Last Updated : 09 Mar, 2017 10:50 AM

 

Published : 09 Mar 2017 10:50 AM
Last Updated : 09 Mar 2017 10:50 AM

இதுதான் நான் 66: வெளிப்படாத குட்டுகள்

எந்த ஒரு விஷயமா இருந்தாலும் மனசுக்குப் பிடிச்சு முழு லவ்வோட செய்யும்போது நிச்சயமா அதை அடைய முடியும். நடிப்பு, டைரக்‌ஷன், கொரியோகிராஃப்னு என்னோட விஷ யத்துல இப்போகூட அதுதான் நடந்துட் டிருக்கு. தொடர்ந்து டைரக்‌ஷன் பண் ணிட்டே இருக்கும்போது, ‘ஒரு படத்துல நடிச்சா நல்லா இருக்குமே’ன்னு தோணுச்சு.

உடனே ‘ஏபிசிடி’, ‘தேவி’ன்னு படங்கள் அமைஞ்சது. இப்போ அடுத் தடுத்து நடிச்சிட்டே இருக்கேன். இதுக்கு இடையில கொரியோகிராஃபி பண்ண லாம்னு தோணுச்சு. பாட்டுங்க கொரியோ கிராஃப் பண்ணேன். லவ்வோட சேர்ந்து சரியான உழைப்பைக் கொடுக்கும்போது இப்படி நம்ம நினைக்கிற விஷயம் தானா அமையும்.

உடனே, ‘ரியல் லைஃப்ல நீங்க லவ் பண்ணினது?’ன்னு கேட்பீங்க. அதுக்கு என்ன சொல்லணும்னு தெரியலை. அப்படி கேட்டா உடனே சிரிச்சிடுறேன்.

இந்த நேரத்துல என்னோட ஸ்டேஜ் ஷோ பற்றி சொல்லணும்னு தோணுது. அது படங்கள்ல ஆடுற மாதிரி இல்லை. ஸ்டேஜ் ஷோ பண்ணும்போது நிறைய எனர்ஜி தேவை. சினிமாவுக்கு வந்த புதுசுல அதிகமா நான் ஸ்டேஜ் ஷோ பண்ணினது இல்லை. அப்படியே பண்ணினாலும் கயிறு அவுத்துவிட்ட காளை மாதிரி பயங்கர வேகமா ஆடுவேன். முதல் ஒரு நிமிஷத்துலயே எனக்கு மூச்சு வாங்கிடும். முடியும்போது, முதல்ல ஆரம்பிச்சப்போ இருந்த அந்த எனர்ஜி இருக்காது.

அந்த வயசுல ஸ்டேஜ் டான்ஸுன்னா பயம் வேற வந்துடும். தண்ணி குடிக்க மாட் டேன். ஆனா, ஏழு, எட்டு முறை ரெஸ்ட் ரூம் பக்கம் ஓடிடுவேன். அப்படி ஒரு பயம். ஸ்கூல்ல ஆண்டுத் தேர்வு எழுத றப்போ கையில கொஸ்டீன் பேப்பரை வாங்கினதும் ஒரு பயம் வருமே? அந்த மாதிரிதான். உடம்பே சூடாயிடும். ஆரம் பத்துல எல்லாம் ஒவ்வொரு முறையும் ஸ்டேஜுக்கு போகிற வரைக்கும் ஆடிட்டேதான் இருப்பேன்.

ஸ்டேஜுக்கு போய் ஜனங்களைப் பார்த்து பயத்துல பாதி சக்தி குறைஞ்சிடும். அதுவும் டான்ஸ் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி நம்மை பத்தி ஒரு இன்ட்ரோ கொடுப்பாங்க... பாருங்க, உலகத்துலயே நம்மைத் தவிர வேற யாரும் பெஸ்ட் இல்லைங்கிற அளவுக்கு அந்தப் பேச்சு இருக்கும். அவங்க அன்பாத்தான் சொல்வாங்க. ஆனாலும், ‘என்னடா இவ்ளோ சொல் றாங்களே’ங்கிற அளவுக்கு அது பயத்தை அதிகமாக்கிடும்.

