Last Updated : 08 Nov, 2013 10:35 PM

 

Published : 08 Nov 2013 10:35 PM
Last Updated : 08 Nov 2013 10:35 PM

ட்விட்டரின் அதிகாரப்பூர்வ இந்திய வலைப்பதிவு!

சமூக வலைத்தளங்களில், குறும்பதிவு சேவை நிறுவனமான ட்விட்டர் பங்குச்சந்தையில் நுழைந்திருப்பது இணைய உலகில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

ட்விட்டரின் பங்குகள் 26 டாலர்களுக்கு அறிமுகமாகி முதல் நாள் வர்த்தகத்தில் 50 டாலர்களைத் தொட்டு, முடிவில் 44.90 டாலரில் நின்றிருக்கிறது.

ட்விட்டரின் உண்மையான மதிப்பு என்ன? பங்குசந்தையில் நுழைந்த பிறகு அதன் செயல்பாடும் செல்வாக்கும் எப்படி இருக்கும் என்றெல்லாம் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில், ட்விட்டர் அதிக சத்தமில்லாமல் இந்தியாவுக்கான அதிகாரபூர்வ வலைப்பதிவை துவக்கியுள்ளது.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவை தலைமையகமாகக் கொண்ட ட்விட்டர், சர்வதேச அளவில் செயல்பாடுகளைக் கொண்டிருக்கிறது. இந்தியாவிற்கும் ட்விட்டர் புதிதல்ல. 2006 ல் இருந்தே இந்தியர்கள் ட்வீட் செய்து வருகின்றனர். 2010 ம் ஆண்டு முதல் இந்தியாவுக்கு என்று அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கும் இருக்கிறது. ஆனால் இந்தியாவுக்கு என்று தனியே ட்விட்டர் வலைப்பதிவு இப்போது தான் துவக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைப்பதிவு மிகவும் பிரபலமானது. நிறுவனத்தின் கொள்கை அறிவிப்புகள்,புதிய வசதிகள், முக்கிய மைல்கற்கள் மற்றும் சர்ச்சைகளுக்கான விளக்கங்களை ட்விட்டர் வலைப்பதிவில் தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் இந்தியாவுக்கு என்று ட்விட்டர் தனியே வலைப்பதிவு துவங்கியிருப்பது முக்கியமானது. ட்விட்டரின் இந்திய இயக்குனர் ரிஷி ஜேட்லி வலைப்பதிவில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

முதல் பதிவில், துவக்க கால இந்திய ட்விட்டர் பயனாளிகளின் குறும்பதிவுகள் குறிப்பிடப்பட்டு, சச்சின் டெண்டுகர் ட்விட்டரில் அடியெடுத்து வைத்தது முக்கிய மைல்கல்லாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இடையே மும்பை தீவிரவாத தாக்குதலின் போது ட்விட்டர் பயன்படுத்தப்பட்ட விதம் மற்றும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ட்விட்டரை பயன்படுத்திய விதமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

சச்சின் ஓய்வு பெறவுள்ள நிலையில் மிகவும் பொருத்தமாக, சச்சினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் 'தேங்க்யூ சச்சின்' (Thankyousachin) எனும் ஹாஷ்டேகும் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சச்சினுக்கு நன்றி தெரிவிக்கும் குறும்பதிவுகளை பகிரலாம். இது தவிர, கிரிக்கெட் வாரியத்தின் பிசிசிஐ ஹாஷ்டேக் மூலமும் குறும்பதிவுகளை வெளியிட்டு சச்சின் புகழ் பாடலாம். இப்படி செய்தால் சச்சின் புகைப்படம் பரிசு பெறும் வாய்ப்பும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா தொடர்பான ட்விட்டர் நிகழ்வுகள் மற்றும் சர்வதேச ட்விட்டர் தகவல்கள் இந்த வலைப்பதிவில் இடம்பெறும் என ரிஷி ஜெட்லி தெரிவித்துள்ளார்.

பங்குசந்தையில் நுழைந்துள்ள ட்விட்டரின் வருவாய் ஈட்டும் திட்டங்கள் குறித்து பல்வேறு கேள்விகள் உள்ளன. இவற்றுக்கு பதில் அளிக்கும் வகையில் ட்விட்டர் தனது சர்வதேச செயல்பாடுகளில் கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது. இதன் ஒரு பகுதியாகவே இந்தியாவுக்கான வலைப்பதிவு துவக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்தியாவில் ட்விட்டர் தனது கவனத்தை தீவிரமாக்கியுள்ளதன் அடையாளமாக இதனைக் கருதலாம்.

2014 பொதுத் தேர்தலில் பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கலாம் என்று நிபுணர்கள் சொல்கின்றனர். இந்த நிலையில் ட்விட்டரின் இந்திய செயல்பாடு முக்கியமானதாகவே இருக்கும்.

ட்விட்டர் இந்திய வலைப்பதிவு முகவரி: >https://blog.twitter.com/2013/hello-india-thankyousachin

சைபர்சிம்மன், கட்டுரையாளர் - தொடர்புக்கு enarasimhan@gmail.com

கட்டுரையாளரின் வலைப்பதிவுத் தளம்>http://cybersimman.wordpress.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x