Published : 14 Mar 2017 04:38 PM
Last Updated : 14 Mar 2017 04:38 PM

கறுப்பு கேரி பேகும் ஜீவாவின் மகன் மீதான சாதிய வன்மமும்

'சமத்துவம் மறுக்கப்பட்டால் அனைத்தும் மறுக்கப்படுகிறது' முத்துக்கிருஷ்ணனின் கடைசி ஃபேஸ்புக் பதிவு, 100 செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் அனுப்பும் திறன் கொண்ட இந்திய சமூகத்துக்கு சொல்லும் இன்றியமையா சேதி.

தலைநகர் டெல்லியில் உள்ள ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நவீன வரலாறு பாடத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்த மாணவர் முத்துக்கிருஷ்ணன் திடீரென மர்மமான முறையில் இறந்துபோனார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என போலீஸ் கூறுகிறது.

சம்பவங்கள் நிகழும்போது ஸ்வாதி, ராம்குமாரை தேடியதுபோல் முத்துக்கிருஷ்ணனையும் வலை உலகம் ஃபேஸ்புக்கில் தேடியது.

அசைக்க முடியாத அளவுக்கு ஆழமாக இந்த சமுதாயத்தில் ஊடுருவியிருக்கும் சாதியத்தையும் அதனால் ஒரு தலித் அடைய வேண்டிய அவமானங்கள் எத்தகையது என்பதையும் விவரிக்கின்றன முத்துக்கிருஷ்ணனின் பதிவுகள்.

முத்துக்கிருஷ்ணனின் தந்தை பெயர் ஜீவானந்தம். இந்த பதிவில் 'ஜீவாவின் மகன்' என்று தன்னைப் பற்றி பேசியிருக்கிறார் அவர்.

ஃபேஸ்புக் பதிவு:

"அந்த ஆடிட்டோரியத்தின் பின்னணியில் வைக்கப்பட்டிருந்த வெள்ளைத் திரை ஸ்கிரீன் ஜீவாவின் மகனைச் சற்றுப் பின்னோக்கி நினைவலைகளை அசைபோடச் செய்தது. 70எம்.எம். பெருந்திரையில் பிதாமகன் தமிழ் திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. படம் முடிந்தவுடன் மீண்டும் திரையில் வெண்ணிறம். அது அப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி. படத்தைப் பார்த்து முடித்த ஜீவாவின் மகன் கிட்சிப்பாளையத்துக்குச் சென்றார்.. மானா (மாட்டிறைச்சி வாங்க). மானா சந்தையில் வாங்கிய மாட்டிறைச்சியைக் கறுப்பு கேரி பேகில் கட்டிக் கொடுத்திருந்தார்கள். அதை எடுத்துக்கொண்டு பழைய பேருந்து நிலையத்துக்குச் சென்றார் ஜீவாவின் மகன். அங்கிருந்து வலப்புறம் திரும்பினால் ஓரியன்டல் சக்தி திரையரங்கு. அதற்கு பக்கத்திலேயே லட்சுமி ஐஸ்க்ரீம் கடை. அங்கிருந்த எல்லோரது கண்களும் அந்த கறுப்பு கேரிபேக் மீதுதான். அந்த காலகட்டத்தில் கறுப்பு கேரி பேகில் மானா மட்டுமே பொட்டலம் கட்டப்படுவது வழக்கம். கறுப்பு கேரி பேகை பார்த்தவுடன் அனைவரது கண்களும் சட்டென திரும்பிக்கொள்ளும்.

அசராத ஜீவாவின் மகன், 5 கிலோ மானா அடங்கிய பையுடன் சேலம் பழைய பேருந்து கிளாக் ஹவுஸூக்கு வந்து சேர, சத்திரம், லீ பஜார் வழியில் செல்லும் பஸ்ஸுக்கான காத்திருப்பு ஆரம்பித்தது. அப்போது ஜீவாவின் மகன் பள்ளி நண்பன் ரமணா அவ்வழியாக வர. ஜீவாவின் மகன் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார். ரமணாவுடன் பேசிக்கொண்டு 4 ரோடு நிறுத்தம் செல்லும் பொழுதை போக்கலாம் என்று. ஆனால், ரமணாவோ ஜீவாவின் மகன் கையிலிருந்த மானா பையைப் பார்த்தவுடன் பக்கத்திலேயே வரவில்லை.

6-ஏ பஸ் வர ஜீவாவின் மகன் அதில் ஏறிக்கொள்கிறார். பேருந்தின் நடுப்பகுதியில் ஜன்னலோர இருக்கை கிடைத்தது. சேலம் ஆட்சியர் அலுவலக நிறுத்தம் வந்தது. அங்கு வேலைபார்க்கும் அதிகாரி ஒருவர் பேருந்தில் ஏறினார். ஜீவா கையிலிருந்த மானா பை அவரது கண்ணில் தென்பட்டது. அதை பார்த்தபின் அவர் ஜீவா அருகே உட்காரவில்லை. இத்தனைக்கும் பஸ்ஸில் வேறு எங்கும் இடமில்லை. அடுத்ததாக கல்பனா தியேட்டர் நிறுத்தம். அங்கு ஒரு தம்பதி 3 வயது குழந்தையுடன் ஏறினர். உட்கார அவர்கள் இடம் தேடினர். ஜீவாவின் மகன் இருக்கையிலிருந்து எழுந்த நிற்க முடிவு செய்திருந்தார். காரணம், பஸ்ஸில் பயணித்த யாரும் ஜீவாவிடம் பேசத் தயாராக இல்லை என்பதே. அதனாலேயே அந்த தம்பதி உட்கார இடம் தேடியபோது இருக்கையிலிருந்து எழுந்து சென்று ஜீவா இடம் கொடுத்தார். ஆனால், மானா பையை பார்த்த அவர்கள் யாரும் உட்காரத் தயாராக இல்லை. அதற்குள் மானா வாசனை பஸ் முழுதும் பரவியிருந்தது. 4 ரோடு வரும்வரை அந்த இருக்கையில் யாருமே அமரவில்லை.