ஆனா, இப்போ எல்லாம் அனுபவம், மெச்சூரிட்டி வந்ததால மொத்தமா மாறி யாச்சு. எந்த இடத்துல நிறுத்தணும், திரும்ப எங்கே தொடங்கணும், எதிர்ல இருக்குற மக்களை எப்படி இன்ட்ராக்ட் பண்ணணும்னு கொஞ்சம் புரிய ஆரம்பிச் சிடுச்சு. இந்த பயம் மாற எனக்கு ரொம்ப வருஷமாச்சு.

முன்னாடி எல்லாம் ஸ்டே ஜுக்கு முன்னாடி உட்கார்ந்து ஷோ பார்க்குறவங்களை டீச்சர்ஸ் மாதிரி நினைச்சுப்பேன். இப்போ பெஸ்ட் ஃபிரெண்ட்ஸைப் பார்க்குற மாதிரிதான். அதே மாதிரி ஸ்டேஜ்ல ஏழெட்டு நிமிஷம் ஆடுறேன்னா ஆரம்பிக்கும்போது இருந்த எனர்ஜி லெவலோட எனக்கு அதிகமாத்தான் இருக்கும். முன்னே மாதிரி ரெஸ்ட் ரூம் பக்கம் அதிகமா போறதில்லை. ஒரு தடவைதான்.

எப்படி நான் ஸ்டேஜ்ல முழு எனர்ஜி கொடுத்து ஆடுவேனா, அந்த மாதிரிதான் ரிகர்சலும் பண்ணுவேன். பதினைந்து முறை, இருபது முறை நிறுத்தாமத் தொடர்ந்து பண்ணுவேன். அப்படி பிராக் டீஸ் பண்ணும்போது கடைசி செகன்ட்ல ஒரு தப்பு பண்ணிட்டாகூட திரும்ப முதல் லேர்ந்து ஆரம்பிப்பேன். எப்படி என் குரு என்னை பெண்ட் எடுத்தாங்களோ, அப்படி என்னை நானே பெண்ட் எடுத்துப் பேன். முதல்முறை ஆடும்போதே பயங் கரமா மூச்சு வாங்கி எனர்ஜி லெவல் முடிஞ்சிடும். ஆனா, அந்த அசதியோடவே பதினைந்து முறை, இருபது முறைனு பிராக்டீஸ் பண்ணுவேன். அப்படி பண்ணி முடிக்கும்போது என் பாடி சார்ஜ் ஆகிடும். என்னென்னைக்கு எல்லாம் நான் இப்படி பிராக்டீஸ் பண்றேனோ அன்னைக்கு சுத்தமா தூக்கம் வராது.

நான் ரிகர்சல் பண்ணும்போது முக்கால்வாசி நேரம் தனியாத்தான் பண்ணுவேன். என் போன்ல சவுண்ட் போட்டுவிட்டுட்டு லைட் ஆஃப் பண்ணிடுவேன். சின்ன வெளிச் சத்துலதான் ஆடுவேன்.

அதே மாதிரி ஸ்டேஜ் ஷோவுக்கு டான்ஸ் ரிகர்சல் பண்றதைவிட ஆடப் போற அந்தப் பாட்டோட மியூசிக் பிட்ஸை செட் பண்றதுக்குத்தான் எனக்கு அதிக நாட்கள் ஆகும். சின்னச் சின்ன சவுண்ட்ஸை கூட செட் பண்ணணும். எந்த இடத்துல ஸ்லோவா ஆடணும், எப்போ வேகமா ஆடணும், எங்கே டான்ஸர் வரணும், அவங்களோட போஸ் என்ன, ஸ்டேஜை எப்படி யூஸ் பண்ணணும், பாட்டு செலெக்ட் பண்றது, அதில் என்ன கதை சொல்றது? மக்களை எப்படி கனெக்ட் பண்றதுன்னு இதெல்லாம் பண்றதுக்குத்தான் எனக்கு நேரம் ஆகும்.

ஸ்டேஜ் ஷோன்னா இப்போ சுத்தமா பயம் இல்லைன்னு சொல்ல முடியாது. பயத்தை வேற மாதிரி என்ஜாய் பண்ண ஆரம்பிச்சிட்டேன். எப்பவுமே வொர்க் விஷயத்துல நான் ரிலாக்ஸ் ஆக மாட்டேன். வந்த புதுசுல எப்படி இருந்தோமோ அதே எனர்ஜியோடத்தான் ஒவ்வொரு நாளும் இருக்கணும்னு விரும்புறேன். ஆனா உடம்பு வலிக்கும்.

