

நோபல் பெற்ற அமெரிக்க கணித மேதை
* பொருளியலுக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்க கணித வல்லுநர் லாய்டு ஸ்டோவெல் ஷாப்லி (Lloyd Stowell Shapley) பிறந்த தினம் இன்று (ஜூன் 2). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாநிலம் கேம்பிரிட்ஜில் (1923) பிறந்தார். தந்தை புகழ்பெற்ற வானியலாளர். பள்ளிப் படிப்பு முடிந்தவுடன் பிலிப்ஸ் எக்ஸிடர் அகாடமியில் பயின்றார். சிறு வயது முதலே எதையும் கணித அடிப்படையில்தான் நோக்குவார்.
* கணிதத்தின் மடக்கைகள் (Logarithms) பிரிவில் 6 வயதி லேயே அசாதாரண அறிவுடன் திகழ்ந்தார். இதனால், கணித விளையாட்டுகளில் யாராலும் தோற்கடிக்க முடியாத திறன் பெற்றிருந்தார். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் பயின்றார். இடையில் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். சோவியத்தின் வானிலைக் குறியீட்டைக் கண்டறிந்ததற்காக பிரான்ஸ் ஸ்டார் பதக்கம் பெற்றார்.
* மீண்டும் ஹார்வர்டு திரும்பி, கணிதத்தில் பட்டம் பெற்றார். ராண்ட் ஆய்வுக் கழகத்தில் ஓராண்டுக் காலம் பணியாற்றிய பிறகு, பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து படிப்பைத் தொடர்ந்தார். 1953-ல் முனைவர் பட்டம் பெற்றார். மீண்டும் கணித ஆய்வைத் தொடர்ந்தார்.
* அப்போதுதான், ‘கேம் தியரி’யில் இவரது பெயரால் வழங்கப்படும் ஷாப்லி மதிப்பு மற்றும் இதற்கான முக்கியத் தீர்வைக் கண்டறிந்தார். ‘ஸோ லாங் சக்கர்’, ‘மெல் ஹாஸ்னர்’, ‘மார்ட்டின் ஷுபிக்’ உள்ளிட்ட போர்டு கேம்களை (Board Game) கண்டறிந்தார். சிறிது காலம் இங்கு ஆய்வுகளை மேற்கொண்டவர் மீண்டும் ராண்ட் கழகத்துக்கு திரும்பினார். அங்கு 1954 முதல் 1981 வரை பணியாற்றினார்.
* கணித, பொருளியல் துறைகளில் தொடர்ந்து ஆராய்ச்சி மேற் கொண்டார். கணித அடிப்படையில், ஆண் பெண் இடையே உடலியல் ரீதியிலான கச்சிதமான பொருத்தம் குறித்த ஆராய்ச்சி யிலும் ஈடுபட்டார். இதுதொடர்பான பல்வேறு கோட்பாடுகள், கருத்துகளை முன்வைத்தார். இது ‘மேட்சிங் தியரி’ எனப்படுகிறது.
தானமாகப் பெறப்படும் உடல் உறுப்புகள், அவற்றைப் பெறுபவரின் உடலில் நன்கு பொருந்திப் போவதற்கான அமைப்புகளை மேம்படுத்துவதற்கான அடிப்படையாக இவரது கருத்துகள் அமைந்தன. கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் கணிதம், பொருளியல் துறைகளில் இறுதிவரை பணியாற்றினார்.
* கணிதப் பொருளியல் துறையில், குறிப்பாக ‘கேம் தியரி’ கருத்துருவைக் கண்டறிந்ததில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். பொருளியல் துறையில் பயன்பாட்டுக் கோட்பாட்டை மேம்படுத்தினார். நிலையான ஒதுக்கீடு கோட்பாடு (Theory of Stable Allocations), சந்தை வடிவமைப்பு நடைமுறையைக் கண்டறிந்ததற்காக ஆல்வின் ரோத்துடன் இணைந்து, 2012-ம் ஆண்டின் பொருளியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
* ஷாப்லி மதிப்பு, போண்ட்ரேவா ஷாப்லி தேற்றம், ஷாப்லி ஷுபிக் சக்தி குறியீடு, கேல் ஷாப்லி அலாகிருதம் உட்பட ஏராளமான தேற்றங்கள், தீர்வுகள், கேம்களை கண்டறிந்துள்ளார். தன் ஆய்வுகள், கண்டுபிடிப்புகள் குறித்து பல்வேறு இதழ்களில் கட்டுரைகள் எழுதினார். ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.
* அமெரிக்கப் பொருளியல் கழகம், அமெரிக்க கலை, அறிவியல் அகாடமி, தேசிய அறிவியல் கழகம், அமெரிக்க கணிதக் கழகம், உள்ளிட்ட பல அமைப்புகளின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். ஜெருசலேம் ஹீப்ரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின.
* வாழ்நாள் இறுதிவரை கணிதம், பொருளியல் துறைகளின் மேம்பாட்டுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய லாய்டு ஷாப்லி கடந்த 2016-ம் ஆண்டு 93-வது வயதில் மறைந்தார்.