடுதலைப் போராட்டத்தில் களமிறங்க வைத்தது. வங்காளம், மத்தியப் பிரதேசத்தில் செயல்பட்ட அரசியல் குழுக்களை ஒன்றிணைத்தார். திலகர், சகோதரி நிவேதிதையுடன் ஆழமான நட்பு கொண்டிருந்தார். ஜதீந்திரநாத் பானர்ஜிக்கு பரோடா ராணுவத்தில் ராணுவப் பயிற்சி பெறவைத்து புரட்சி இயக்கத்தில் இணைத்தார். திலகருடன் இணைந்து, புரட்சிப் படையினரை வழிநடத்தினார்.
* பல இடங்களுக்கு பயணம் மேற்கொண்டு தேசிய விழிப்புணர்வு, சுதேசி இயக்கம், ஒத்துழையாமை, தேசியக் கல்வி இயக்கங்களுக்கு ஆதரவு திரட்டினார். 1907, 1908-ல் இருமுறை சிறை சென்றார். வெளியே வந்ததும், ‘கர்மயோகின்’ (ஆங்கிலம்), ‘தர்மா’ (பெங்காலி) இதழ்களைத் தொடங்கினார்.
* விடுதலையை அரசியல் கண்ணோட்டத்தில் மட்டுமன்றி ஆன் மிகக் கண்ணோட்டத்திலும் பார்த்தார். பின்னர், அரசியல் செயல் பாடுகளைத் தவிர்த்து யோக நெறியில் கவனம் செலுத்தினார். ஷாம்சுல் ஆலம் கொலை வழக்கில் 1910-ல் இவர் மேல் குற்றம் சுமத்தப்பட்டது.
* கைதாவதில் இருந்து தப்பிக்க, பிரெஞ்ச் ஆதிக்கத்தில் இருந்த புதுச்சேரிக்கு மாறுவேடத்தில் வந்தார். அங்கு ஆசிரமம் அமைத்து தியானம், யோகத்தில் ஈடுபட்டார். இவர்போலவே தப்பித்து அங்கு வந்த மகாகவி பாரதியுடன் நட்புகொண்டார்.
‘ஆர்யா’ என்ற ஆன்மிக மாத இதழை 1914-ல் தொடங்கினார். அதே ஆண்டில் பாண்டிச்சேரி வந்த மிர்ரா அல்ஃபாஸா (மதர்), இவரது ஆசிரமத்தில் இணைந்தார். 1943, 1950-ல் நோபல் பரிசுக்காக பரிந்துரை செய்யப்பட்டார்.
* ‘சாவித்திரி: ஏ லெஜண்ட் அண்ட் எ சிம்பல்’ என்ற காவியத்தைப் படைத்தார். மேலும் பல நூல்களை எழுதினார். சீடர்களுக்கு இவர் எழுதிய ஆயிரக்கணக்கான கடிதங்கள், குறிப்புகள், இவரது ஆன்மிகப் பயிற்சிகள், போதனைகள் ஆகியவை திரட்டப்பட்டு 3 தொகுதிகளாக ‘லெட்டர்ஸ் ஆன் யோகா’ என்ற நூலாக வெளியிடப்பட்டது.
* சிறந்த கவிஞர், சரித்திரப் பேராசிரியர், விடுதலை வீரர், தேசபக்தர், ஆன்மிகவாதி, தத்துவஞானி, அரசியல்ஞானி, எழுத்தாளர் என்ற பன்முகப் பரிணாமம் கொண்டவரும், யோக தத்துவத்துக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியவருமான அரவிந்தர் 78-வது வயதில் (1950) மறைந்தார்.
- ராஜலட்சுமி சிவலிங்கம்