

எனக்கு வகுப்பறையில் ஏற்பட்ட ஓர் அனுபவத்தை ஆசிரிய நண்பர்கள் பலரிடம் கூறி, 'இந்தச் சூழலில் நீங்களாக இருந்தால் என்ன செய்வீர்கள்?' என்று கேட்டுள்ளேன். அவர்கள் கூறிய பதில் எனக்கு வியப்பளிக்கவில்லை. ஆனால் நான் கூறிய பதில் அவர்களுக்கு வியப்பாக இருந்தது.
கார்குடல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும்போது கடைசி பெஞ்ச்சில் அமர்ந்திருந்த ஒரு மாணவன் பாடத்தை கவனிக்காமல் குறிப்பேட்டில் ஏதோ செய்துகொண்டிருந்ததைப் பார்த்த எனக்குக் கடுமையான கோபம் வந்துவிட்டது. கோபத்தை அடக்கிக்கொண்டு என்னதான் செய்கிறான் என்று அவன் அருகில் சென்று பார்த்தேன். ஓர் அழகான படத்தை வரைந்துகொண்டிருந்தான். எனக்கு கோபம் குறைந்து அவனின் ஓவியத்திறமை வியப்பளித்தது. அவன் ஓவியம் வரைவதில் கெட்டிக்காரன் என்று அன்றுதான் தெரிந்துகொண்டேன்.
இந்தச் சூழலில் மற்ற ஆசிரியர்களில் பெரும்பாலானோர் கூறிய பதில் இதுதான், "நான் பாடம் நடத்துறத கவனிக்காம படம் வரைஞ்சுகிட்டிருக்கிறாயே உனக்கு எவ்வளவு தைரியம் இருக்கணும்?" என்று கோபமாக அவன் கையிலிருந்த படத்தைக் கிழித்தெறிந்து அவனை வகுப்புக்கு வெளியில் நிறுத்துவோம் என்பதே பல நண்பர்களின் பதில்.
ஆனால், எனக்கு ஏனோ அப்படித் தோன்றவில்லை. அவன் வரைந்த ஓவியத்தை அனைத்து மாணவர்களிடமும் காண்பித்துப் பாராட்டினேன். அதன்பிறகு அவனுக்கு நான் கூறியது இதுதான்:
"நீ மிக அழகாக படம் வரைகிறாய். வருங்காலத்தில் மிகச் சிறந்த ஓவியனாக வருவாய். அதற்கு நீ ஓவியக் கல்லூரியில் சேர வேண்டும். அப்படி சேர வேண்டுமென்றால் பிளஸ் 2 தேர்ச்சி பெற வேண்டும். எனவே, உன் ஓவியத் திறமையை ஓய்வு நேரத்தில் வளர்த்துக்கொள். வகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்தும்போது பாடத்தை கவனித்தால்தான் எளிதாகத் தேர்ச்சி பெறலாம். நீ பிளஸ் 2 முடித்த பிறகு என்னிடம் வா உன்னை ஓவியக் கல்லூரியில் சேர்த்துவிடுகிறேன்" என்று அவனுக்கு அறிவுரை கூறினேன்.
அதன் பிறகு அப்பள்ளியில் ஓவியத்திறமை உள்ள மாணவர்களை அடையாளம் கண்டு அவர்களுக்காக சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்கள் ஓவியர் கோவிந்தன், ஓவியர் காசி ஆகியோரைப் பள்ளிக்கு வரவழைத்து ஒரு ஓவியப் பயிலரங்கை நிகழ்த்தினோம். நன்றாக படம் வரையும் மாணவர்களின் ஒவியங்களை பள்ளி மாணவர் மலரில் இடம்பெறச் செய்தோம். இதனை அத்தோடு மறந்துபோனேன் நான்.
