Published : 12 Jun 2016 15:26 pm

Updated : 14 Jun 2017 12:59 pm

 

Published : 12 Jun 2016 03:26 PM
Last Updated : 14 Jun 2017 12:59 PM

குழந்தைகள் உழைப்பிலிருந்து விடுதலை பெறுவது எப்போது?

சமீபத்தில் வேலூர், சேலம் ஆகிய மாவட்டங்களுக்குச் சென்றிருந்தேன். 15 ஆண்டுகளுக்கு முன் குழந்தை தொழிலாளர் பற்றிய ஆய்வுக்காக நான் சென்றிருந்த போது வேலூரில் பீடித் தொழிலிலும், சேலத்தில் வெள்ளிக் கொலுசுப் பட்டறைத் தொழிலிலும் ஏராளமான குழந்தைகள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

நான் சமீபத்தில் வேலூர் சென்றிருந்த போது அக்குழந்தைகளின் தற்போதைய நிலை என்ன என்று பார்ப்பதற்காக ஏற்கெனவே அதிகம் பீடித் தொழில் நடக்கக்கூடிய விருதம்பட்டு பஞ்சாயத்திற்கும், குடியாத்தம் பகுதியிலுள்ள அக்ரஹாரம் பஞ்சாயத்திற்கும் சென்றிருந்தேன். இன்றும் கூட பள்ளிக்கூடத்திற்கே போகாத குழந்தைகள் பீடி சுற்றும் குழந்தைகளைக் காண முடிந்தது.

இவர்கள் குழந்தைத் தொழிலாளர் கற்ற பள்ளியில் சேர்ந்திருந்தாலும் காலையிலும், மாலையிலும் சுமார் 6 மணி நேரத்திற்கு பீடி சுற்றுவது, பீடிக்கு லேபிள் ஒட்டுவது போன்ற வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். அதே போல் குடியாத்தம் பகுதியில் பள்ளிக்குச் செல்கின்ற ஏராளமான குழந்தைகள் காலையிலும் மாலையிலும் வீட்டு வேலைசெய்ய நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகளின் பெயரில் பீடி முதலாளியிடம் கடன் பெற்றிருக்கிறார்கள்.

வெள்ளிக் கொலுசுப் பட்டறைகள் அதிகம் உள்ள கொலுசு உற்பத்தியில் பெயர் பெற்ற சேலம் மாவட்டத்தில் சிவதாபுரம் பகுதிக்கு சென்றிருந்தேன். 15 ஆண்டுகளுக்கு முன் இங்கு ஏராளமான குழந்தைகள் வெள்ளிக் கொலுசு பட்டறைகளில் அவர்களது பெற்றோர்களால் அடகு வைக்கப்பட்டு கொத்தடிமைகளாக வேலை செய்து கொண்டிருந்தனர். வருடாவருடம் போகி பண்டிகை அன்று இவர்கள் கணக்கு சரிபார்க்கப்பட்டு, புதிய கடன், புதிய அடிமை வாழ்வு தொடரும். போகிப் பண்டிகைக்கு குழந்தைப் பருவங்கள் பலியாகிக் கொண்டிருந்தன. அனைவருக்கும் கல்வி திட்டம், கல்வி உரிமைச் சட்டம் ஆகியவை வந்த பின் நலையில் பெரும் மாற்றத்தை எதிர்பார்ப்பது இயல்பு. ஆனால், அங்கு பள்ளிச் சீருடையில் நிறைய குழந்தைகள் மாலை வேளைகளில் வேலை செய்து கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

லஷ்மிக்கு (பெயர் மாற்றம்) 12 வயதிருக்கும். சிவதாபுரம் அரசுப் பள்ளியில் ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். பெற்றோர்கள் மறைந்துவிட்ட நிலையில் வயதான தாத்தா பாட்டியுடன் வசித்து வருகிறார். தினமும் காலையில் எழுந்தவுடன் 6 மணிக்கு பட்டறைக்குச் சென்று விட வேண்டும். 9 மணி வரைக்கும் வேலைசெய்து விட்டு 9.30 மணிக்கு பள்ளிக்குச் சென்று மீண்டும் மாலை பள்ளி விட்டவுடன் 6 மணியிலிருந்து 9 மணி வரை வேலை செய்ய வேண்டும். பள்ளிக்கூடம் போய்விட்டு தினம் 6 மணி நேரம் வேலை செய்வதால் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை என்கிறார் இந்தச் சிறுமி.

