Last Updated : 30 Jan, 2017 09:56 AM

 

Published : 30 Jan 2017 09:56 AM
Last Updated : 30 Jan 2017 09:56 AM

இணைய களம்: காந்தி எதைச் சாதித்தார்?

பொதுமக்களுக்கான இயக்கமாக விடுதலை இயக்கத்தை மாற்றியது காந்தியின் முதன்மையான சாதனை. கட்சியின் உறுப்பினர் கட்டணத்தை நாலணாவாகக் குறைத்தார். மொழிவாரியாக மாகாண அளவில் காங்கிரஸ் கட்சி பிரிக்கப்பட்டது. கடைக்கோடி மனிதனையும் அரசியல் போராட்டத்துக்குள் கொண்டுவருவதை காந்தி சாதித்தார்.

இந்தியா என்கிற நாட்டை ஒரு மொழி, ஒரு கலாச்சாரம், ஒரு மதம் என்று மாற்ற கனவு காணாமல், அனைவருக்குமான தேசமாகவே அதைக் கனவு கண்டார். தொழிலாளிகள், விவசாயிகள்,முதலாளிகள், இடதுசாரிகள், வலதுசாரிகள், பெண்கள், சிறுபான்மையினர் என்று சகலரையும் உள்ளடக்கியதாக காந்தியின் தேசியம் இருந்தது. இந்தியாவில் பெண்களை அதிகளவில் அரசியல்மயப்படுத்திய மகத்தான பெருமை காந்திக்கு உண்டு. ‘இந்தியாவின் முதல் ஜனாதிபதியாக ஒரு பட்டியலினப் பெண்ணே வர வேண்டும்’எனக் குறிப்பிட்டவர் காந்தி.

சாதியக் கொடுமைக்கு எதிராக காந்தி பல்வேறு வகைகளில் போராடினார். ‘காந்தி நடத்திய போராட்டம் தீண்டாமைக்கு எதிரான உலகின் மிகப் பெரிய இயக்கம்’ என்கிறார் வரலாற்று ஆசிரியர் டேவிட் ஹார்டிமான். கோயில் நுழைவுப் போராட்டங்கள் எல்லாத் தரப்பினரையும் இணைத்துக்கொண்டு சாதிக்கப்பட்டன. தன்னுடைய இறுதிக் காலத்தில், ‘சாதி மறுப்புத் திருமணம் செய்துகொள்ளாதவர்களின் திருமணத்துக்கு என்னை அழைக்காதீர்கள். இனி, என் ஆசீர்வாதம் அவர்களுக்குக் கிடையாது’என்று எழுதினார் காந்தி. காந்தி எதையும் திணிக்க வேண்டும் என்பதில் உடன்பாடில்லாதவர்.

உரையாடல் என்பது எப்போதும் அவசியம் என்பதில் காந்திக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது. தன்னுடன் முரண்பட்ட சுயராஜ்யக் கட்சியினரைக் கூட காங்கிரஸ் கட்சிக்குள் இருந்தே இயங்க அனுமதித்தார். எவ்வளவோ முரண்பாடுகளைத் தாண்டி, இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக அம்பேத்கர் ஆவதை அவரே உறுதிசெய்தார். ஜின்னாவை இந்தியாவின் பிரதமராக ஆக்கியாவது பிரிவினையை நிறுத்தலாம் என்றும் முயன்றவர் அவர்.

காந்தி தொழில்மயத்துக்கு எதிரானவர் இல்லை. இயந்திரமயமாக்கலின் வன்முறைக்கு எதிரானவர். கிராமங்களை நோக்கி நம்முடைய கவனம் திரும்ப வேண்டும், அங்கே சுயாட்சி நடக்க வேண்டும் என்று நினைத்தவர்.

காந்தியின் பங்களிப்பு எத்தகையது என்ற கேள்விக்கு, அரசியல் அறிவியல் அறிஞர் சுனில் கில்னானியின் வரிகள் சரியான பதிலாக இருக்கலாம்: “காந்தி இல்லாமல் போயிருந்தாலும் இந்தியாவுக்கு விடுதலை கிட்டியிருக்கும். எனினும், வன்முறையான, நாட்டைப் பிளவுபடுத்துகிற பாதையில் அது நிகழ்ந்திருக்கும்... மாவோ, ஸ்டாலின் முதலியோர் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றி மக்களின் வாழ்க்கையை, சிந்தனையை மாற்ற முயன்றார்கள். காந்தி அதற்கு மாறாக அரசு, அதிகாரம் ஆகியவற்றை மக்களுக்காகச் சிந்திக்கும் வகையில் மாற்ற முயன்றார்.”







FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x