Last Updated : 28 Feb, 2017 09:38 AM

 

Published : 28 Feb 2017 09:38 AM
Last Updated : 28 Feb 2017 09:38 AM

இணைய களம்: மனுஷ்ய புத்திரன் பேச்சு சரியா?

திமுக இல்லையென்றால், சபாநாயகர் தனபால் படித்தே வந்திருக்க முடியாது என்கிற மனுஷ்ய புத்திரன் பதிவு, தனபால் மீதான விமர்சனத்தையே ஓவர்டேக் செய்யும் ஆணவ வார்த்தைகள்.

உலகத்தில் எந்த ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேறி மேலே வந்தாலும், அது நினைத்துப் பார்க்கப்பட வேண்டிய ஒன்றோ, விசுவாசமாய் இருக்க வேண்டிய ஒன்றோ கிடையாது. தனக்கான உரிமையை, ஒரு கூட்டத்தின் உரிமையை மீட்டெடுப்பது யாரோ கொடுத்த நன்கொடை அல்ல. ஓடுகிற நதியில் நீர் பருகுவது யானையா, சிங்கமா, நரியா, நாயா என்கிற எந்த மனிதனின் பாகுபாடுமின்றி இயற்கை எப்படி எல்லோருக்குமானதோ அந்த அளவு, உரிமையை மீட்பதும் அதை நோக்கி நகர்வதும் இயற்கையான விஷயமே அன்றி புதிதாய் உருவாக்குவதல்ல.

அவியல் வெந்துகொண்டிருக்கும்போது சிலிண்டர் காலியானதைப் போல ஒருபக்கம் வெந்த திமுகவின் முக்கால் முற்போக்குகள் இப்படித்தான் நேரம் கிடைக்கும்போதெல்லாம், கீழிருந்து மேலே வந்தவர்கள் எப்போதும் ஒருவித விசுவாசத்தோடும், பணிவோடும் இருக்க வேண்டுமென நினைக்கிறார்கள். அந்த கீழிருந்து வந்தவர்களில் ஏனோ பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட இனத்தவர் இல்லை. தலித் பிரச்சினைகளில்தான் இத்தகைய பேச்சுகள் அடிபடுகின்றன.

இந்திய சாதி அமைப்பே, படிநிலை சாதி அமைப்பு. தெரிந்தோ தெரியாமலோ இதே படிநிலை அமைப்பின்படிதான் சமூகமும் முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பதை யோசிக்க வேண்டும். இந்தப் படிநிலையை மனதிலிருந்து முழுவதும் அகற்றி உரிமைகள் ஒரே குரலில், ஒரே வீரியத்தில் இருக்க வேண்டுமே தவிர, பிற்படுத்தப்பட்டோருக்கு அதிகாரம், பணம் கையில் வந்து, பின்பு மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்குச் சாத்தியமாகி, தற்போது இது இங்கேயே தேங்கிவிட்டது.

இந்த நிலையிலிருந்து அடுத்த கட்டத்துக்கு இழுத்துச் செல்ல வேண்டிய காலத்தின் கட்டாயம், நிர்ப்பந்தம் எல்லா முற்போக்கு இயக்கங்களுக்குமே இருக்கின்றன. ஆனால், இங்கே பிராமணியத்தை மீண்டும் மீண்டும் விமர்சனம் செய்து, தாங்கள் வயிறு வளர்ப்பதற்காகவே பிராமணியத்தை எதிர்த்து, அடுத்தநிலை செல்லாமல் வசதியான சிம்மாசனத்தில் அமர்ந்து, இறுகப் பிடித்து ஆணவம் பேசும்போது மீண்டும் அங்கே பிராமணியம் வெற்றி பெறுகிறது. பிராமணியம் என்பது இனமல்ல, தன்மை. அப்படிப் பார்த்தால், நேரம் கிடைக்கும்போதெல்லாம் கோர முகம் காட்டும் எவ்வளவோ பிராமணர்கள் எல்லா முன்னேறிய சாதிகளிலும் இருக்கிறார்கள்.

“அந்த அய்யர் நல்ல மனுஷன் பா, பாகுபாடு பார்க்க மாட்டார், வீட்டுக்குள்ள எல்லாம் உட்கார வச்சி காபி கொடுப்பார்” என்பது எப்படி அடக்குமுறையில் இருந்து கொஞ்சம் மாறி, ஒருவன் குறைந்தபட்சம் அங்கீகரிக்கப்படுவதையே பெரிய விஷயமாகப் பேசுவது அசிங்கமோ, அந்த அளவு அசிங்கம் ஆ.ராசாவுக்கு மந்திரி பதவி கொடுத்ததைச் சொல்லிக் காட்டுவதும், அவரை அங்கீகரித்ததும். திமுகவினர் இதை ஒவ்வொரு முறையும் கையில் எடுப்பார்கள். சமூக முன்னேற்றம் ஒரே இடத்திலெல்லாம் நிற்காது, அதை யார் கையில் எடுத்தாலும் எடுக்காமல் போனாலும், நாம் பேசினாலும் பேசாமல் போனாலும், அது காலத்தால் நடந்தே தீரும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x