நான்லீனியர்: ரசூல், பவர் பாண்டி மற்றும் சில வாக்கியங்கள்!

நான்லீனியர்: ரசூல், பவர் பாண்டி மற்றும் சில வாக்கியங்கள்!
Updated on
2 min read

ஏதோ ஒரு தருணத்தில் எவரோ ஒருவர் சொல்லிச் சென்ற சாதாரண வாக்கியங்கள், உங்கள் வாழ்க்கையையே நேர்மறையாக புரட்டிப்போட்ட அனுபவம் இருக்கிறதா?

நம் ஃப்ளாஷ்பேக்கை ரீவைண்ட் செய்து பார்த்தால் நிச்சயம் அப்படி ஒன்றை நாம் கடந்து வந்ததை உணரலாம். இதை 'அன்னயும் ரசூலும்' என்ற மலையாள படத்தில் மிகச் சிறப்பாக பயன்படுத்தியிருப்பார்கள். சமீபத்தில் வெளியான 'ப.பாண்டி' படத்திலும் அப்படி ஓர் அம்சத்தைக் கண்டுகொண்டதில் கூடுதல் மகிழ்ச்சி.

முதலில் 'அன்னயும் ரசூலும்' படத்தை எடுத்துக்கொள்வோம். ரசூல் (ஃபகத் ஃபாசில்) - அன்னா (ஆண்ட்ரியா) இடையே பார்வைகளினூடே காதல் வளர்ந்திருக்கும். ரசூல் காதலில் உருகுவதைக் கண்டு அவன் காதலிக்கும் அன்னா மீது ரசிகர்கள் ஈர்ப்பு கொள்ளத் தொடங்கக்கூடும். அன்னா காதலில் மயங்குவதைக் கண்டு அவள் காதலிக்கும் ரசூல் மீது ரசிகைகளுக்கு ஈர்ப்பு கூடும்.

இப்படி இயல்பு மீறாத காட்சிகளுடன் கூடிய படத்தைப் பார்த்து முடித்த பின் எனக்கு வேறொரு விஷயத்தைக் கண்டடைய முடிந்தது. சக மனிதர்கள் போகிறபோக்கில் சொல்லும் சாதாரண வாக்கியங்கள் கூட நம் வாழ்க்கையில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நிஜம்தான் அது.

காதல் பிரச்சினையில் சிறிது காலம் சொந்த ஊர் செல்வான் ரசூல். அவன் பிரிவை ஆற்றுவதற்கு, 'ஆற்றில் குதி... நீரில் மூழ்கு... கண்களைத் திற... உன் நேசத்துக்குரியவரை பார்' என்று மிகச் சாதாரணமாக ஆறுதல் யோசனை சொல்வார் ஒரு மீனவ அன்பர்.

அது மிகவும் இயல்பான காட்சி. உரையாடல். ஏதோ 'ஃபில்லர்' போன்ற காட்சி என்பதால், அதன் மீது பார்வையாளர்களின் மனமும் வெகுவாக ஒட்டாது. அவர் சொன்னதைச் செய்து சிறிதளவு இன்பம் காண்பான் ரசூல்.

காலமும் சூழலும் புரட்டிப் போடும். எல்லாம் இழந்து தனித்து விடப்படுவான். ரசூலுக்கு வாழ்வதற்குக் காரணமில்லை. அவன் முடிவை எண்ணி கரைந்துகொண்டிருப்போம். ஆனால், அவன் வாழத் தொடங்குவான், பேரின்பத்துடன் வாழ்வான். நமக்கு வியப்பு மேலிடும்.

