

பிரபல பிரபல இந்துஸ்தானி பாடகர்
இந்துஸ்தானி இசைக் கலைஞர் குமார் கந்தர்வா (Kumar Gandharva) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 8). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* கர்நாடகாவின் பெல்காம் மாவட்டம் சுலேபாவி என்ற இடத்தில் (1924) பிறந்தார். இயற்பெயர் ஷிவ்புத்ர சித்தராமையா கோம்காலி. சிறு வயதிலேயே இசையில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
* ஏழு வயது சிறுவனாக இருந்தபோது, இசை மேதைகளின் பாட்டுகளை ஒருமுறை கேட்டால் அதை அப்படியே ஸ்வரம் பிசகாமல் பாடுவார். 10 வயது முதலே சங்கீத விழா மேடைகளில் பாடத் தொடங்கினார். முறைப்படி இசை பயில்வதற்காக பிரபல கலைஞர் பி.ஆர்.தியடோரிடம் அனுப்பிவைத்தார் தந்தை.
* புனேயில் பேராசிரியர் தேவ்தர், அஞ்சனி பாயீ மால்பேகரிடமும் இசைக் கல்வி பெற்றார். ஒருசில ஆண்டுகளிலேயே இந்துஸ்தானி இசை உலகில் நட்சத்திரமாக ஜொலிக்கத் தொடங்கினார். ‘குமார் கந்தர்வா’ (கந்தர்வ குமாரன்) என்று அழைக்கப்பட்டார். அதுவே இவரது பெயராக நிலைத்துவிட்டது.
* ஏராளமான இசை நிகழ்ச்சிகளை நடத்தினார். புகழ், கவுரவம், செல்வம் அனைத்தும் இவரைத் தேடி வந்தன. மத்தியப் பிரதேசத்தில் 1947-ல் குடியேறினார். அப்போது இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. காசநோய் பாதித்திருப்பதாக மருத்துவர்கள் முதலில் தவறாக கூறினர். பின்னர், அது நுரையீரல் புற்றுநோய் என்று கண்டறியப்பட்டது.
* அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் என்று கூறிய மருத்துவர்கள், அதற்குப் பிறகு இவர் பாட முடியாது என்று கூறியதால், இவர் தயங்கினார். குடும்பத்தினர், நண்பர்களின் வற்புறுத்தல் காரணமாக அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார். அதைத் தொடர்ந்து, பாட முடியாவிட்டாலும்கூட இசையின் பல்வேறு அம்சங்களைக் குறித்துச் சிந்திப்பதில் பெரும்பாலான நேரத்தை செலவிட்டார்.
* யாரையாவது பாடச் சொல்லிக் கேட்பார். பறவைகளின் ஒலி, காற்றின் ஓசை எனத் தன்னைச் சுற்றியுள்ள அனைத்தையும் இசையாகவே கண்டார். இவரது மனைவி பானுமதியும் பிரபல பாடகிதான். மனைவியின் அன்பான கவனிப்பால் 6 ஆண்டுகளில் உடல்நிலை தேறினார்.
* தீவிர ரசிகரான மருத்துவர் ஒருவர் இவரைப் பார்க்க வந்தார். அவர் தந்த நம்பிக்கை, உற்சாகம், பயிற்சியால் மீண்டும் பாடத் தொடங்கினார். ஆனால், இவரது குரலும் பாடும் பாணியும் சற்று மாறியிருந்தது. அதையே சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டார்.
* பாரம்பரிய இசையைப் புறக்கணிக்காமல், அதில் புதுமைகளைப் புகுத்தினார். இசையில் இவரது புதுமையான அணுகுமுறை பல புதிய ராகங்கள் உருவாகக் காரணமாக அமைந்தது. பல பழைய ராகங்களைச் சேர்த்து புதிய ராகங்களை உருவாக்கினார். கிராமிய இசையிலும் முத்திரை பதித்தார். இசை வல்லுநர்கள், ரசிகர்களால் ‘பண்டிட்ஜி’ என மரியாதையுடன் அழைக்கப்பட்டார்.
* சாஸ்திரீய இசைக்கு இணையாக கிராமிய இசையை உயர்த்தினார். தானாகவே இயற்றி இசையமைத்து பந்திஷ்கள், தரானே ஆகியவற்றைப் பாடினார். கபீரின் ‘நிர்பய நிர்குண குண் ரே காவூங்கா’ இவரது ‘மாஸ்டர்பீஸ்’ எனப் போற்றப்படுகிறது.
* இந்துஸ்தானி இசைக்கு இவரது மகத்தான பங்களிப்புக்காக பத்மபூஷண், பத்மவிபூஷண் ஆகிய விருதுகள் வழங்கப்பட்டன. இந்திய அரசின் திரைப்படப் பிரிவு இவரைப் பற்றிய ஆவணப்படம் தயாரித்தது. பாரம்பரிய இசைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கியவரும், பிறவிப் பாடகர், இசை மேதை எனப் புகழப்பட்டவருமான குமார் கந்தர்வா 68-வது வயதில் (1992) மறைந்தார்.