Published : 15 Oct 2014 11:32 AM
Last Updated : 15 Oct 2014 11:32 AM

பிரட்ரிக் நீட்சே 10

ஜெர்மனியில் பிறந்து உலகம் முழுவதும் தத்துவவியல் மற்றும் இறையியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய தத்துவமேதை பிரட்ரிக் வில்ஹெம் நீட்சேயின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

# ஜெர்மனியின் பிரஷ்யா பகுதியில் ஒரு குக்கிராமத்தில் பிறந்தவர். பிஞ்சுப் பருவத்திலேயே கிறிஸ்தவ நெறிகள் போதிக்கப்பட்டு வளர்ந்தார். 14 முதல் 19 வயது வரை நாம்பர்கில் உள்ள தலைசிறந்த உறைவிடப் பள்ளியில் பயின்றார்.

# 20-வது வயதில் பான் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து இறையியல், தத்துவவியல் பயின்றார். ஜெர்மானிய தத்துவ மேதை ஆர்தர் ஸ்கோபன்ஹவரின் படைப்புகள் இவருக்குள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. சுவிஸ் பல்கலைக்கழகம் இவரது 24-வது வயதில் பேராசிரியர் பதவியை வழங்கியது.

# 1872-ல் இவரது முதல் படைப்பான ‘The Birth of Tragedy out of the Spirit of Music’ என்ற நூல் வெளியானது. இதைத் தொடர்ந்து இவர் எழுதிய நூல்களில் புரட்சிகரமான கருத்துகள், கிறிஸ்தவ மதத்துக்கு எதிரான சிந்தனைகள் இடம்பெற்றன.

# இவர் எழுதிய நூல்களைவிட அதிக எண்ணிக்கையில் இவரது வாழ்க்கையை விவரிக்கும் நூல்களும், இவரது சிந்தனைகள் குறித்த ஆய்வுக் கட்டுரைகளும் உலகின் பல்வேறு மொழிகளில் வெளிவந்துள்ளன.

# பாவம் பற்றிய குற்ற உணர்வுகள் மனிதனுக்கு பெரும் சுமையாக மாறி வாழ்வை கசப்பாக்குவதாக நீட்சே குறிப்பிட்டுள்ளார். ‘கடவுள் இறந்துவிட்டார்’, ‘நான் ஏன் கிறிஸ்தவன் இல்லை’ என்பது போன்ற இவரது பிரகடனங்கள் கடும் விமர்சனங்களை எதிர்கொண்டன.

# ‘எது என் உயிருக்கு தீங்கு விளைவிப்பதில்லையோ அதுவே எனக்கு வலிமையைத் தருகிறது’ என்ற இவரது வாதம் என்றும் முடிவுறாத விவாதத்துக்கு உரியது. வெறுமை நிலை அல்லது மறுத்தலியல் என்று குறிப்பிடப்படும் நீலிசம் (Nihilism) சித்தாந்தத்துக்கு புதிய பரிமாணம் கொடுத்தார்.

# ‘மனிதன் சொர்க்கத்தை அடைய எப்போதும் மன்னிப்பு கோரி நிற்கிறான். இதன்மூலம் அவன் சொர்க்கத்தை அடைகிறானோ இல்லையோ, வாழும்போதே தனக்கான நரகத்தை சிருஷ்டித்துக்கொள்கிறான்’ என்று ஜராதுஷ்டர் கூறியதாக தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

# நீட்சே பலவீனமாவர், மனக் குழப்பங்கள் நிறைந்தவர் என்று ரஸ்ஸல் உட்பட பலர் கருதினர். தனி மனித சுதந்திரத்துக்கான அவரது தத்துவங்கள் சமூக விடுதலைக்கு உதவாது என்று இடதுசாரிகள் கூறினர். ஆனால், அவர் எழுதிய பல புத்தகங்கள் பின்னாளில் பிரபலமடைந்து மேற்கத்திய தத்துவப் போக்கையே புரட்டிப்போட்டு இன்று வரை ஆதிக்கம் செலுத்துகிறது.

# நீட்சேயின் சில கருத்துகளை ஹிட்லரின் நாஜிப் படையினர் தங்களது இனவெறி நடவடிக்கைகளை நியாயப்படுத்தப் பயன்படுத்திக்கொண்டது விந்தையான முரண்.

# இவரது மானுட விடுதலைக்கான அறைகூவல்கள் மற்றும் தத்துவங்கள் பின்னாளில் உலகம் முழுவதும் ஏராளமான தத்துவவாதிகளின் பங்களிப்புகளுக்கும் அடிப்படையாக அமைந்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x