கிறிஸ் கெயில் 10

கிறிஸ் கெயில் 10
Updated on
1 min read

மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் வீரர் கிறிஸ்டோபர் ஹென்றி கெயில் பிறந்தநாள் இன்று. அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

# சொந்த நாடு ஜமைக்கா. லூக்காஸ் கிரிக்கெட் கிளப்பில் இளமைக் காலத்தில் ஆடியவர். அங்கு இடம் கிடைக்காமல் போயிருந்தால் தெருக்களில்தான் தன் வாழ்க்கையைக் கழித்திருக்க வேண்டும் என்பார்.

# புனே வாரியருக்கு எதிரான ஐ.பி.எல். போட்டியில் 17 பந்துகளில் 50 ரன்கள், 30 பந்துகளில் 100 ரன்கள், யாரும் எட்டாத 175 ரன்கள்.. என்று ஒரே போட்டியில் மூன்று உலக சாதனைகள் நிகழ்த்திய கிரிக்கெட் உலக நாயகன் கெயில். டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்றிலும் சதம் அடித்த முதல் சாகச வீரர்.

# அடித்து மட்டும்தான் ஆடுவார் என்று நினைத்தால் வெரி ஸாரி! ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் ஏழரை மணிநேரம் ‘மட்டை’ போட்டு மண்டைகாய வைத்திருக்கிறார்.

# பேட்டிங் செய்யும்போது இடது கையையும், பவுலிங் செய்ய வலது கையையும் பயன்படுத்துவார்.

lசில ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூருவில் இவர் சிக்ஸர் அடித்த பந்து, ஒரு பெண் குழந்தையின் மூக்கில் பட்டு காயமாகிவிட்டது. பதறிப்போன கெயில், மருத்துவமனைக்குச் சென்று குழந்தைக்கு ஆறுதல் சொல்லி, அன்றைய தினம் வென்ற ‘ஆட்ட நாயகன்’ பரிசை அவளுக்கே கொடுத்துவிட்டார்.

# சொந்த ஊரில் சகோதரருடன் இணைந்து ‘டியூட்டி ஃப்ரைடேஸ்’ என்ற பொழுதுபோக்கு நிறுவனம் நடத்திவருகிறார். மைதானத்தில் நடனமாடும் ரகசியம் அதுதான்.

# இதய வால்வு பாதிக்கப்பட்டதால் சுமார் ஒன்றரை ஆண்டுகள் படாதபாடுபட்டார். ஒரு போட்டியில் நிலைமை மோசமாகி பாதியில் வெளியேற நேரிட்டது. அறுவை சிகிச்சையில் குணமானவர் மீண்டும் சாதனைகளை தொடர்கிறார்.

# டெஸ்ட் போட்டியின் முதல் பந்திலேயே சிக்ஸர் அடித்து ஆரம்பித்து வைத்த ஒரே வீரர் கெயில்தான்.

# இளம் வயதில் ஒல்லியாக இருந்ததால் பந்துகளை பவுண்டரிக்கு விரட்ட எடை மிகுந்த பேட் பயன்படுத்தினார். அதனால்தான் அவரால் அதிகபட்சமாக 126 மீட்டர் தூரம் வரை பந்தைப் பறக்கவிட முடிகிறது.

# கெயில் ஃபோர்ஸ், கெயில் ஸ்ட்ரோம், மாஸ்டர் ஸ்ட்ரோம் - இவை எல்லாம் இவரது பட்டப் பெயர்கள். ஆடுகளத்தில் பெரும்பாலும் கூலாக நடனம் ஆடும் கெயிலையும் சண்டை போடவைத்தவர் ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in