பட்டறை முதலாளிக்கு இவர்கள் குடும்பம் பட்டிருக்கும் கடன் ரூ.30 ஆயிரம். எனவே, கடனை அடைக்காமல் வெளியே வர முடியாது. கடன் எப் பொழுது அடையும் என்று தெரியாது. சட்ட உரிமைப்படி எட்டாவது வரை கட்டாயக் கல்வி பயின்று முடித்தவுடன் முழு நேரத் தொழிலாளியாக (ஒரு நாளைக்கு 12 மணி நேரம்) மாறுவதைத் தவிர வேறு வழியில்லை. லஷ்மியைப் போல சேலம் மாவட்டத்தில் பல பகுதிகளின் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பள்ளிப் படிப்பு - கடுமையான உழைப்பு என்ற இரட்டைப் பளுவிற்கு ஆளாகி இருக்கின்றனர். இதில் பலியாவது பள்ளிக் கல்வியும் குழந்தைப் பருவமும்தான்.

ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 12-ம் தேதி சர்வதேச குழந்தைத் தொழில் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப் படுகிறது. ஆனால் குழந்தைகள் தொழிலாளர்களாக மாறுவதைத் தடுப்பதில் போதிய கவனம் எடுப்பதில்லை. குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கும் தமிழகம் போன்ற மாநலங்களில் கூட இப்பிரச்சினை புதிய வடிவங்கள் எடுக்கின்றன.

உத்திரப்பிரதேசத்திலிருந்தும் மேற்கு வங்கத்திலிருந்தும் ஏராளமான குழந்தைகள் கன்னியாகுமரியிலுள்ள குளச்சலில் மீன்பிடி தொழிலுக்கு வருகின்றனர். ஒடிசா மாநலத்திலுள்ள ஏராளமான மலைவாழ் மக்கள் தமிழகம் முழுவதும் உள்ள செங்கல் சூளைகளிலும் இதர வேலைகளிலும் குடும்பத்துடன் ஈடுபட்டுள்ளனர்.

செங்கல் சூளைகளில் ஒரு முறை இருக்கிறது. இதன்படி தாய், தந்தை மற்றும் ஒரு குழந்தை சேர்ந்தால் தான் ஒரு குழு. தாய் களிமண்ணை தயார் செய்ய, தந்தை செங்கல்களை அச்சில் வார்க்க, ஒரு குழந்தை செங்கல்கள் காய்வதற்காக அதைத் திருப்பித் திருப்பி விடவேண்டும். ­இன்றும் இப்படி சேர்ந்து உருவாக்கும் 1000 செங்கற்களுக்கு கூலி வழங்கப்படுகிறது. இதில் கடன் வாங்கியதற்காக குறைந்த கூலியும் கொத்தடிமை முறையும் மிகவும் சாதாரணமாக நடக்கக் கூடியவை.

தமிழ்நாட்டில் தீப்பெட்டி, பீடி, கொலுசு, விசைத்தறி, பட்டுத்தறி, ஆபரணக்கற்கள் மெருகூட்டும் தொழில், தோல் பதனிடுதல், கல்லுடைக்கும் தொழில் போன்றவற்றில் ஏராளமான குழந்தைகள் வேலை செய்து கொண்டிருந்தனர். பல்வேறு முயற்சிகள் காரணமாக இவை குறைக்கப் பட்டாலும் தற்போதும் கூட ஏராளமான குழந்தைகள் பகுதி நேரமாக இத்தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இது தவிர பஞ்சுமிட்டாய், பொம்மைகள் விற்பது போன்ற தொழில்களில் ஏராளமான புலம் பெயர்ந்த குழந்தைகள் இடைவிலகி ஜவுளி ஆலைகளிலும், அங்காடித் தெருக்களிலும், மற்ற சிறு தொழில்களிலும் ஏராளமானவர்கள் மிகக் குறைவான கூலிக்கு சுரண்டல் மிகுந்த நலையில் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

வளர்ச்சியே போய்ச்சேராத கடையில் மைல் மக்களாக இருக்கக் கூடிய மலைவாழ் மக்களின் குழந்தைகள் 8வது வரை கூட படிக்க வழியில்லாமல் பருத்தி விதை உற்பத்திக்கும், வேறு விவசாயம் பணிகளுக்கும் முழு நேரமாக தள்ளப்பட்டிருக்கின்றனர்.

