லால் பகதூர் சாஸ்திரி 10

லால் பகதூர் சாஸ்திரி 10
Updated on
1 min read

வரலாற்று நாயகர் லால் பகதூர் சாஸ்திரியின் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

# மூன்று மாதக் குழந்தையாக இருந்தபோது கங்கைக் கரையில் தொலைந்து போனார். இடையர்களால் மீட்கப்பட்டு அவர்களால் சிலகாலம் வளர்க்கப்பட்டு பின்னர் மீட்கப்பட்டார். ஒன்றரை வயதில் தந்தை இறந்துவிட, மாமாவின் பராமரிப்பில் வளர்ந்தார்.

# ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றபோது மைனராக இருந்தும் சிறை புகுந்தார். பின்னர் உப்பு சத்தியாக்கிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கு கொண்டார். ஒன்பது வருடங்களை சிறையில் கழித்தார்.

# உடல் நலமில்லாத மகளைப் பார்க்க பரோலில் வந்தார்; மகள் இறந்துவிடவே மீண்டும் சிறை புகுந்தார். பிரதமராக இருந்தபோது தனது மகன், கல்லூரியில் சேர பரிந்துரை தர மறுத்துவிட்டார்.

# சாதி அடையாளம் அற்றவர். பெயருக்கு பின்னால் இருந்த சாதிப் பெயரைத் துறந்து ஹரிஜன சேவையில் தீவிரமாக ஈடுபட்டார். ‘சாஸ்திரி’ என்கிற பட்டம் அவர் காசி, வித்யா பீடத்தில் படித்துப் பெற்றது.

# சிறந்த நிர்வாகி. ஜி.பி.பந்த் அமைச்சரவையில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது பெண் நடத்துநர்களை கொண்டு வந்தார். உள்துறை அமைச்சராக இருந்தபோது லோக்பாலை அமல்படுத்த அப்போதே அவர் ஆசைப்பட்டார்.

# எளிமையின் உச்சம். காமராஜர் திட்டத்தால் பதவி விலகிய பின்னர் பருப்பு, காய்கறிகளை உணவில் குறைக்கச் சொன்னார். சேமிக்கிற அளவுக்கு சம்பளம் வருவது தெரிந்ததும் சம்பளத்தை குறைத்துக்கொண்டார். ஒருமுறை காஷ்மீர் பயணத்தின்போது சொந்தமாக ஸ்வெட்டர்கூட இல்லாமல் இருந்தார். அவர் இறந்தபோது காருக்கு கட்ட வேண்டிய கடன் பாக்கி இருந்தது.

# போர்க்காலத்தில் ‘ஜெய் ஜவான் ஜெய் கிஸான்' (வீரர்களுக்கு வெற்றி! வேளாண்மைக்கு வெற்றி!) என்கிற கோஷத்தை தந்தார். தேசிய பால்பண்ணை வளர்ச்சி துறையை உண்டாக்கி வெண்மைப் புரட்சிக்கான அடித்தளமிட்டார்.

# நேருவின் மறைவுக்குப் பின்னர் இந்தியாவின் பிரதமர் ஆனார். இந்தித் திணிப்பு, மலையகத் தமிழர்களை அகதிகளாக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது ஆகியவை இவர் மீதான விமர்சனங்கள்.

# கட்ச் பகுதியில் பாகிஸ்தானுடன் நிலத்தகராறில் அமைதி யாக ஒப்பந்தம் செய்துகொண்டார். சீனப்போரில் இந்தியா தோற்றிருந்தது வேறு பாகிஸ்தானுக்கு உத்வேகம் தந்திருந்தது. காஷ்மீரில் கலவரங்கள் சூடு பிடித்தன. சாஸ்திரி தீரத்தோடு வழிகாட்டினார். சர்வதேச எல்லைக் கோட்டை கடந்து லாகூர்வரை இந்திய ராணுவம் பாய்ந்த போது சாஸ்திரியை உலகம் அண்ணாந்து பார்த்தது.

# தாஷ்கண்ட்டில் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர் மர்மமான முறையில் இறந்து போனார். 20 மாதங்களே இந்தியாவை ஆண்டாலும் எளியவர்களின் தலைவராக திகழ்ந்த அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in