

பிரபல பத்திரிகையாளர், எழுத்தாளர்
உலகப் புகழ்பெற்ற பத்திரிகையாளரும், இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி (Ramananda Chatterjee) பிறந்த தினம் இன்று (மே 29). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
மேற்குவங்க மாநிலம் பங்கூரா மாவட்டத்தில் ஏழ்மையான குடும்பத்தில் (1865) பிறந்தார். அங்கேயே பள்ளிக்கல்வி பயின்றார். சிறந்த மாணவராகத் திகழ்ந்தார். கல்கத்தா கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்து, அங்கு விரிவுரையாளராகச் சேர்ந் தார்.
கல்லூரியில் படிக்கும்போதே ‘காயஸ்த சமாச்சார்’ என்ற உருது பத்திரிகை நடத்தும் வாய்ப்பு பெற்றார். அதை ஆங்கிலப் பத்திரிகையாக மாற்றி, கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதையே அதன் பிரதான நோக்கமாகக் கொண்டு செயல்பட்டார். ‘ஷத்திரிய பாடசாலா’ என்ற பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் பணியாற்றினார்.
சாந்திநிகேதன் விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தின் கவுரவ முதல்வராகப் பணிபுரிந்தபோது, ரவீந்திரநாத் தாகூரை சந்திக்கும் வாய்ப்பு பெற்றார். அவர்கள் இடையே மலர்ந்த நட்பு இறுதிவரை நீடித்தது. எழுத்து, இதழியலில் ஆர்வம் கொண்டிருந்த இவர், முதலில் ‘பிரதீப்’ என்ற வங்க மாதாந்திர இதழின் ஆசிரியராகப் பணியாற்றினார்.
பின்னர் ‘பிரபாசி’ என்ற இலக்கிய இதழைத் தொடங்கினார். பெரும் வரவேற்பு பெற்ற இது, வங்க மொழி பேசுவோரின் இன்றியமையாத இதழாகப் புகழ்பெற்றது. 1907-ல் ‘மாடர்ன் ரிவ்யூ’ இதழைத் தொடங்கினார். பல முக்கிய தலைவர்கள், இலக்கியவாதிகள் தொடர்ந்து இதில் பங்களிப்பை வழங்கினர். பல்வேறு தரப்பட்ட பிரச்சினைகள் மற்றும் அது தொடர்பான அனைத்து தரப்பினரின் கருத்துகளும் இந்த இதழ்களில் இடம்பெற்றன.
காந்தி, நேரு, சுபாஷ் சந்திர போஸ், சி.எஃப்.ஆண்ட்ரூஸ், பிரேம்சந்த், லாலா லஜபதிராய், சகோதரி நிவேதிதை, ஜாதுநாத் சர்க்கார் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் இந்த இதழ்களில் தொடர்ந்து எழுதி வந்தனர். 20-ம் நூற்றாண்டின் முதல் 40 ஆண்டுகாலம் வரை, ஒன்றுபட்ட இந்தியாவின் முன்னணி தலைவர்கள், ஆட்சியாளர்களால் இந்த 2 இதழ்களும் மிகவும் மதிக்கப்பட்டன.
‘பிரபாசி’யில் தாகூரின் கவிதைகளும், ‘மாடர்ன் ரிவ்யூ’வில் அவரது மற்ற ஆங்கில மொழிப் படைப்புகளும் தொடர்ந்து வெளிவந்தன. இதன்மூலம் தாகூரை ஆங்கில உலகுக்கு அறிமுகம் செய்து வைத்த பெருமை பெற்றார்.
எப்போதுமே உண்மைகள், துல்லியமான புள்ளிவிவரங்களுடன் தனது கட்டுரைகளை எழுதுவார். பத்திரிகை தர்மத்தை இவர் ஒருபோதும் மீறியதில்லை. இவரது திறன்களும் ஆர்வங்களும் பரந்துபட்டவை. அவற்றைத் தன் வாசகர்களுடன் அடிக்கடி பகிர்ந்துகொள்வார். இவரது எழுத்துகளில் நகைச்சுவை இழையோடும்.
இந்திய தேசிய காங்கிரஸில் உறுப்பினராக இணைந்தவர், 1907-ல்கட்சி பிளவுபட்டபோது வெளியேறினார். பிறகு, மதன் மோகன் மாளவியாவின் காங்கிரஸ் தேசியவாதக் கட்சியில் சேர்ந்து, அதன் பம்பாய் மாநாட்டைத் தலைமையேற்று நடத்தினார். இந்து மகா சபையில் இணைந்து அதன் தலைவரானார்.
இவர் பத்திரிகையில் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு நூல்களாக வெளியிடப்பட்டன. இதழியல், தேசத் தலைவர்கள் தொடர்பான நூல்கள் குறிப்பிடத்தக்கவை. ‘இந்தியா அண்டர் பாண்டேஜ்’ என்ற நூலை தனது அச்சகத்தில் அச்சிட்டதற்காக இவருக்கு அபராதம், சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
சாதி, மத, வகுப்புவாத எண்ணங்களுக்கு சிறிதும் இடம்கொடுக்கா மல், முழுமையான ஜனநாயகவாதியாக செயல்பட்டவர். இந்தியாவில் நவீன இதழியலுக்கு வித்திட்டவர். இந்திய இதழியல் துறையின் முன்னோடிப் படைப்பாளியான ராமானந்த சட்டர்ஜி 78-வது வயதில் (1943) மறைந்தார்.
- ராஜலட்சுமி சிவலிங்கம்