மகிழ்ச்சியான நாட்கள், தொழில் வளர்ச்சி, நாட்டின் மொத்த உற்பத்தியில் வளர்ச்சி என்று இந்தியா மார்தட்டிக் கொண்டிருக்கும் இத்தருணத்தில் லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு ஏன் குழந்தைப் பருவம் மறுக்கப்படுகிறது?

எத்தனை குழந்தைகள் வேலை செய்கிறார்கள்?

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 5-14 வயது வரை சுமார் 127 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக கணக்கெடுக்கப்பட்டது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 43 லட்சம் குழந்தை தொழிலாளர்கள் தான் என அரசாங்கம் அறிவித்தது.

இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. எண்ணிக்கையை குறைப்பதன் மூலம் குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கையைக் குறைக்கப் பார்க்கிறார்கள். மக்கள் தொகை கணக்கெடுப்பில் தொழிலாளர்களை, பிரதான தொழிலாளர்கள் அதாவது கடந்த ஆண்டில் ஆறுமாதத்திற்கு மேல் வேலை செய்தவர்கள் மற்றும் விளிம்புநலை தொழிலாளர்கள் அதாவது ஆறுமாதத்திற்குக் குறைவாக வேலைசெய்தவர்கள் என பிரிக்கின்றனர்.

2001 கணக்கெடுப்பின்படி 127 லட்சம் குழந்தைத் தொழிலாளர் என்பது பிரதான மற்றும் விளிம்புநலை குழந்தைத் தொழிலாளர்களை உள்ளடக்கியது. 2011-ல் குழந்தைத் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்து விட்டதாகக் காட்டுவதற்கான 43 லட்சம் என பிரதான தொழிலாளர்களை மட்டும் காட்டுகிறது அரசாங்கம். உண்மையில் விளிம்புநிலை தொழிலாளர்களையும் சேர்த்தால் 2011-ல் குழந்தைத் தொழிலாளர்களின் எண்ணிக்கை 101 லட்சம்.

எப்படியிருப்பினும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆதாயத்திற்காக வேலை செய்யும் குழந்தைகளை மட்டுமே கணக்கில் கொள்கிறது. பகுதிநேரமாக வேலை செய்யும் குழந்தைகள், வீட்டுவேலை செய்யும் குழந்தைகள், குடும்பத் தொழிலில் வேலை செய்யும் குழந்தைகள் போன்றோர் இக்கணக்கில் வருவதில்லை. வேலை செய்யும் அனைத்துக் குழந்தைகளையும் உள்ளடக்கி, ஒரு விரிந்த அணுகு முறையில் பார்த்த யுனிசெப் அறிக்கை ஒன்று இந்தியாவில் 280 லட்சம் குழந்தைத் தொழிலாளர்கள் இருப்பதாக மதிப்பீடு செய்திருக்கிறது.

இந்த அறிக்கையின்படி இந்தியாவில் சுமார் பத்து கோடி குழந்தைகள் வறுமை நலையில் பொருளாதாரத்தின் அடிமட்டத்தில் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. குறிப்பாக பெரும்பாலான குழந்தைத் தொழிலாளர்கள் தலித் மற்றும் பழங்குடிகளாக இருப்பதாக இந்த அறிக்கை கூறுகிறது.

2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழகத்தில் 4.2 லட்சமாக இருந்த குழந்தைத் தொழிலாளர் எண்ணிக்கை 2011ல் 2.8 லட்சங்களாக குறைந்திருக்கிறது. பகுதி நேரமாக வேலை செய்யும் குழந்தைகள், புலம் பெயர்ந்த குடும்பங்களிலுள்ள குழந்தைத் தொழிலாளர்கள் இதில் அடங்காது. மிகவும் வளர்ச்சி அடைந்துவிட்டதாகக் கூறப்படும் தமிழகத்தில் கூட குழந்தைத் தொழிலாளர் பிரச்சனை ஒரு சவாலாகவே இருக்கிறது.

குழந்தைகள் உரிமைக்கான சட்டங்கள் சொல்வது என்ன?

ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தை உரிமைகள் உடன்படிக்கையின்படி 18 வயது நிரம்பாதவரை அவர்கள் குழந்தைகள் என உலக நாடுகள் பெரும்பாலும் ஒப்புக் கொண்டுள்ளன. 1992-ல் இந்திய அரசாங்கம் அதற்கு ஒப்புதல் கையொப்பமிட்டுள்ளது. ஆனால் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு மற்றும் ஒழுங்குபடுத்துதல் சட்டம், 1986ன் படி 14 வயது வரைதான் குழந்தைத் தொழிலாளர்களாக கருதப்படுகிறது. அதிலும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள 64 தொழில்களிலும், அவற்றிலுள்ள வெவ்வேறு வேலைகளில் மட்டுமே 14 வயதிற்கு கீழான குழந்தைகள் வேலை செய்யக் கூடாது என்று கூறுகிறது.

மற்றவற்றில் வேலை செய்ய குழந்தைகளுக்கு தடையில்லை. 1986 சட்டம் பதிவு செய்யப்பட்ட தொழிற்சாலைகளுக்கு மட்டுமே இந்த சட்டம் பொருந்தும். இந்தச் சட்டம் வந்து 30 ஆண்டுகள் ஆனபிறகும் கூட இச்சட்டத்தினால் ஏற்பட்ட விளைவுகள் என்பத மிகக் குறைவு. 5 சதவிகிதத்திற்கும் குறைவான வழக்குகளில்தான் முதலாளிகளுக்கு தண்டனை அளிக்கப்பட்டது. மேலும் குழந்தைகள் அதிகம் வேலை செய்யக் கூடிய விவசாயம், வீட்டிலேயே செய்யக் கூடிய பீடி போன்ற தொழில்கள் இந்தச் சட்டத்தின் கீழ் வரவில்லை. மீட்டெடுத்த குழந்தைத் தொழிலாளர்களுக்கான தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்ட பள்ளிக் கூடங்களும் தற்போது பல பிரச்சனைகளை சந்திப்பதுடன் குழந்தைத் தொழிலாளர்களை வெகுவாகக் குறைக்க இது உதவவில்லை.

அனைவருக்கும் 6 முதல் 14 வரை இலவச கட்டாயக் கல்வி என்று கல்வி உரிமைச் சட்டம், 2009 வந்தவுடன் 1986 குழந்தைத் தொழிலாளர் சட்டம் பயனற்றதாகிவிட்டது. எனவே, இந்தச் சட்டத்தைத் திருத்துவதற்காக 2013 ஒரு மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு கேபினட் அமைச்சகம் அதற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது. காலாவதியாகிப் போன ஒரு சட்டத்தை முழுமையாக ஒழித்து புதிய சட்டம் கொண்டு வருவதற்குப் பதில் குழந்தைகளுக்கு எதிரான சில திருத்தங்கள் அதில் சேர்க்கப்பட்டுள்ளன.

சட்டத் திருத்தம்

கல்வி உரிமைச் சட்டத்திற்கேற்ப 14 வயது வரை குழந்தைகள் எந்த வேலையும் செய்யக் கூடாது என திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க ஒரு அம்சம். ஆனால் மக்களின் ச­க நிலையை கணக்கில் கொண்டு குடும்பத் தொழில்களில் குழந்தைகள் பள்ளி நேரம் தவிர மற்ற நேரங்களில் வேலை செய்யலாம் என்று திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. ஏற்கெனவே குறிப்பிட்டது போல் பல தொழில்களில் பள்ளி நேரம் போக குழந்தைகள் வேலை செய்வது சட்டமாக்கப்படும். கல்வியும் போய் குழந்தைப் பருவமும் போய் குழந்தைகள் மோசமான நிலைக்குத் தள்ளப்படுவார்கள். குழந்தை உரிமைகள் ஐ.நா. உடன்படிக்கை படி விளையாட்டு, பொழுதுபோக்கு, ஓய்வு போன்றவற்றிற்கான உரிமைகள் முழுமையாக பறிக்கப்படும். குழந்தைகள் வேலை செய்வது அதிகரிக்கப்படுவதுடன் ச­க பொருளாதார நிலையில் பின் தங்கியுள்ள குழந்தைகளை இது மிகவும் பாதிக்கும். முன்பு இருந்ததை விட மோசமான நலை ஏற்படும்.