ஆனால் நான்கு ஆண்டுகள் கழித்து அந்த மாணவர் சபரி என்னைத் தேடி வீட்டுக்கு வந்தார், "சார் ஒவியக் கல்லூரியில் சேர்த்து விடுவதாகக் கூறினீர்களே, இப்போது நான் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றுவிட்டேன்" என்று கூற, என்னால் நம்பமுடியவில்லை. ஏதோ ஒரு நாள் வகுப்பில் கூறிய ஒரு தகவலை நான்கு ஆண்டுகள் வரை மறக்காமல் வைத்திருந்து இப்படிக் கேட்டதும் எனக்கும் அந்த மாணவரை ஓவியக் கல்லூரியில் சேர்த்து விடவேண்டும் என்ற ஆசை தொற்றிக்கொண்டது. செய்தித்தாளில் விளம்பரம் வந்ததும் விண்ணப்பிக்கலாம் என்று கூறினேன். அதேபோல் சென்னை கவின்கலைக் கல்லூரியில் விண்ணப்பித்தோம். இவன் திறமைக்கு அங்கு இடம் கிடைத்தது.
இன்று... நுண்கலையில் இளங்கலைப் பட்டம் பெற்ற ஓவியப் பட்டதாரி சபரிநாதனைப் பார்க்கும்போதெல்லாம் மகிழ்வாக இருந்தாலும், அவர் முதுகலைப் பட்டம் முடிக்கவில்லையே என்ற ஆதங்கம் அவ்வப்போது ஏற்படும்.
சபரிக்கு முதுகலைப் பட்டம் படிப்பதற்கான வாய்ப்பு எந்த விதத்திலாவது கிட்டி விடாதா? என்ற எதிர்பார்ப்பு என் மனதில் எப்போதும் உண்டு.
எனவே, ஆசிரியர்கள் வகுப்பில் கூறும் ஒவ்வொரு சொல்லும் அந்தப் பிஞ்சு நெஞ்சுகளில் ஆழப் பதியும் என்பதை ஆசிரியர்களாகிய நாம் எப்போதும் மனத்தில் கொண்டு நடந்துகொள்ளவேண்டும் என்பதை அந்த மாணவர் எனக்கு உணர்த்திய பாடம் இது.
மேலும், படிப்பது மட்டுமே திறமை என்று எண்ணி அவர்களின் மற்ற திறமைகளை கண்டுகொள்ளாமலிருந்து விடக்கூடாது என்பதும் மாணவர் சபரி எனக்கு உணர்த்தியது.
- இரத்தின புகழேந்தி, மன்னம்பாடி அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியர், கடலூர்.
செல்பேசி எண்: 9488848519.
*
'தி இந்து' நடுப்பக்கத்தில் வெளிவந்த>#என் ஆசிரியருக்கு இது தெரிந்தால் நல்லது! என்ற கட்டுரையை ஒட்டிய பள்ளி ஆசிரியர் ஒருவரின் அனுபவப் பகிர்வுதான் இது. நீங்களும் உங்கள் அனுபவத்தைப் பகிர...
பள்ளி ஆசிரியர்கள் கவனத்துக்கு... ஆசிரியர் கைல் ஸ்வார்ட்ஸ் போலவே வித்தியாசமான முறையில் உங்கள் மாணவர்களை அணுகிய / அணுகும் பள்ளி ஆசிரியர்களா நீங்கள்... மாணவர்கள் உடனான உங்கள் அணுகுமுறையால் ஏற்பட்ட மாற்றங்கள் என்னென்ன? நீங்கள் கண்டறிந்த உண்மைகள் என்ன? உங்களால் மறக்க முடியாத வகுப்பறை அனுபவம் என்ன? சக ஆசிரியர்களுக்கு நீங்கள் பகிர விரும்பும் யோசனைகள் என்ன? இவை அனைத்தையும் 'தி இந்து' இணையதளத்துடன் பகிர saravanan.s@thehindutamil.co.in என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள். அவை உரிய முக்கியத்துவத்துடன் நம் தளத்தில் வெளியிடப்படும். அல்லது, நீங்கள் சமூக வலைதளங்களிலும் இயங்குபவராக இருந்தால், #என்வகுப்பறை என்ற ஹேஷ்டேக் இட்டு உங்கள் அனுபவத்தைப் பகிரலாம். மேலும், இங்கு கிழேயுள்ள கருத்துப் பகுதியிலும் பகிரலாம். அதேபோல், நீங்கள் படித்த பள்ளி ஆசிரியர்களில் தனித்துவமானவர்கள் குறித்தும் உங்கள் அனுபவத்தைப் பகிரலாம் |