Published : 20 Aug 2016 04:08 PM
Last Updated : 20 Aug 2016 04:08 PM

சிலை சிலையாம் காரணமாம் - 33: ’ஆபரேஷன் ஹிடன் ஐடல்ஸ்’

பழமையான சிலைகள் உள்ளிட்ட கலைப்பொருட்கள் இந்தியாவில் சுமார் 70 லட்சம் உள்ளன. இதில் சுமார் 13 லட்சம் பொருட்களுக்கு மட்டுமே முறையான ஆவணப் பதிவு உள்ளது. 2010 - 2012 காலகட்டத்தில் மட்டுமே இந்தியாவுக்குச் சொந்தமான சிலைகள் உள்ளிட்ட 4,408 கலைப்பொருட்கள் கடத்தப்பட்டுள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகத்தின் அறிக்கை சொல்கிறது.

20 ஆயிரம் கோடி ரூபாய்

1950-லிருந்து சுமார் 20 ஆயிரம் பழமையான கலைப்பொருட்கள் இந்தியாவுக்கு வெளியே கடத்தப்பட்டுள்ளதாகவும் அதன் மதிப்பு சுமார் 20,000 கோடி ரூபாய் எனவும் இன்னொரு அறிக்கை சொல்கிறது. இந்தியாவிலிருந்து 1989 வரை 50 ஆயிரம் பழமையான கலைப்பொருட்கள் மற்றும் சிலைகள் திருடப்பட்டுள்ளதாக 2011-ல் ’யுனெஸ்கோ’ அறிவித்துள்ளது.

முடக்கப்பட்ட கன்டெய்னர் ரகசியம்

இந்திய கோயில்களில் இருந்து கபூர் ஆட்களால் திருடப்பட்ட 80 கல் மற்றும் ஐம்பொன் சிலைகள் ‘மார்பிள் கார்டன் டேபிள் செட்’ ஃபர்னிச்சர்ஸ் என்ற பெயரில் கன்டெய்னர் மூலம் 2007-ல் மும்பை துறைமுகம் வழியாக நியூயார்க்கிற்கு கடத்தப்பட்டது. இது இந்திய சுங்கத்துறை அதிகாரிகளுக்குத் தெரிந்து தடுத்து நிறுத்துவதற்குள் மும்பையிலிருந்து கப்பல் கிளம்விவிட்டது. அதனால் நியூயார்க் சுங்கத் துறைக்கு தகவல் கொடுத்து கன்டெய்னர் முடக்கப்பட்டது.

அதற்குள்ளாக இந்தக் தகவல் சில கறுப்பு ஆடுகள் மூலமாக கபூருக்கு தெரிவிக்கப்பட்டதால், ’கன்டெய்னரில் வரும் பொருட்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என எழுதிக் கொடுத்துவிட்டு தப்பித்துக் கொண்டார் கபூர். அன்பிறகு, இந்த விவகாரத்தைக் கிடப்பில் போட்டுவிட்டார்கள். தொல்லியல் துறை, சுங்கத் துறை, அரசியல் புள்ளிகள் என பலரும் கபூரோடு கைகோர்த்து நின்றதால் கன்டெய்னர் ரகசியங்களை வெளிக்கொண்டுவர இந்தியத் தரப்பில் யாரும் அக்கறை எடுத்துக்கொள்ளவில்லை.

’ஆபரேஷன் ஹிடன் ஐடல்ஸ்’

இதனிடையே, இரண்டு ஆண்டுகள் கழித்து அமெரிக் காவின் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி போலீஸுக்கு பிரெண்டன் ஈஸ்டர் (Brendon Easter) என்பவர் சிறப்பு விசாரணை அதிகாரியாக நியமிக்கப்படுகிறார். இவர் பொறுப்பேற்றதும் கபூரின் கன்டெய்னர் விவகாரத்தைத் துருவுகிறார். கபூர் வட்டாரத்தின் நடவடிக்கைகளை கவனிக்கத் தொடங்கிய பிரெண்டன், அந்தக் கன்டெய்னரைத் திறந்து பார்த்தபோது அதிலிருந்த ஐந்து ’கிரேட்டு’களில் கடத்தல் சிலைகள் உள்ளிட்டவை இருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.

