ஜான் லாக் 10

ஜான் லாக் 10
Updated on
2 min read

ஜான் லாக் - இங்கிலாந்து தத்துவமேதை

முற்போக்கான கருத்துகளைக் கூறிய இங்கிலாந்து தத்துவமேதையும், எழுத்தாளருமான ஜான் லாக் (John Locke) பிறந்த தினம் இன்று (ஆகஸ்ட் 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் (1632) பிறந்தார். தந்தை வழக்கறிஞர். பள்ளிப்படிப்பை முடித்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்றார். இளம் வயதிலேயே அறிவியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

* பிரிட்டன் தேசிய அறிவியல் வளர்ச்சிக் கழக உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல விஞ்ஞானிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். மருத்துவத்திலும் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஆனால், எப்போதாவதுதான் மருத்துவம் பார்த்தார். இவற்றைவிட தத்துவத்திலும், தத்துவமேதைகளுடன் உரையாடுவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

* ஷாஃப்டஸ்பரி பிரபுவுடன் ஏற்பட்ட நட்பு, இவரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அவரது செயலாளராகவும், குடும்ப மருத்துவராகவும் பணியாற்றினார். அரசியல் மாற்றங்களால் சிறையில் அடைக்கப்பட்ட ஷாஃப்டஸ்பரி, ஹாலந்துக்கு தப்பி ஓடி அடுத்த ஆண்டில் அங்கேயே காலமானார்.

* அவரது நண்பர் என்பதால் இவருக்கும் நெருக்கடி ஏற்பட்டு, ஹாலந்துக்கு சென்று 1689 வரை தங்கினார். அப்போது ஓய்வு நேரம் நிறைய கிடைத்ததால், தன் சிந்தனைகளை எழுத்தில் வடிக்கத் தொடங்கினார். 1654-ல் எழுதிய 'ஆன் எஸ்ஸே கன்சர்னிங் ஹியூமன் அண்டர்ஸ்டேண்டிங்' என்ற ஆய்வு நூல் இவரைப் பிரபலமடையச் செய்தது. இது சிறந்த தத்துவ நூல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

* பின்னர், இங்கிலாந்து திரும்பியவர் இறுதிவரை அங்கேயே வாழ்ந்தார். இயற்கை விதி, தார்மீக நெறிகள்தான் இவரது சிந்தனைகளின் அடிநாதம். அனுபவ அறிவின் அடிப்படையில் தனது படைப்புகளை உருவாக்கினார். இவரது சிந்தனைகளில் ஃபிரான்சிஸ் பேகன், ரெனே டெகார்த்தே உள்ளிட்டோரின் தாக்கங்கள் அதிகம் காணப்பட்டன.

* அமெரிக்காவின் நிறுவனத் தந்தை எனப் போற்றப்படும் தாமஸ் ஜெஃபர்சன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள், பிரெஞ்சு மறுமலர்ச்சி இயக்கத்தை வளப்படுத்திய பல முன்னணி தத்துவஞானிகளிடம் இவரது கோட்பாடுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இவரது அரசியல் கோட்பாடுகள், அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தில் எதிரொலித்தன.

* 1660-ல் எழுதி 1667-ல் வெளிவந்த 'டூ ட்ரீட்டீசஸ் ஆஃப் கவர்மென்ட்' என்ற நூல், உலகம் முழுவதும் அரசியல் சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குடிமக்களின் உயிர், உடைமைகளைக் காப்பது அரசின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

* ஆட்சி செய்பவர்களின் தெய்வீக உரிமைகள் பற்றிய கோட்பாட்டை அடியோடு மறுத்தார். அரசு வரம்பற்ற உரிமைகளைக் கொண்டிருக்க முடியாது என்று வாதிட்டார். மக்களின் நம்பிக்கைக்கு எதிராக மாறும் ஆட்சியை அகற்றவும், மாற்றவும் மக்களுக்கு அதிகாரம் உள்ளது என்றார்.

* உலகில் பல புரட்சிகள் நடப்பதற்கு ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே முற்போக்கான சிந்தனைகளை வெளிப்படுத்தியவர். இவரது சமூகக் கட்டுப்பாட்டு கோட்பாடு உலகம் முழுவதும் பரவியது.

* இவரது படைப்புகள் அறிவுத் தத்துவவியல், அரசியல் தத்துவம் ஆகிய துறைகளின் வளர்ச்சிக்கு வித்திட்டன. மனம், பிரக்ஞை, அறிவு, சுயம் குறித்து ஆராய்ந்து எழுதினார். 'தாராளவாதத்தின் (லிபரலிசம்) தந்தை' எனப் போற்றப்படும் ஜான் லாக் 72-வது வயதில் (1704) மறைந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in