Last Updated : 16 May, 2017 04:33 PM

 

Published : 16 May 2017 04:33 PM
Last Updated : 16 May 2017 04:33 PM

ஒரு சுவரின் கதை!

'ஒரு சுவரின் கதை' என்றவுடன் ஏதோ இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் கிழக்கு - மேற்கு ஜெர்மனிக்கு இடையே எழுப்பப்பட்ட பெர்லின் சுவர் பற்றிய கதை என்று நினைத்துவிட வேண்டாம். இது வரலாற்றுக் கதையல்ல. சமகாலத்தில் நம்மில் பலரும் காட்டும் அலட்சியத்தின் கதை.

சுவர் எழுப்பப்படுவது பாதுகாப்பாக மட்டுமே. ஆனால், நம் ஊரில் சுவர் எங்கு கிடைத்தாலும் அதில் சினிமா போஸ்டர் ஒட்டப்படும், ஆண்மைக் குறைபாடா? மூலம் தொந்தரவா என்றெல்லாம் விளம்பரம் செய்யப்படும், எச்சில் துப்பப்படும், சிறுநீர் கழிக்கப்படும், சில பல கெட்ட வார்த்தைகள் எழுதப்படும், ஏதாவது பெண்ணின் பெயரும் கூடவே ஒரு செல்போன் எண்ணும் எழுதப்பட்டிருக்கும் (அந்த எண்ணுக்கு அழைத்துப் பார்க்கும் நபர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்) இன்னும் பல பாழாய்ப்போன விஷயங்கள் இருக்கும்.

பலரும் கூடும் பொதுவான இடத்தில் இப்படி அலங்கோலமாக நிற்கும் ஒரு சுவரைத் தாண்டி நம்மால் மவுனமாக மூக்கைப் பொத்திக் கொண்டு செல்ல முடிந்தால் நாமும் ஒரு நடக்கும் சுவர்தான்.

ஆனால், இவர்கள் அப்படிச் செல்லவில்லை. சென்னை நகரில் எங்கெல்லாம் அசுத்தம் மிகுந்திருக்கிறதோ அங்கெல்லாம் இரவில் தூய்மைப் பணி மேற்கொண்டு, விடியும்போது அந்த இடத்தைப் பளிச்சிட செய்கின்றனர் துவக்கம் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர்.

ஷாப்பிங் மால்கள், செல்போன்கள், நாகரிக உடைகள், நுனிநாக்கு ஆங்கிலம் இப்படி பொதுமைப்படுத்தப்பட்டுள்ளனர் நம் இளைஞர்கள். ஆனால், அதையும் தாண்டி சில இளைஞர்கள் சில மாற்றங்களுக்காக பயணப்பட்டு கொண்டிருக்கின்றனர்.

சென்னை மயிலாப்பூர் எப்போதுமே பரபரப்பாக இருக்கக்கூடிய பகுதிகளில் ஒன்று. அப்பகுதியின் கச்சேரி சாலையில் உள்ள ஒரு சுற்றுசுவர் அசுத்தத்தின் அடையாளமாக இருந்தது. எல்லோரும் முகம் சுளித்துக் கொண்டு கடந்து சென்ற அந்த சுவரை, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் துவக்கம் அமைப்பினர் சுத்தப்படுத்தி வண்ண ஓவியங்கள் தீட்டி அழகுபடுத்தினர். இரவில் வீடு செல்லும்போது அந்த சுவரை பரபரவென கடந்து சென்ற சிலர் காலையில் அந்த சுவரின் புதுப்பொலிவைப் பார்த்து செல்ஃபி எடுத்துச் சென்றனர்.

மார்ச் 2017 வரையில் அந்த சுவர் சுவராகவே இருந்தது. அவ்வழியாக அவ்வப்போது சென்று சோதனை செய்த துவக்கம் அமைப்பினர் மக்கள் ஒத்துழைப்பில் பெருமிதம் கொண்டனர்.

ஆனால், மார்ச் 2017-ல் ஏதோ ஓர் அரசியல் கட்சி மயிலாப்பூர் பகுதியில் பொதுக்கூட்டம் நடத்த கச்சேரி சாலை சுற்றுச்சுவரில் போஸ்டர் ஒட்டியது. அப்புறம் என்ன தினமும் ஒரு போஸ்டர் என பழைய நிலைக்கே திரும்பியது அந்த சுவர்.

ஓவியங்களுடன் நின்றிருந்த சுவர் ஒழுங்கீனத்தின் உருவமாக மாறியிருந்ததைக் கண்டனர் துவக்கம் அமைப்பினர். தங்கள் உழைப்பும் நேரமும் வீணாகியிருந்தாலும் அவர்கள் துவண்டுவிடவில்லை. சுற்றுச்சுவரில் போஸ்டர் ஒட்டிய அரசியல் கட்சிகளிடமே அதை அப்புறப்படுத்துமாறு கோரிக்கை விடுத்தனர். அது கண்டுகொள்ளப்படவில்லை. அரசியல்வாதிகள்தான் அசிங்கப்படுத்தினார்கள் பொதுமக்களாவது இனியும் அசுத்தம் செய்யாமல் இருங்கள் என்ற வேண்டுகோளும் செவிகளில் விழவில்லை.

அதனால், மீண்டும் சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (14.05.2017) அன்று இரவு 9 மணிக்கு சுத்தப்படுத்தும் பணியைத் தொடங்கினர். காலை 5 மணிக்கு பணி முடிந்தது. சுவர் பளிச்சிட்டது.

இது குறித்து அவர்களிடம் கேட்டபோது, "முதலில் உங்களை அவர்கள் உதாசீனப்படுத்துவார்கள், பின்னர் எள்ளி நகையாடுவார்கள், பின்னர் சண்டையிடுவார்கள். இறுதி வெற்றி உங்களுக்கே!" என்ற காந்தியின் வார்த்தைகளே எங்கள் தாரக மந்திரம் என்ற நிதானமாகக் கூறினர்.

உங்கள் பகுதியிலும் நிச்சயம் அசுத்துமான இடங்கள் இருக்கும் அதை சுத்தப்படுத்த உங்கள் பகுதிவாசிகளை ஒருங்கிணைத்து செயல்படுங்கள். சமுதாய மாற்றம் நிகழ வேண்டுமானால் ஒவ்வொரு தனி நபரிடமும் மாற்றம் ஏற்பட வேண்டும். நாம் செய்யும் அசுத்தத்தை வேறு யாராவது சுத்தப்படுத்துவார்கள் என்ற மெத்தனம் தான் இந்தியா இன்னும் 'தூய்மை இந்தியா' போன்ற திட்டங்களை அறிவித்துக் கொண்டிருக்கக் காரணமாக இருக்கிறது.நம்மில் மாற்றம் தொடங்கட்டும் துவக்கம் அமைப்பினர் பாணியில்!

சுத்தப்படுத்தும் முன் சுற்றுச்சுவர் | படம்: எல்.சீனிவாசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x