

நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர்
புகழ்பெற்ற அறிவியல் எழுத்தாளரும், இயற்பியலுக்கான நோபல் பரிசை வென்றவருமான பெர்சி வில்லியம்ஸ் பிரிட்ஜ்மான் (Percy Williams Bridgman) பிறந்த தினம் இன்று (ஏப்ரல் 21). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* அமெரிக்காவின் மசாசூசெட்ஸ் மாகாணம், கேம்பிரிட்ஜில் பிறந்தார் (1882). தந்தை ஆழ்ந்த மத நம்பிக்கை கொண்டவர். தன் மகன் மத போதகராக வேண்டும் என்று விரும்பினார். ஆனால், மகனோ படிப்பில், குறிப்பாக அறிவியலில் அளவு கடந்த ஆர்வம் கொண்டிருந்தான். ஆர்பன்டேல் என்ற இடத்தில் ஆரம்பக்கல்வி மற்றும் உயர்பள்ளிக் கல்வி பயின்றார்.
* 1900-ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். பட்டப் படிப்பு முடிந்ததும், முதுகலைப்பட்டமும் முனைவர் பட்டமும் பெற்றார். அங்கேயே 1910 முதல் பதவி ஓய்வு பெறும்வரை பணியாற்றினார்.
* கல்வி கற்பித்தலோடு அங்கே ஆராய்ச்சிகளும் மேற்கொண்டு வந்தார். சில குறிப்பிட்ட ஒளியியல் நிகழ்வுகளின் அழுத்தத்தை ஆராய்ந்தார். உயர் அழுத்தத்தில் இருக்கும்போது பொருள்களின் பண்புகள் எவ்வாறு மாற்றமடைகின்றன என்பது குறித்து ஆராய்ந்தார்.
* அப்போது அதிக அழுத்தத்தில் அந்த அழுத்த உபகரணம் (pressure apparatus) வெடித்து, செயலிழந்து போனதால், அதைச் சரி செய்தார். அந்த சமயத்தில் எதேச்சையாக அதிக அழுத்தத்துக்கு உட்படும்போது தானாகவே இறுகிக்கொள்ளும் ஒரு பிளக்கைக் கண்டறிந்தார். மேலும் அதை பல்வேறு விதங்களில் திருத்தியமைத்து மேம்படுத்தினார்.
* இந்தப் புதிய மேம்படுத்தப்பட்ட உபகரணத்தைக் கொண்டு, இவரால் மிக மிக அதிக அழுத்தத்தை உருவாக்க முடிந்தது. பழைய இயந்திரத்தைவிட பன்மடங்கு அதிகத் திறன்வாய்ந்த இதைப் பயன்படுத்தி இவரும் மற்ற விஞ்ஞானிகளும் ஏராளமான புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தினார்கள்.
* பொருள்களின் உயர் அழுத்தம் குறித்த இவரது ஆய்வுகளுக்காக 1946-ம் ஆண்டில் இவருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. பொருள்களின் சுருங்கும் தன்மை, மின்சாரம் மற்றும் வெப்பம் கடத்தும் திறன், இழுவிசை வலு மற்றும் 100-க்கும் மேற்பட்ட வெவ்வேறு கலவைகளின் நெகிழ்ச்சித் தன்மைகள் குறித்து கண்டறியப்பட்டன.
* 1955-ல் ஜெனரல் எலக்ட்ரிக் நிறுவன ஆராய்ச்சியாளர்களும் இவரும் இணைந்து ஒரு உயர் அழுத்த சாதனத்தைப் பயன்படுத்தி முதல் செயற்கை வைரம் தயாரித்தனர். மேலும் உலோகங்களின் மின் கடத்தும் திறன், படிகங்களின் பண்புகள் குறித்தும் ஆராய்ந்தார். இவரது பெயராலேயே வழங்கப்படும் வெப்ப இயக்கவியல் சமன்பாடுகளான பிரிட்ஜ்மான்ஸ் தெர்மோடைனமிக் ஈக்வேஷன்சை மேம்படுத்தினார்.
* பல்வேறு அறிவியல் அமைப்புகளில் உறுப்பினராகச் செயல்பட்டார். ஸ்டீவன்ஸ் இன்ஸ்டிடிட்யூட், ஹார்வர்ட், ப்ரூக்ளின் பாலிடெக்னிக், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல பல்கலைக்கழகங்கள் இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கின.
* பிங்ஹாம் பதக்கம், அமெரிக்க கலைகள் மற்றும் அறிவியல் அகாடமியின் ராம்ஃபோர்ட் பரிசு, எலியட் கிரெசன் பதக்கம், ராயல் நெதர்லாண்ட் ஆர்ட்ஸ் அன்ட் சயின்ஸ் அகாடமியின் விருது, அமெரிக்க தேசிய அறிவியல் அகாடமியின் விருது உள்ளிட்ட ஏராளமான பரிசுகள், பதக்கங்கள் விருதுகளை வென்றார்.
* அறிவியல் முறை, அறிவியல் தத்துவங்களின் அம்சங்கள் குறித்த ‘ஃபிலாசஃபி ஆஃப் சயின்ஸ்’, ‘தி லாஜிக் ஆஃப் மாடர்ன் ஃபிசிக்ஸ்’ உள்ளிட்ட விரிவான நூல்களைப் படைத்தார். இயற்பியலுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கிய பெர்சி வில்லியம்ஸ் பிரிட்ஜ்மான் 1961-ம் ஆண்டு 79-வது வயதில் மறைந்தார்.