Published : 09 Aug 2016 04:48 PM
Last Updated : 09 Aug 2016 04:48 PM

யூடியூப் பகிர்வு: அடிமை சுதந்திரம்- குறும்படம்

பொழுது விடிந்துவிட்டது. பறவைகள் படபடக்கின்றன. விமானம் உயரப் பறக்கிறது. அன்று சுதந்திர தினம்.

பள்ளி சீருடை போன்ற உடையணிந்து கையில் பையோடு சிறுமியொருவர் நடந்து வருகிறார். கூவத்தை ஒட்டிய ஒரு வீட்டின் கதவைத் தட்டி அங்கே தூங்கிக்கொண்டிருக்கும் சிறுவனை அழைக்கிறார். அச்சிறுவனோ இன்னும் கொஞ்ச நேரம் தூங்குகிறேன் என்று திரும்ப உறங்குகிறான்.

சிறுவனின் அம்மா வற்புறுத்திய பிறகு எழும் சிறுவன் பல் துலக்கி, குளித்து, இறந்துபோன அப்பாவுக்கும் தெய்வத்துக்கும் தீபம் காட்டி, சட்டை அணிந்து வெளியே போகிறான். இதிலென்ன இருக்கிறது? அவர்கள் இருவரும் பள்ளிக்குத்தானே செல்கிறார்கள் என்கிறீர்களா? நானும் அப்படித்தான் நினைத்தேன்.

ஆனால் பள்ளிக்குச் செல்லாமல் அவர்கள் செல்வது எங்கே.. அதற்கான விடையோடு படம் முடிந்து விடவில்லை. அங்கே எழும் கேள்விதான் படத்தின் அடிநாதத்தை வலியோடு வாசிக்கச் செய்கிறது. புரியவில்லையா? விடை காண படம் பாருங்கள்.

காணொளி இணைப்பு