Published : 30 Jul 2016 05:27 PM
Last Updated : 30 Jul 2016 05:27 PM

யூடியூப் பகிர்வு: கிரஹாம் கூறும் சாலை பாதுகாப்பு உண்மைகள்!

கிரஹாமைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அறிவியல் கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய அலெக்ஸாண்டர் கிரஹாம்பெல்தானே என்கிறீர்களா, இல்லை. இந்த கிரஹாம் விரிந்த தலையும், காணாமல் போன கழுத்தும், தொங்கிய மார்புப்பகுதியும் கொண்டவர். அவரின் உருவத்தை நீங்கள் பார்த்தால் நிச்சயம் அதிர்ச்சி அடைவீர்கள். ஆனால் இவர் மனிதன் அல்ல. ஆஸ்திரேலியக் கலைஞர் ஒருவரால் செதுக்கப்பட்ட விநோதமான மனித உருவம்.

அதிக விபத்துகள் நிகழ்கின்ற ஆஸ்திரேலியாவில், சாலைப் பாதுகாப்பு விதிகள் பற்றிய விழிப்புணர்வை உண்டாக்குவதற்காக கிரஹாம் உருவாக்கப்பட்டிருக்கிறார். அங்குள்ள மக்களிடையே சாலைகளில் பாதுகாப்பு குறித்த அக்கறை குறைந்து வருவதாகவும் வேகம் என்பது அதிகமாகி விட்டதாகவும் போக்குவரத்து அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர். அதிவேகம் கட்டுப்பாட்டை இழக்கவைத்து விபத்தை ஏற்படுத்துகிறது என்றும் சொல்கின்றனர். அதனைக் குறைக்க கிரஹாம் நிச்சயம் உதவுவார் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

விநோத உருவத்தின் காரணம்

விபத்து ஏற்பட்டால் கபாலம் முன்னோக்கி நகர்ந்துவிடும். உடல் தூக்கி வீசப்படும்போது பின்மண்டை நொறுங்கும். கழுத்துப் பகுதி காணாமல் போகும். இந்த காரணிகளால் கிரஹாம் உருவம் விபத்துக்குப் பிறகான அம்சங்களோடு உருவாக்கப்பட்டிருக்கிறது.

யாராவது விபத்தில் சிக்கி உயிர் பிழைக்க நேர்ந்தால், கிரஹாமைப் போலத்தான் இருப்பார்கள் என்பதைச் சொல்வதற்காகவே கிரஹாமை வடிவமைத்திருக்கின்றனர். கிரஹாம் கண்ணாடி இழைகள், சிலிக்கன், பிசின் மற்றும் மனித முடியைக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

''சாலைகளில் வேகமாக வாகனங்களை ஓட்டும்போதும் சாலைகளைக் கடக்கும்போதும் கிரஹாம் கண்முன் வந்து, தவறு செய்யவிடாமல் பாதுகாப்பார். ஆஸ்திரேலியா முழுவதும் சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுக்காக கிரஹாம் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்'' என்கிறார் ராயல் மெல்போர்ன் மருத்துவமனை அறுவைசிகிச்சை நிபுணர் கிறிஸ்டியன் கென்ஃபீல்ட்.

கிரஹாமை நீங்களும் காண: