

அவரைப் பேருந்து நிறுத்தத்தில் தினமும் நான் பார்ப்பேன். நான் பயணம் செய்யும் வாகனத்தைப் பிடிக்கக் குறைந்தது 5 நிமிடம் முன்னதாகவே வந்துவிடும் வழக்கம் எனக்கு. ஆனால் அவர் அப்படி இல்லை. நான் வாகனத்துக்காகக் காத்திருக்கும் நேரத்தில் என் முன்னால்தான் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்துவார். அதன் நிறுத்தியைச் சரிசெய்து தூக்கி நிறுத்திச் சாவியைத் திருகி அதன் எஞ்சினைக் கூட நிறுத்த மாட்டார். வண்டி உறுமிக்கொண்டே இருக்கும்.
அவருக்குப் பின்னால் அமர்ந்து வரும் பெண்ணிடம் வண்டியை ஒப்படைத்துவிட்டு இறங்கிக்கொள்வார். அந்தப் பெண் வண்டியைக் கிளப்பி நகர்வதையோ வேகம் எடுத்து முன்னேறித் திருப்பத்தில் மறைவதையோ பொருட்படுத்திப் பார்க்கவே மாட்டார். அதற்கெல்லாம் அவருக்கு நேரமில்லை என்பது என் கணக்கு.
அநேகமாக இறங்கிய அடுத்த நிமிடம் அவர் ஏற வேண்டிய பேருந்து வந்து நிற்கும். உடனே ஏறிவிடுவார். அல்லது அவர் வருகிறார் என்பதைத் தூரத்திலேயே பார்த்துவிட்டு ஓட்டுநர் காத்திருப்பார் போலும். அவர் ஏறியவுடன் பேருந்து கிளம்பிவிடும். அலாதியான லாவகத்துடன் வண்டியை முன் நகர்த்திச் செல்லும் அந்தப் பெண் சாலையின் திருப்பத்தில் திரும்பி மறையும்வரை பார்த்துக்கொண்டிருப்பேன். இருசக்கர வாகனத்தைச் செலுத்தும் அவளது லாவகமும் கவனமும் என்னிடம் இல்லை என்பதால் கொஞ்சம் பொறாமையோடு பார்த்துக்கொண்டு நிற்பேன்.
வீட்டிலிருந்து கிளம்பும் வாகனத்தில் இந்தப் பேருந்து நிறுத்தம்வரை அவள் பின் இருக்கையில் அமர்ந்திருக்க, வாகனத்தை ஓட்டும் இடத்தில் அவர் அமர்ந்து ஓட்டி வருவார். தன்னை ஏற்றிச் செல்லும் பேருந்தைத் தவற விட்டுவிடுவோமோ என்ற நினைப்புடன் வண்டியை ஓட்டி வரும் பதற்றம் அவர் வண்டியை நிறுத்தும்போது வெளிப்படும். பல தடவை பார்த்த இந்தக் காட்சிதான் இது. ஆனால் இன்றுதான் இந்தக் கேள்வியை உருவாக்கியது.
இருசக்கர வாகனத்தை இவ்வளவு லாவகமாக ஓட்டும் அந்தப் பெண்ணிடம் வாகனத்தை ஓட்டும் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு, நாம் பின்னிருக்கையில் அமர்ந்து வரலாமே என்று எப்போதாவது யோசித்திருப்பாரா என்ற கேள்விதான் அது. ‘நீயே வீட்டிலிருந்து ஓட்டி வா; நான் உன் பின்னால் உட்கார்ந்து வருகிறேன்’ என்று சொல்லி வண்டியை ஓட்டும் பொறுப்பை ஒப்படைத்தால் அவருக்கு ஏற்படும் பதற்றமும் படபடப்பும் குறைவதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்தப் பெண் ஓட்டி வந்தால் இவரை இன்னும் சற்று முன்னதாகவே அந்த நிறுத்தத்தில் சேர்த்துவிடும் வாய்ப்பு இருப்பதாகவே தோன்றுகிறது.
தன் வீட்டிலிருந்து கிளம்பும்போது தானே வண்டியைக் கிளப்ப வேண்டும்; தன் பின்னால்தான் தன் மனைவி உட்கார்ந்து வர வேண்டும் என்ற எண்ணத்தை உண்டாக்கியது எது? உண்டாக்கப்பெற்ற அந்த எண்ணத்தைக் கெட்டியாகப் பிடித்துக்கொண்டு தொடரச் செய்வது எது?