கல்வியின் நிலை

தமிழக கல்வித்துறை புள்ளிபிவிவரப்படி 100 குழந்தைகளில் 49 குழந்தைகள் மட்டுமே தற்சமயம் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள். அரசு உதவி பெறும் பள்ளிகளில் 13 சதவிகித குழந்தைகளில் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளிகளில் 35 சதவிகிதக் குழந்தைகளும் படிக்கின்றனர். இலவச நோட்டு புத்தகம், புத்தகம், கல்வி உபகரணங்கள், மதிய உணவு, போக்குவரத்து, செருப்பு போன்றவை அளிக்கப்பட்டும் 50 சதவிகிதத்திற்கும் குறைவான குழந்தைகள் மட்டுமே அரசுப் பள்ளிகளில் படிப்பதற்கான காரணம் என்ன?

அகில இந்திய கல்வி சர்வேயின்படி ­மூன்றாம் வகுப்பு படிக்கும் 78 சதவிகிதம் குழந்தைகளும், 5ஆம் வகுப்பு படிக்கும் 50 சதவிதிம் குழந்தைகளும் இரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தைக்கூட படிக்க முடியவில்லை. கணக்கிலும் கூட தரம் மிகவும் மோசமாக இருக்கிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் உள்ள குழந்தைகள் அதிலும் சக பொருளாதார நிலையில் பின் தங்கியுள்ள குழந்தைகள் தான் அரசுப் பள்ளிக்குச் செல்கின்றனர். இவர்களுள் பெரும்பாலானோர் வேலையும் செய்து கொண்டே படிப்பதனால் படிப்பில் கவனம் செலுத்த முடிவதில்லை.

பெரும்பாலான அரசுப் பள்ளிகளில் போதிய கவனத்துடன் இவர்களுக்கு பாடம் சொல்லித் தருவதில்லை. பள்ளிக் கல்வியின் மோசமான தரத்தை இது காட்டுகிறது. குழந்தைகளுக்கு நல்ல கல்வி வேண்டும் என்பதற்காக ஏழ்மையிலும் பெற்றோர்கள் தனியார் பள்ளிகளுக்கு எப்பாடு பட்டாவது தங்கள் குழந்தைகளை சேர்க்க விழைகின்றனர். பணக்காரர்களுக்கான தனியார் பள்ளிகள் போல் கீழ் மட்டத்திலுள்ளவர்களுக்காகவும் தனியார் பள்ளிகள் முளைத்திருக்கின்றன.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறை அரசு பள்ளிகளில் நன்றாகப்படிக்கும் மாணவர்களை அரசு நிதியில் தனியார் பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். அரசுப்பள்ளிகளின் தரத்தை முன்னேற்ற சீரிய முயற்சிகள் ஏதும் இல்லை. இதனாலேயே எட்டாம் வகுப்பு முடிந்தவுடன் கல்வியிலிருந்து இடைவிலகல் அதிகரித்திருக்கிறது. ஏராளமான இளம் தொழிலாளர்கள் உருவாகிறார்கள். 25 சதவிகிதம் ஏழைக்குழந்தைகளுக்கு இடம் ஒதுக்க வேண்டும் என்ற கல்வி உரிமைச்சட்டம் நிறைவேற்றப்படாத ஒன்றாக இருக்கிறது.

வளர் இளம் பருவத்தினரின் நிலை (15-19)

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 15-19 வரை இந்தியாவில் சுமார் 121 லட்சம் பேர் இருந்தனர். இவர்களில் 30 லட்சம் பேர் ஏற்கெனவே தொழிலாளர்களாக கணக்கெடுக்கப் பட்டிருக்கின்றனர். பள்ளி செல்வது 55 லட்சம் குழந்தைகள் தான். எனவே சுமார் 65 லட்சம் குழந்தைகள் பள்ளி செல்லாமலும், வேலை தேடிக் கொண்டும் வேலை செய்து கொண்டும் இருக்கிறார்கள்.

தமிழகத்தில் 15-19 வரை உள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 62.5 லட்சம். இதில் சுமார் 40 லட்சம் குழந்தைகள் தான் படித்துக் கொண்டிருக்கின்றனர். சுமார் 15 முதல் 20 லட்சம் குழந்தைகள் பள்ளிக்கு வெளியிலோ பள்ளியிலிருந்து இடைவிலகியோ இருக்கின்றனர். சுமார் 8 லட்சம் பேர் தொழிலாளர்களாக ஏற்கெனவே கணக்கிடப்பட்டிருக்கின்றனர்.

