

அதிரடியான கேள்வி ஒன்றை மாண்பமை சென்னை உயர் நீதிமன்றம் முன் வைத்து இருக்கிறது. “அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தங்கள் பிள்ளைகளை அரசுப் பள்ளிகளில் சேர்ப்பதை ஏன் கட்டாயம் ஆக்கக் கூடாது?”
‘அரசுப் பள்ளிகளில் தரமான கல்வி வழங்கப்பட வேண்டும்; அடித்தட்டு மக்களின் பிள்ளைகள் சிறந்த குடிமகன்களாக உருவாக வழிவகை செய்யப்பட வேண்டும்’ என்கிற அக்கறையுடன் மாண்பமை நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
இதனையொட்டியே மேலும் சில கருத்துகளையும் நீதியரசர் தெரிவித்து இருக்கிறார். அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமல்ல; அரசு ஊழியர்கள், அலுவலர்கள் அத்தனை பேருக்குமே இந்தக் கேள்வி நீட்டிக்கப்பட வேண்டியதுதான். உயர் நீதிமன்ற நீதிபதி எழுப்பியுள்ள கேள்வி, முழுக்க முழுக்க நியாயமானதே!
ஆனால், அரசு அலுவலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள், தாங்கள் விரும்பும் பள்ளியில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்கான எல்லா உரிமையும் உண்டு என்றுதான் தோன்றுகிறது. 'இந்தப் பள்ளியில்தான் சேர்த் தாக வேண்டும்' என்று யாரையும் கட்டாயப்படுத்துவது, அரசிய லமைப்பு சட்ட உரிமைகளுக்கு மாறானது என்றும் கருத இடம் இருக்கிறது. அரசு ஊழியர் என்பத னாலேயே, பிற குடிமகன்களுக்குக் கிடைக்கும் தனி மனித உரிமைகள் இல்லாமல் போய்விடாது.
மாண்பமை உயர் நீதிமன்றம், விளக்கம் கேட்டு இந்தக் கேள்வியை, தமிழக அரசிடம் முன்வைத்து இருக்கிறது. அரசின் பதில், சட்டப்படியான உரிமைகளை எடுத்துரைக்கும் என்று எதிர் பார்க்கலாம். அதற்கு முன்பாக வேறு ஒரு கேள்வியும் எழுகிறது. இது இன்னமும் பொருத்தமான தாக, சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டதாக, அரசியலமைப்பு சட்ட உரிமைகளை மீறாததாக இருக்க சாத்தியம் உள்ளதாகத் தெரிகிறது.
அரசு பள்ளி மாணவர்களுக்கு சலுகை
பொதுவாக, மிக அதிகக் கட்டணம் செலுத்தி, 'தரமான' தனியார் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைப் படிக்க வைப்பவர்கள் எல்லாருமே, உயர் கல்வி என்று வரும் போது, அரசுக் கல்லூரிகளையே தேர்வு செய்கின்றனர். அரசு மருத்துவக் கல்லூரி, அரசுப் பொறியியல் கல்லூரி என்றுதானே போட்டிக்கு வருகின்றனர்? அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் மட்டுமே, உயர் கல்விக்கு அரசுக் கல்லூரிகளில் விண்ணப்பிக்கலாம் என்று ஏன் ஒரு விதிமுறை கொண்டு வரக் கூடாது? குறைந்த பட்சம், அரசுப் பள்ளி மாணவ / மாணவியருக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று சாதாரண, நடைமுறை சார்ந்த அரசாணை பிறப்பித்தாலே போதுமே!
