

அமெரிக்காவின் மிகச் சிறந்த கவிஞர்களில் ஒருவர் சில்வியா பிளாத். பாஸ்டன் நகரில் 1932-ல் இதே நாளில் சில்வியா பிளாத் பிறந்தார். அவரது தந்தை ஓட்டோ பிளாத். 1940-ல் ஓட்டோ மரணமடைந்தபோது சில்வியாவுக்கு 8 வயதுதான். தந்தையின் மரணம் அவரை வெகுவாகப் பாதித்தது. பின்னாட்களில், தந்தையின் நினைவாக ‘டாடி’ என்ற கவிதையை எழுதினார்.
பள்ளியில் மிகச் சிறந்த மாணவியாகத் திகழ்ந்தார். இளம் வயதிலேயே சிறு கதைகள் எழுதத் தொடங்கினார். அவர் எழுதிய ‘சண்டே அட் மின்டன்ஸ்’ என்ற முதல் சிறுகதை ‘மேட்மோசெல்’ என்ற பெண்கள் இதழில் வெளியானது. ஒரு கோடை விடுமுறையின்போது, கவுரவ ஆசிரியராகப் பணிபுரிய அந்த இதழி லிருந்து அழைப்பு வந்தது. 1950-களில் பிரிட்டனுக்குச் சென்றார். கேம்பிரிட்ஸ் பல்கலைக்கழகத்தில் பயின்றபோது, டெட் ஹியூக்ஸ் என்ற கவிஞருடன் தொடர்பு ஏற்பட்டது. பின்னர் அது காதலாக மாறி, 1956-ல் அவரைத் திருமணம் செய்து கொண்டார்.
‘கொலாசஸ்’ என்ற தனது முதல் கவிதைத் தொகுப்பை 1960-ல் வெளி யிட்டார் சில்வியா. அதற்குப் பெரும் வரவேற்பு இருந்தது. இதற்கிடையே தனது கணவருக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருந்ததை அறிந்து, சில்வியா அதிர்ச்சி அடைந்தார். சில்வியா - ஹியூக்ஸ் பிரிந்தனர். அப்போது இரண்டு குழந்தை களுக்குத் தாய் அவர். மனது உடைந்த நிலையில் இருந்த சில்வியா, தொடர்ந்து பல கவிதைகள் எழுதினார். 1963-ல் தனது ஒரே நாவலான ‘தி பெல் ஜார்’ என்ற நாவலை வெளியிட்டார். வாழ்வின் நெருக்கடிகள் தந்த வலியின் காரணமாக 1963-ல் தற்கொலை செய்துகொண்டார். அப்போது அவருக்கு வயது 30-தான். அதன் பின்னர், அவரது படைப்புகளைத் தொகுத்து வெளியிட்டார் ஹியூக்ஸ். அவற்றில் ஒன்றான ‘தி கலெக்டட் போயம்ஸ்’ என்ற தொகுப்பு 1982-ல் புலிட்சர் விருதைப் பெற்றது.