இருந்தாலும் டபுள், ட்ரிபுள் மடங்கு அதிகம் கொடுக்கணும்னுதான் ஓடிட்டிருக்கேன். அதே மாதிரி ஸ்டேஜ்ல இருக்கும்போது டிரெஸ் இப்படி அப்படி கலர்ஃபுல்லா இருக்கணும்னு சொல்வாங்க. எனக்கு எப்பவுமே சிம்பிளா, ஸ்டைலிஷா இருக்கணும். குறிப்பா டான்ஸ் ஆட ஈசியா இருக்கணும். அவ்வளவு தான்.

ஸ்டேஜ் ஷோ பண்ணும்போது ஸ்டெப்ஸ் எதையும் நான் மறந்ததே இல்லை. ‘ஏபிசிடி’ ஹிந்தி பட டைம்ல ஒரு ஷோவில் கலந்துக்கும்போது ஒருமுறை மறந்திருக்கேன். அதை இப்போ நினைச்சா கூட சிரிப்பு வந்துடும், கொஞ்சம் வருத்தமும் வரும். அந்த நிகழ்ச்சியில நானும், என்கூட ‘ஏபிசிடி’ படத்துல நடித்த ரெமோவும் சேர்ந்து டான்ஸ் ஆடினோம். ஷோ ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி டான்ஸர் பாய்ஸ்ல ஒரு பையன் 25 அடி உயரத்துல இருந்து கீழே விழுந்து அடி பட்டுடுச்சு. ஷோ பண்றதா இல்லையான்னு தெரியாத அளவுக்கு அரங்கம் இருந்த சூழ்நிலையில நிகழ்ச்சி ஆரம்பமாயிடுச்சு. தொடக்கத்துல இருந்தே ஒரு ஸ்டெப் மட்டும் மைண்ட்ல ஏறவே இல்லை. அந்த நேரத்துல ஒரு பையனுக்கு இப்படி ஆயிடுச்சேங்கிற யோசனையோடவும் நின்னேன். ஸ்டேஜ்ல, ‘இப்போ பிரபுதேவாவும், ரெமோவும் சேர்ந்து ஆடப் போறாங்க’ன்னு பெரிய பில்டப்போட ஒரு குரல் வந்துச்சு. கமிட் ஆயிட்டோம். அவ்வளவுதான்னு ஸ்டேஜ்ல இறங்கிட்டேன்.

மைண்ட்ல ஒரு விஷயம் செட் ஆச்சுன்னா அது கம்ப்யூட்டர் லாக் மாதிரிதான். கரெக்டா நான் முன்னாடியே சொன்ன மாதிரி ஸ்டேஜ்ல அந்த ஸ்டெப் வரும்போது மறந்துட்டேன். அப்போ அந்த இடத்தை வேற மாதிரி ஆடி சமாளிக்கவும் செய்தேன். என்ன பார்த்து ரெமோவும் அந்த ஸ்டெப்பை விட்டுட்டார். அதைப் பார்த்ததும், ‘அப்பாடா இவரும் விட்டுட்டாரு’ன்னு நிம்மதியா இருந்துச்சு. சந்தோஷமாவும் இருந்துச்சு. ஆக்சுவலா அந்த நேரத்துல எனக்கு சிரிப்பு கூட வந்துச்சு. ஏன்னா, நான் ஏதேதோ ஆடி சமாளிச்சிட்டேன். அவர் நான் சாமளிக்கிறதைப் பார்த்து, ‘என்ன புதுப் புது மூவ் மெண்டா இருக்கே’ன்னு கன்ஃபியூஸ் ஆயிட்டார்.

இப்போ உங்கக்கிட்ட சொல்ற வரைக்கும் இது யாருக்கும் தெரியாது. என்னைக்காவது ஒருநாள் குட்டு வெளிப்படும்னு சொல்வோமே அது இதுதான்னு நினைக்கிறேன்.

இது மாதிரி இன்னும் நிறைய குட்டு வெளிப்பட்ட விஷயங்கள் இருக்கு. அதை அடுத்த வாரம் சொல்றேனே.

- இன்னும் சொல்வேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x