அரசு அலுவலர்கள், ஊழியர்கள், ஆசிரியர்கள் என்று இனம் பிரித்து, தனியார் பள்ளிகளில் சேர்ப்பதற்குத் தடை விதிப்பதில் உள்ள, அடிப்படை உரிமை சார்ந்த சட்டச் சிக்கல்கள் சற்றும் இல்லாத ஒரு எளிய நடைமுறையை ஏன் சிந்தித்துப் பார்க்கக் கூடாது? நன்கு விவரம் தெரிந்த, மக்கள் நலனில் அக்கறை கொண்ட தலைவர்கள் கூட, இந்தக் கோரிக்கையை எழுப்புவதில்லை. அரசாங்கக் கல்வி நிறுவனங்களில் பயின்றவர்கள் மட்டுமே, குடிமைப் பணிகள் (ஐஏஎஸ்) உள்ளிட்ட அரசுப் பணிக்கு வர முடியும் என்று உத்தரவு பிறப்பிக்க முடியாதா?
பஞ்சாயத்து, நகராட்சி, மாநகராட்சி, அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை ஒரு முறையேனும் நேரில் சந்தித்துப் பேசுகிற 'வாய்ப்பு' கிடைக்கிற யாருக்கும் ஓர் உண்மை, சட்டென்று உறைக்கும். இவர்களில் மிகப் பெரும்பாலோரின் பெற்றோர், வறுமையில் சிக்கித் தவிப்பவர்கள். நிலையான வருமானம் அற்றவர்கள். இவர்களுக்கான குறைந்தபட்ச நல்வாழ்வை உறுதிப்படுத்துகிற எந்தவொரு திட்டத்தை நாம் கையில் வைத்து இருக்கிறோம்? தொடக்கப் பள்ளி முதல் உயர் கல்வி வரை அரசு நிறுவனங்களிலேயே படித்து முடித்து விட்டு வெளியே வருகிற, சாமான்யர்களின் பிள்ளைகளுக்கு இன்று நாம் என்ன உதவி செய்து இருக்கிறோம்?
கோரிக்கைகள் நீர்த்துப் போகக் கூடாது
கிராமப்புறங்களில் இருந்து கல்லூரிக்கு, பட்டம் முடித்த பின் பணிச் சந்தைக்கு வரும் எண்ணற்ற, முதல் தலைமுறைப் பட்டதாரி இளைஞர்கள், இளைஞிகளுக்கு நாம் எங்காவது முன்னுரிமை தந்து இருக்கிறோமா? 'அரசுப் பள்ளிகளை ஆதரிக்க வேண்டும்; அரசுப் பள்ளிகளைத் தரம் உயர்த்த வேண்டும்' என்பதெல்லாம் உயரிய நோக்கம் கொண்ட நல்ல கருத்துகள்தாம். ஐயம் இல்லை.
ஆனால் இதனை ஒட்டி எழுப்பப்படுகிற, நடைமுறைக்கு ஒத்துவராத, சட்டப்படி நிராகரிக்கப் படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் கொண்ட வாதங்கள் எல்லாம், ஒரு மிக நியாயமான கோரிக்கை, நீர்த்துப் போகவே துணை செய்யும். அவர்கள் ஏன் அங்கே இருக்கிறார்கள்? 'இங்கே' ஏன் வரக் கூடாது' என்கிற கேள்விகள் அர்த்தம் உள்ளவைதாம். ஆனாலும், ஏற்கெனவே 'இங்கே' இருப்பவர்களுக்கு என்ன செய்து விட்டோம் என்று சிந்தித்துச், செயல்படுதல், இன்னமும் ஆழமானது. ஆரோக்கியமானது.
'வசதிப்பட்ட' பிள்ளைகளை அரசுப் பள்ளிகளின் பக்கம் திருப்பி விடுவதனால் மட்டும், என்ன பெரிதாகப் பயன் விளைந்து விடப்போகிறது? கீழே இருப்பவர்களைக் கை கொடுத்துத் தூக்கி விடுகிற பணியை முதலில் தொடங்குவது இன்னமும் அறிவுடைமையான செயலாக இருக்கும். 'பெரியவர்கள்' தம் கடைக்கண் பார்வையை, கடைக்கோடிப் பக்கமும் திருப்பினால் நன்றாக இருக்கும்.