

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் ஆட்டோ ஓட்டுநர் குடும்பத்தினர் மீது, பகலில் கடைவீதியில் பலரும் பார்த்திருக்க காவல் துறையினர் மூன்று பேர் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மக்களை அதிர வைத்திருக்கிறது. இதேபோல, சென்னை - திருவல்லிக்கேணி அரசு மருத்துவமனையில், கர்ப்பிணிப் பெண் ஒருவர் பெண் காவலரால் தாக்கப்பட்டார்.
வேலூர் சிறையில் காவலராக பணிபுரியும் மூர்த்தி, தனது உயர் அதிகாரி இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வத்திடம், பத்து தினங்கள் விடுப்பு கோரினார். இன்ஸ்பெக்டர் விடுப்பு அனுமதிக்கு ரூ.2000 லஞ்சம் கேட்டார். காவல் துறையில் பணிபுரிபவர்களே தங்கள் மேல் அதிகாரிக்கு லஞ்சம் கொடுத்தால் தான் காரியம் நடக்குமா?
இதுதான் தமிழக காவல் துறையின் உண்மை முகத்துக்கு உதாரணமா? காவல் துறையை மக்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? இதோ சிலரது கருத்துகள்...
ராமலிங்கம், ஓய்வு பெற்ற ஊழியர்: "போலீஸார் தங்களது கடமையை நேர்மையாகச் செய்யவேண்டும். காசு வாங்கிக் கொண்டு அவர்கள் கடமையை விற்கக் கூடாது. ஆனால் தற்போது ரவுடிகளுக்கும், அநீதி இழைப்பவர்களுக்கு மட்டுமே காவல்துறை உதவிபுரிகிறது. மேலும் ஒரு சில ரவுடிகளே போலீஸ் வேலையில் சேர்ந்து ஏழை மக்களுக்கு எதிராக செயல்படுகின்றனரோ என்று நினைக்கத் தோணுது. உதாரணமாக, திருவண்ணாமலை சம்பவத்திலே அவர்களின் ஆக்ரோஷமான செயல்பாடு வெளிப்பட்டிருப்பதை காணமுடிகிறது."
இருதயநேசன், ஏ.டி.எம் காவலாளி: "உண்மையில் போலீஸை பார்த்தால் எனக்கு எதுவும் தோணலை. நான் இரண்டு நாட்களுக்கு முன்பு என்னுடைய பர்ஸை தவறவிட்டுவிட்டேன், அதில் என்னுடைய ஏ.டி.எம் கார்டு, சீசன் டிக்கெட், அடையாள அட்டை போன்றவை இருந்தன. எனவே, பக்கத்தில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் என்னுடைய பர்ஸ் திரும்ப கிடைக்கவில்லை."
சுகுணா, தள்ளுவண்டிக் கடைக்காரர்: "போலீஸ்காரர்கள் நல்ல பாதுகாப்பு கொடுக்கிறார்கள். அவர்கள் இல்லாவிட்டால் எங்களால் இங்கு இவ்வளவு சுதந்திரமாக கடை நடத்த முடியாது. இங்க நாற்பது வருஷமா கடை வைத்திருக்கிறேன். கடை பக்கத்தில் ஒயின்ஷாப் இருக்கிறது. தினமும் ஏதேனும் பிரச்சினை நடக்கும்போதெல்லாம் போலீஸ்காரங்கதான் பாதுகாப்பு கொடுத்து உதவியாக இருக்கிறார்கள். அவர்கள் இல்லை என்றால் எங்களால் பிழைக்க முடியாது."
சுவாதி, கல்லூரி மாணவி: "போலீஸ்காரர்களும் சராசரி மனிதர்கள்தான். நமக்கும் அவர்களுக்கும் இருக்கும் வித்தியாசம் காக்கிச்சட்டை மட்டும்தான். தமிழ்நாட்டு போலீஸ் லஞ்சம் வாங்குவதிலே குறியாக இருக்கிறார்கள். ஒரு சிலர்தான் நேர்மையுடன் செயல்படுகின்றனர்."
பொன்னி, முதியவர்: "தமிழ்நாட்டு போலீஸார் மக்களின் பாதுகாப்பு குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும். நான் எதற்காகவும் போலீஸிடம் சென்றதில்லை. எங்கள் வீடு அருகில் ஏதேனும் பிரசசிசனை என்றால் உடனே வந்து உதவி செய்வதைப் பார்த்திருக்கிறேன்."
திலகம், முதியவர்: "போலீஸ் பொதுவாகவே அவர்கள் கடமையை செய்கின்றனர். மக்களாகிய நாமும் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். தேவையான இடத்தில் உதவிபுரிகின்றனர். அவர்களின் கடுமையான வேலைகளுக்கு நடுவில் கூட மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க தவறுவதில்லை. ஒரு தடவை நான் அளித்த புகாரின்பேரில் விரைந்து செயல்பட்டு எனக்கு உதவி புரிந்தனர்."