ஆம், அன்று ஏதோ ஒரு வெற்று நாளில் அந்த எளிய மனிதர் சொன்னது மிகப் பெரிய தீர்வு என்பது பின்னர்தாம் நமக்கு உரைக்கும். வாழ்க்கையில் பிரிவுகளுக்கும் பெருந்துயரங்களுக்கும் தீர்வு என்பது எளிதில் கிடைக்கக் கூடியதே. அதற்கு உன் மனத்தை எப்போதும் எல்லாரிடத்திலும் திறந்தே வைத்திரு என்று சொல்லாமல் சொல்லிச் செல்லும் 'அன்னயும் ரசூலும்'.

இப்போது தனுஷ் இயக்கிய 'ப.பாண்டி' படத்துக்கு வருவோம். சமீபத்தில் வெளிவந்த உருப்படியான சினிமாவில் இதுவும் ஒன்று. இரண்டாவது குழந்தைப் பருவத்தைக் காட்டியதில் மட்டுமின்றி, ஒருவருக்கு வயோதிகத்திலும் 'சோல்மேட்' எனப்படும் நெருக்கத் தோழமை மிகுதியாகத் தேவைப்படுகிறது என்பதை நேர்த்தியாகச் சொன்னது இப்படம்.

ராஜ்கிரண் - ரேவதி கதாபாத்திரங்கள் ஒன்றுசேர வேண்டும் என்ற விருப்பத்தை பார்வையாளர்களிடம் அதிகப்படுத்தியதே திரைக்கதையின் பக்குவத்தன்மைக்குச் சான்று.

பேரன், பேத்திகளுடன் மகிழ்ச்சியாக இருந்தாலும், தனக்கான வாழ்க்கையை தொலைத்துவிட்டதை உணரும் பவர் பாண்டி (ராஜ்கிரண்) மேற்கொள்ளும் ஒரு பயணம்தான் படத்தின் முக்கியப் பகுதி. அந்தப் பயணத்துக்கு வித்திடுவது, பக்கத்துவீட்டில் ஜாலியாகப் பொழுதைக் கழிக்கும் ஓர் இளம் நண்பன் மிகச் சாதாரணமாக உதிர்க்கும் வாக்கியங்கள்தான்.

''உன் பையன் வாழ்க்கையையும் உன் பேரப் பசங்க வாழ்க்கையையும் வாழ்றியே தவிர உன் வாழ்க்கையை வாழ்ற மாதிரி எனக்குத் தெரியலை." - இதுவே ராஜ்கிரண் கதாபாத்திரம் புதிய பாதை நோக்கிப் பயணிக்க வித்திடும்.

அந்த இளைஞன் அப்படிச் சொன்னதை மனதில் ஏற்றுக்கொள்ளாமல் இருந்திருந்தால் இந்த அற்புதமான உறவுத் தேடல் பயணத்துக்கே வாய்ப்பு அமையாமல் போயிருக்கும். அதற்கு மிகுந்த அழுத்தம் கொடுத்து பதியவைக்காமல் போகிறபோக்கில் மிகச் சாதாரணமாக பதிவு செய்ததே படத்தின் இயல்புத்தன்மையை வெகுவாகக் கூட்டவும் வலு சேர்த்தது.

ஆம், சக மனிதர்களால் உதிர்க்கப்படும் எந்த ஒரு சாதாரண வாக்கியமும் நம்மை நாமே சோதித்து அறிந்து நமக்கான பாதையை வகுத்துக்கொள்ள உதவும் என்பதை மீண்டும் திரை அனுபவம் மூலம் உணர்ந்தேன்.

நீங்களும் உங்கள் ஃப்ளாஷ்பேக்கை கொஞ்சம் ரீவைண்ட் செய்து பாருங்கள். உங்களையும் ஏதோ ஒரு சாதாரண வாக்கியம் நிச்சயமாக அசாதாரண சூழலை எட்டுவதற்கு வழிவகுத்திருப்பதை உணர வாய்ப்புண்டு. இல்லையேல், என்றாவது ஒருநாள் உங்களுக்கும் நிகழலாம்.

- சரா சுப்ரமணியம், தொடர்புக்கு siravanan@gmail.com

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in