4 ரோடு நிறுத்ததுக்குப் பின் ஜீவாவின் மகன் படிக்கட்டில் நின்றுகொண்டார். தம்மன்னன் செட்டி ரோடுவரை படிக்கட்டில் பயணம் நீடித்தது. ஆனால், உடன் நின்றிருந்த பயணிகளுக்கு அவ்வளவு கோபம். மானா பையிலிருந்து வந்த வாசனையால் வந்த கோபம் அது. சிலர் ஜீவாவின் காலை (வேண்டுமென்றே) மிதித்தனர். சத்திரம் நிறுத்தத்தில் இறங்கிய ஜீவா லீ பஜாரை நோக்கி நடையைக் கட்டினார். சிலர் மானா பையைப் பார்த்து முகம் சுளித்தனர். சிலர் விலகி நடந்தனர். சிலர் சாலையைக் கடந்து எதிர்ப்புறத்துக்குச் சென்றுவிட்டனர்.

அந்தக் காலத்தில் மானாவுக்கு சமத்துவம் இல்லை. இப்போது மானாவே இல்லை. சமத்துவம் என்பதே இல்லை என்பதுதான் இதன் அர்த்தம்.

இப்போதும், எம்.ஃபில்., பி.எச்.டி., மாணவர் சேர்க்கையில் சமத்துவம் பேணப்படவில்லை. ஆராய்ச்சி மாணவர்களுக்காக நடத்தப்படும் வாய்மொழித் தேர்விலும் சமத்துவம் இல்லை. அங்கே நடைபெறுவதெல்லாம் சமத்துவம் மறுக்கப்படுவது மட்டுமே. பேராசிரியர் சுகதேவ் தோரத் பரிந்துரைகள் இங்கு சிறிதும் பின்பற்றப்படுவதில்லை. மாணவர்கள் போராட்டங்கள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. சமூகத்தின் விளிம்புநிலையில் இருந்து வருபவர்களுக்கு கல்வி மறுக்கப்படுகிறது. சமத்துவம் மறுக்கப்படும்போது அனைத்துமே மறுக்கப்படுகிறது"

இப்படி அந்த ஃபேஸ்புக் பதிவு ஒரு கறுப்பு கேரி பேக் சாதிய அடையாளமாக இருப்பதை விவரித்திருக்கிறது.

'நான் இளவரசனாக விரும்பவில்லை'

இது முத்துக்கிருஷ்ணனின் முகநூலில் கடந்த பிப்ரவரி 15-ம் தேதி பகிரப்பட்ட நிலைத்தகவல். "தாஜ்மகால் முன்னால் காதலி இல்லாமல். கல்லூரியில் நான் கொண்ட ஒருதலை காதல் நினைவுக்கு வருகிறது. அந்தப் பெண்ணுக்கு இப்போது திருமணமாகிவிட்டது. நானும் எல்லாவற்றையும் கடந்துவந்துவிட்டேன். ஏனெனில், நான் இளவரசன், கோகுல்ராஜ், சங்கருக்கு நேர்ந்த அவலத்தை எதிர்கொள்ள விரும்பவில்லை. நான் காதல் கொண்ட பெண்ணைவிட சிறந்த பெண் இந்த உலகத்தில் எனக்குக் கிடைப்பாள்.

இப்போது என் எண்ணமெல்லாம் எனது ஆயா செல்லம்மாள் பற்றியே இருக்கிறது. செல்லம்மாள்தான் என் ஆயா" என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

'கணிதமே வரலாறு'

எம்.ஃபில்., பி.எச்.டி படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வை ரத்து செய்துவிட்டு நேர்முகத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கையை நடத்தலாம் என யுஜிசி திட்டமிட்டுக்கொண்டிருந்தபோது மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியிருந்தன. அப்போது முத்துக்கிருஷ்ணன் ஒரு நிலைத்தகவலை தனது ஃபேஸ்புக்கில் பதிந்தார்.

"எனது கணக்கு ஆசிரியருக்கு என் மேல் அவ்வளவு வெறுப்பு. எப்போதுமே நான் எங்கிருந்து வருகிறேன் என்பதை சுட்டிக் காட்டிக்கொண்டே இருப்பார். நான் முடிதிருத்திக்கொண்டிருந்த விதத்தைக் கிண்டல் செய்வார். அதனாலேயே எனக்கு கணிதம் மீது வெறுப்பு வந்தது. எனது நாட்டம் மாறியது. கணிதம் வரலாறானது. அந்த ஆசிரியரின் கேலியும் கிண்டலும்தான் என்னை முதல் தலைமுறை பட்டதாரியாக்கியது. ஒடுக்கப்பட்ட வகுப்பிலிருந்து வரும் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு தயைகூர்ந்து வாய்ப்பு கொடுங்கள். இல்லையென்றால் அவர்கள் கணிதம் என்றால் விரோதி என்ற புரிதலுக்குத் தள்ளப்படுவார்கள். கல்வி என்றால் அழுத்தம் என எண்ணுவார்கள். பல்கலைக்கழகம் என்றால் பாகுபாடு என அறிவார்கள்"

இவ்வாறாக அந்த பதிவில் கூறப்பட்டிருந்தது.

முத்துக்கிருஷ்ணனின் ஃபேஸ்புக் பதிவுகளிலிருந்து.. தமிழில்: பாரதி ஆனந்த்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x