(ப்ரீத்தி, சையத், பச்சைமுத்து, ஹீனா, யாழினி, தயாளன்)
ப்ரீத்தி, ஒன்பதாம் வகுப்பு மாணவி: "என்னுடைய பார்வையில் போலீஸ், மக்களுக்காக தங்கள் கடமையைச் செய்பவர்கள். அவர்களைப் பார்க்கும்போது பாதுகாப்பு உணர்வு கிடைக்கிறது. நமக்கு ஏதேனும் பிரச்சினை என்றால் வந்து உதவி செய்வார்கள். மக்களுக்கு பிரச்சினையே வராதபடி அவர்கள் தடுத்தால் நல்லது."
சையத், ஆறாம் வகுப்பு மாணவன்: "போலீஸ்காரர்கள் நல்லவர்கள்தான். தேவையான இடத்தில் அவர்கள் உதவி செய்கிறார்கள். ஒருமுறை என் உறவினர்களுடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது அங்கு சில ரவுடிகள் வந்து பணம் கேட்டு மிரட்டிச் சென்றனர். பின்னர் போலீஸில் புகார் செய்தபோது அவர்கள் வந்து எங்களுக்கு உதவி செய்தனர்."
பச்சைமுத்து, பெட்ரோல் பங்க் ஊழியர்: "போலீஸ் என்றாலே தனி மரியாதைதான். அது பயம் இல்லை. அவர்கள் கடமையை அவர்கள் செய்கிறார்கள் என்று நினைக்கிறேன். ஒரு தடவை சில போலீஸ்காரர்கள் இங்கேயே வந்து ஒருவரை தூக்கிச் சென்றனர். "என்ன? எதுக்கு?" என்று கேட்டதற்கு, "உங்க வேலைய நீங்க பாருங்க, எங்க கடமையை நாங்க செய்யறோம்'னு சொன்னார்கள்."
ஹீனா, குடும்பத் தலைவி: ''போலீஸ்காரங்க இருக்கிறது மக்களுக்கு பாதுகாப்புதான். தமிழ்நாட்டு போலீஸ்காரங்க ஏதாவது நடந்தா தான் அவங்க கடமையை செய்யனும்னு நினைக்கிறாங்க, ஆனால் அதுமாதிரி இருப்பது தவறு. பிரச்சினை வருவதற்கு முன்னரே தேவையான பாதுகாப்பை அளிக்கவேண்டும்.''
யாழினி, தனியார் நிறுவன ஊழியர்: "போலீஸ்காரர்களை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய இடத்தில் கொடுக்காமல், தேவையில்லாத இடத்தில் கொடுப்பார்கள். அரசியல் தலைவர்கள் வருகிறார்கள் என்றால் தேவையில்லாமல் அளவுக்கு அதிகமான போலீஸ் பாதுகாப்பு தரப்படுகிறது. ஆனால், இரவு நேரங்களில் பெண்கள் வேலையை விட்டு வீடு திரும்பும்போது அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு இல்லை."
தயாளன், முதியவர்: "தமிழக போலீஸார் கெட்டிக்காரர்கள். குற்றவாளிகளைக் கண்டுபிடித்து தண்டனை பெற்றுத் தருவதில் வல்லவர்கள். இன்னும் விரைந்து செயல்பட்டால் அவர்கள் குற்றங்களைத் தடுக்க முடியும்."
(பிரவீன்குமார், கீதா, விஜயலட்சுமி)
பிரவீன்குமார், ஊழியர்: "போலீஸில் நல்லவர்களும் இருக்கிறார்கள்; கெட்டவர்களும் இருக்கிறார்கள். தவறான போலீஸ்காரர்கள் பழிவாங்கும் எண்ணத்தோடு செயல்படுகிறார்கள். அதுமாதிரி இல்லாமல் மக்களுக்கு எது பாதுகாப்போ, தேவையோ அதை அறிந்து அந்த நோக்கத்தோடு செயல்படவேண்டும்."
கீதா, குடும்பத் தலைவி: "போலீஸ்காரர்களும் நம்மைப் போன்றவர்கள்தான். மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டு போலீஸார் அதிக பொறுப்புடன் செயல்படுகின்றனர். அவர்கள் குடும்பத்தையும் மறந்து மக்களுக்காக 24 மணி நேரமும் சேவை புரிகின்றனர். எந்த நேரத்தில் அழைத்தாலும் மறுக்காமல் உதவி செய்கின்றனர். இயற்கை சீற்றங்கள் ஏற்படும்போது முதலில் வந்து மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கின்றனர்."
விஜயலட்சுமி, ஐ.டி. ஊழியர்: "போலீஸ் என்பவர்கள் சுய நலமற்று, பொறுப்புடன் மக்களுக்கு சேவை செய்யவேண்டும். ஆனால் தற்போதுள்ள தமிழ்நாட்டு போலீஸ் கடமையை செய்வதில்லை. தேவையான வசதிகள் அமைத்தும் அவற்றின் கடமையை செய்ய மறுக்கிறது. போதுமான ஊதியம் அளித்தும் அவர்கள், விதிமீறி செயல்படுகின்றனர்."