போதுமான கல்வியுமின்றி, தொழில்திறன் எதுவுமின்றி இவர்கள் மலிவான உழைப்புச் சுரண்டலுக்கு ஒரு பெரிய சந்தையாக இருக்கின்றனர். ஜவுளி ஆலைகளில் சுமங்கலித் திட்டம் என்ற பெயரிலும், ஆயத்த ஆடை நறுவனங்களிலும், பல வியாபார ஸ்தலங்களிலும், வேறு பல தொழில்களிலும் இவர்களுடைய உழைப்பு மலிவாகச் சுரண்டப்படுகிறது. புதிய சட்டத்திருத்தத்தில் இவர்கள் வளர் இளம் தொழிலாளர்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் குறிப்பிட்ட தொழில்களில் மட்டுமே இவர்கள் வேலை செய்ய தடை விதிக்கப்பட்டது. அதுவும் தெளிவாகக் கூறப்படவில்லை. இவர்கள் எந்தவித சட்டப்பாதுகாப்புமின்றி, பயிற்சித் தொழிலாளர்களாக, தொழிலாளர்களாக பெருகி வரும் சேவைத்துறையிலும் தள்ளப்படுகின்றனர்.

மாற்று என்ன?

ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்திலும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்று சொல்லப்பட்டாலும், நலிவடைந்த, ச­க பொருளாதாரத்தில் பின்தங்கிய பகுதியினர் வளர்ச்சிக்கு வெளியில் தான் இருக்கினறனர். முறைசாரா தொழிலாளர்கள் குறித்து அர்ஜின் சென்குப்தா கமிட்டி அறிக்கையில், '91 சதவிகிதத்தினர் முறைசாரா தொழில்களில் எந்தவித பணி பாதுகாப்புமின்றி இருக்கின்றனர்' என்று கணக்கிட்டிருக்கிறார். தேசிய மாதிரி சர்வேயின் பஐ (2013) கிராமப்புறங்களில் 54 சதவிகிதத்தினரும் நகர்புறங்களில் 41 சதவிகிதத்தினரும் சுயவேலை வாய்ப்பில் ஈடுபட்டிருப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

இதிலும் கிராமப்புறங்களில் சுமார் 39 சதவிகிதத்தினரும், நகர்புறங்களில் சுமார் 18 சதவிகிதத்தினரும் சுய தொழில் செய்பவராயினும் அன்றாடங்காய்ச்சிகளாக உள்ளனர். மேலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் கொண்டு வர முய்ற்சிக்கும் தொழிலாளர் விரோத சட்டங்கள் பல தொழிலாளர்களை மேலும் விளிம்பு நிலைக்குத் தள்ளும். குழந்தைகளின் பாதுகாப்பு என்பது குடும்பத்தின் பாதுகாப்பின்றி நடக்காது. விளிம்பு நலை மக்களை மேலே கொண்டு வர தீவிரமான திட்டங்களும் தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களும் தேவை. இதனுடன் ஐ.நா. சபையின் குழந்தை உரிமை உடன்படிக்கையின்படி 18 வயது வரை அனைவரும் குழந்தைகள் என அறிவிக்க வேண்டும். 18 வயது வரை அனைத்துக் குழந்தைகளுக்கும் சுரண்டலிலிருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

இதற்கு மேல்நிலை பள்ளிக்கல்வியும் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும். கல்வியின் தரம் உயர சீரான முயற்சிகள் மேற்கொள்வதோடு பொது கல்வி முறை அமல்படுத்தப்பட வேண்டும். கல்வி முழுவதும் தேசிய மயமாக்கப்பட்டு அனைவருக்கும் தரமான கல்வியை உத்தரவாதப்படுத்த வேண்டும்.

வித்யா சாகர்,முன்னாள் குழந்தைப் பாதுகாப்பு நிபுணர் -யுனிசெப் அமைப்புஅன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

குழந்தைகள்குழந்தை தொழிலாளர்கள்உழைப்பில் இருந்து விடுபடுவதுஎப்போது

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author