Published : 24 Oct 2014 10:43 AM
Last Updated : 24 Oct 2014 10:43 AM

லியூவன்ஹாக் 10

ஹாலந்து ஆராய்ச்சியாளர் ஆன்டனி வான் லியூவன்ஹாக்கின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து…

• வியாபாரக் குடும்பத்தில் பிறந்தவர். ஆரம்பக் கல்வி மட்டுமே படித்தவர், உறவினரிடம் கணிதம், இயற்பியல் கற்றார். தெரிந்த ஒரே மொழி, தாய்மொழி டச்சு.

• 22 வயதில் ஜவுளிக்கடை ஆரம்பித்தார். உள்ளூர் அரசியலிலும் பிரபலமானார். நூல்இழைகளின் தரத்தைப் பரிசோதிக்க ஜவுளி வியாபாரிகள் பூதக்கண்ணாடி பயன்படுத்துவது வழக்கம். இவர் அதுபோலச் செய்தது நூலிழைகளுக்கும் அப்பாற்பட்ட நுணுக்கமான ரகசியங்களைக் கண்டறியும் ஆர்வத்தை தூண்டியது.

• 1668-ல் சாதாரண லென்ஸ்களை தயாரிக்கக் கற்றார். ராபர்ட் ஹூக் எழுதிய ‘மைக்ரோகிராஃபியா’ என்ற புத்தகத்தைப் பார்த்த இவருக்கு மைக்ரோஸ்கோப் தயாரிப்பதில் ஆர்வம் பிறந்தது. மெல்லிய லென்ஸ், மைக்ரோஸ்கோப் தயாரித்து ஆராய்ச்சியில் இறங்கினார். ஒருசெல் உயிரினம் குறித்து முதன்முதலில் அறிவித்தார்.

• பொருளை 30 மடங்கு பெரிதாக்கிக் காட்டும் மைக்ரோஸ்கோப் கருவிகள்தான் இவரது காலத்தில் இருந்தன. இவர் உருவாக்கிய மைக்ரோஸ்கோப் 200 மடங்குக்கும் அதிகமாக பெரிதாக்கிக் காட்டின. இதுகுறித்து லண்டனில் உள்ள ராயல் சொசைட்டி இதழில் கட்டுரை வெளியானதும் பிரபலமடைந்தார்.

• ரத்த அணுக்கள், உயிரினங்களின் விந்தணுக்களை முதன்முதலில் கண்டறிந்தார். ரத்தச் சிவப்பு அணுக்கள் பற்றி முதன்முறையாகப் பதிவு செய்தார். மைக்ரோஸ்கோப் வழியாக உயிரினங்களில் காணும் காட்சிகளை ஓவியர் உதவியுடன் வரைந்து உரிய விளக்கங்களை குறிப்பிட்டு, லண்டன் ராயல் சொசைட்டிக்கு தொடர்ந்து அனுப்பினார்.

• 500-க்கும் மேற்பட்ட ஆப்டிகல் லென்ஸ்களை தயாரித்தார். 25 விதமான மைக்ரோஸ்கோப்களை உருவாக்கினார்.

• ஒரு ஆய்வுக் கட்டுரை, ஆராய்ச்சிப் புத்தகம்கூட இவர் எழுதியது இல்லை. ஆனால், ராயல் சொசைட்டிக்கு இவர் அனுப்பிய 1677 கடிதங்களும் நுண்ணுயிரியலில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு அடித்தளமாக அமைந்தன. ராயல் சொசைட்டி நூலகத்தில் இந்த கடிதங்கள் முக்கிய ஆவணங்களாக இன்றும் பாதுகாக்கப்படுகின்றன.

• அவரது நுணுக்கமான ஆய்வுத் திறனும், தணியாத ஆர்வமும் ‘நுண்ணுயிரியல் தந்தை’ என்ற பெருமையை பெற்றுத் தந்தன.

• அறிவியல் மேதைகள் மட்டும் அங்கம் வகிக்கும் லண்டன் ராயல் சொசைட்டி, இவரது ஆய்வுத் திறனை கவுரவித்து இவரையும் உறுப்பினராக சேர்த்துக்கொண்டது.

• கடைசிவரை நுண்ணுயிரி ஆராய்ச்சியில் ஈடுபட்ட இவர் 90-வது வயதில் இறந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x