Published : 30 Jun 2016 10:35 AM
Last Updated : 30 Jun 2016 10:35 AM

பால் பெர்க் 10

பால் பெர்க் - நோபல் பரிசு பெற்ற அமெரிக்க விஞ்ஞானி

அமெரிக்காவைச் சேர்ந்த உயிரி வேதியியலாளரும், பேராசிரியரும் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றவருமான பால் பெர்க் (Paul Berg) பிறந்த தினம் இன்று (ஜூன் 30). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* அமெரிக்காவின் நியுயார்க் மாகாணம், ப்ரூக்ளின் நகரில் பிறந்தவர் (1926). தந்தை துணி உற்பத்தியாளர். ஸீ கேட் என்ற பகுதியிலுள்ள ஆபிரகாம் லிங்கன் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.

* அந்தப் பள்ளியில் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை வளர்ப்பதற் காக ஆசிரியர் ஒருவர் மாலை நேரங்களில் அறிவியல் மன்றங் களைத் தொடங்கினார். மாணவர்கள் அறிவியல் சந்தேகங்களை தாங்களாகவே ஆராய்ந்து அறிந்துகொள்வதை அவர் ஊக்கப் படுத்தினார்.

* இந்த அனுபவமும் புகழ்பெற்ற மருத்துவ அறிவியலாளர்களின் நூல்களை ஆர்வத்துடன் படித்து வந்ததும் தானும் விஞ்ஞானி யாகும் கனவை இவருக்குள் விதைத்தன. பென் ஸ்டேட் பல்கலைக் கழகத்தில் 1943-ல் இளங்கலைப் பட்டம் பெற்றார். முதுகலைப் பட்ட ஆராய்ச்சிகளுக்காக கதிரியக்க ட்ரேசர்களைப் பயன்படுத்தி இடைநிலை வளர்சிதை மாற்றம் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.

* ஃபார்மிக் அமிலம், ஃபார்மால்டிஹைடி மற்றும் மெத்தனால் ஆகியவற்றைக் குறித்த ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பித்து கேஸ் வெஸ்டன் ரிசர்வ் பல்கலைக்கழகத்தில் உயிரி வேதியியலில் முனைவர் பட்டம் பெற்றார்.

* என்சைம்கள் குறித்து மேலும் அறிந்து கொள்வதற்காக கோபன் ஹேகன், டென்மார்க், வாஷிங்டன் பல்கலைக்கழக மருத்துவ கல் லூரி ஆகிய இடங்களில் சைட்டோஃபிசியாலஜி இன்ஸ்டிடியூட்களில் பணியாற்றினார்.

* கோபன்ஹேகன் மையத்தில் புதிய நியுக்ளிக் அமில ஒழுங்கமைப்புக்கான நியுக்ளியோசைட் ட்ரிப்போஸ்பேட்கள் உருவாக்கும் ஒரு புதிய என்சைமைக் கண்டறிந்தார். அமினோ ஆசிட்களின் செயல்பாடுகள் குறித்த ஆராய்ச்சிகளிலும் முக்கியப் பங்களிப்பை வழங்கினார்.

* 1959-ல் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழக மருத்துவ மையத்தில் புதிதாக உயிரி வேதியியல் துறை உருவாகத் துணைபுரிந்தார். மறுஇணைவு டி.என்.ஏ.யின் (Recombinant DNA) மரபணு பிளப்பு தொடர்பான ஆய்வுகளின் முன்னோடியாக கருதப்படுகிறார்.

* நியுக்ளிக் அமிலங்களின் உயிரி வேதியியல் தன்மை குறித்த அடிப்படை ஆராய்ச்சிகள், மறுஇணைவு டி.என்.ஏ. தொடர்பான ஆய்வுகளில் இவரது முக்கியப் பங்களிப்புக்காக, வால்டர் கில்பர்ட் மற்றும் ஃபிரெட்ரிக் சாங்கெர் ஆகியோருடன் இணைந்து 1980-ல் வேதியியலுக்கான நோபல் பரிசை வென்றார். ஒரு உயிரினத்தின் டி.என்.ஏ.வை மற்றொரு உயிரினத்தின் மூலக்கூறில் செலுத்தி பெறப்பட்ட இரண்டு வெவ்வேறு உயிரினங்களின் டி.என்.ஏ.க்கள் அடங்கிய மூலக்கூறை உருவாக்கிய முதல் விஞ்ஞானி இவர்தான்.

* இந்தத் தொழில்நுட்பத்தை மேம்படுத்திய பிறகு இதையே வைரல் குரோமோசோம்கள் குறித்த ஆராய்ச்சிகளுக்குப் பயன் படுத்தினார். இது, மரபணு குளோனிங் அறிவியலுக்கும் வழி வகுத்தது.

* அமெரிக்கன் அகாடமி ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் ஃபேலோ, அமெரிக்க தேசிய அறிவியல் பதக்கம், பயோடெக்னாலஜி ஹெரிடேஜ் விருது உள்ளிட்ட பல பரிசுகளையும் விருதுகளையும் பெற்றுள்ளார். இன்று 90வது வயதில் அடியெடுத்து வைக்கும் இவர், மறுஇணைவு டி.என்.ஏ. மற்றும் கரு ஸ்டெம் செல்கள் தொடர்பான உயிரி மருத்துவப் பிரச்சினைகள் குறித்த பொது கொள்கைகளில் பங்களிப்பை வழங்கி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x