இதையடுத்து, கபூரின் சிலைக் கடத்தல் வேலைகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ’ஆபரேஷன் ஹிடன் ஐடல் (Operation Hidden Idol)’ என்ற நடவடிக்கையை தொடங்குகிறது ஹோம்லேண்ட் செக்யூரிட்டி போலீஸ். இதற்காக, கபூரின் ’ஆர்ட் கேலரி’யில் தனது உளவாளி ஒருவரை வேலைக்குச் சேரவைக்கிறார் பிரெண்டன். உளவாளி மூலமாக கபூரின் கடத்தல் நடவடிக்கைகள், போலி ஆவணங்கள் தயாரித்தல் உள்ளிட்ட விஷயங்களை ஆடியோ மற்றும் வீடியோ ஆவணங்களாக திரட்டியவர், கபூரின் ’லேப் டாப்’ ரகசியங்களையும் அவருக்கே தெரியாமலேயே கைப்பற்றினார்.

கபூரிடம் 2,622 சிலைகள்

இதற்கிடையில் தான், கபூரை ஜெர்மனியில் கைது செய்கிறது ஜெர்மனி ‘இண்டர்போல்’ போலீஸ். இதையடுத்து, இன்னும் வேகமாக இயங்கிய பிரெண்டன், நியூயார்க்கில் கபூருக்குச் சொந்தமான ஆர்ட் கேலரி, கோடவுன்கள் என 12 இடங்களில் சோதனை நடத்தினார். அங்கிருந்து ஐம்பொன் சிலைகள் உள்பட மொத்தம் 2,622 சிலைகள் கைப்பற்றப்பட்டன. இதன் மொத்த மதிப்பு 107,682,000 டாலர்கள். இந்திய மதிப்புக்கு சுமார் ரூ.710 கோடி. அதில் எண்பதுக்கும் மேற்பட்ட சிலைகள் தமிழகத்தின் சொத்து.

இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான கலைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டாலும் அதில் சம்பந்தப்பட்ட நபர்களை கைது செய்து மேல்நடவடிக்கையை தொடரமுடியாத சூழல். அதனால், தமிழக சிறையில் அடைபட்டுள்ள கபூரை விசாரணைக்கு எடுப்பதற்காக தமிழக போலீஸின் உதவியை நாடுகிறது ஹோம்லேண்ட் செக்யூரிட்டி போலீஸ்.

இதற்காக பிரெண்டன் ஈஸ்டர் தலைமையில் ஹோம்லேண்ட் செக்யூரிட்டி போலீஸார் 2014-ல் தமிழகம் வந்தனர். அவர்களுக்கு தமிழக போலீஸார் போதிய ஒத்துழைப்புக் கொடுக்கவில்லை. நான்கு மாதங்கள் கழித்து மீண்டும் தமிழகம் வந்த பிரெண்டன் ஒருவாரம் இங்கே தங்கி இருந்தார். பிரெஞ்சு ஆய்வு நிறுவனத்திற்கும் சென்று விசாரணை நடத்தினார். அந்தப் பயணத்தில், கபூரிடம் விசாரணையை முடித்துக் கொண்டு அவரை தங்கள் வசம் ஒப்படைக்கும்படி பிரெண்டன் கேட்டதாகவும் அதற்கு தமிழக போலீஸ் மறுத்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில், பொருளாதாரக் குற்றத் தடுப்புப் பிரிவு கூடுதல் டி.ஜி.பி. பிரதீப் வி.பிலிப் கடந்த மே மாதம் அவசரப் பயணமாக நியூயார்க் சென்றார். அப்போது, சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரித்து சிலைகளை மீட்கும் விவகாரத்தில் தமிழக போலீஸார் மீது அதிருப்தி தெரிவித்த ஹோம்லேண்ட் செக்யூரிட்டி சர்வீஸ் போலீஸார், இனியும் இதேநிலை தொடர்ந்தால் தாங்கள் கைப்பற்றி வைத்திருக்கும் இந்தியாவின் 200 சிலைகளை இந்தியப் பிரதமரிடம் நேரில் ஒப்படைத்துவிடுவோம் என நெருக்கடி கொடுத்தார்கள். அதை சமாளிப்பதற்காக இங்கே தீனதயாள் உள்ளிட்டவர்கள் மீது அதிரடி நடவடிக்கையை தொடங்கியது சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு (சி.ஐ.டி.) போலீஸ்.

சிலைகள் பேசும்.. | 'The India Pride Project' உதவியுடன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x