

ஜெர்மனியைச் சேர்ந்த வானியலாளர் ஜோஹன் காட்ஃப்ரைடு கால், பெர்லினில் உள்ள வானியல் ஆராய்ச்சி மையத்திலிருந்து நெப்டியூன் கிரகத்தைக் கண்டுபிடித்தார்.
சூரியக் குடும்பத்தின் 8-வது கிரகமான நெப்டியூனின் இருப்பை, பிரான்ஸைச் சேர்ந்த வானியலாளர் ஜான் ஜோசப் லெ வெரியர்தான் முதலில் ஊகித்தார். யுரேனஸ் கிரகத்தின் சுற்றுப்பாதையில் காணப்பட்ட மாறுபாட்டை வைத்து, யுரேனஸுக்கு அடுத்து ஏதோ ஒரு கிரகம் இருக்கக்கூடும் என்று கருதப் பட்டது. இதுகுறித்து, ஜோஹன் காட்ஃப்ரைடு காலுக்கு, லெ வெரியர் தெரிவித்தார்.
1846-ல் இதே நாளில், ஜோஹன் காட்ஃப்ரைடு காலும் அவரது உதவியாளர் ஹென்ரிச் லூயியும் இணைந்து நெப்டியூனைத் தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்தனர். ஆய்வுகளுக்குப் பிறகு, அது ஒரு கிரகம்தான் என்பது உறுதிசெய்யப்பட்டது. தொலை நோக்கியில் பார்ப்பதற்கு முன்பே கணக்கீட்டின் அடிப்படையில் கண்டு பிடிக்கப்பட்ட முதல் கிரகம் இதுதான்.
பூமியைப் போல், 4 மடங்கு விட்டம் கொண்டது. இந்தக் கிரகத்துக்கு ரோமானியக் கடல் தெய்வமான நெப்டியூனின் பெயர் வைக்கப்பட்டது. நெப்டியூனுக்கு 13 நிலவுகள் இருப்ப தாகக் கருதப்படுகிறது. இவற்றுள் ட்ரைட்டன் நிலவு மிகப் பெரியது. 165 ஆண்டுகளுக்கு ஒருமுறை சூரியனை வலம்வருகிறது நெப்டியூன். நாசா அனுப்பிய வாயேஜர்-2 என்ற விண்கலம், 1989-ம் ஆண்டு நெப்டியூனைக் கடந்தபோது நெப்டியூனையும் ட்ரைட்டனையும் படம் பிடித்து பூமிக்கு அனுப்பியது.