Last Updated : 12 Sep, 2014 05:44 PM

 

Published : 12 Sep 2014 05:44 PM
Last Updated : 12 Sep 2014 05:44 PM

உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினராவது எப்படி?

தமிழக அரசு சமூக பாதுகாப்பு திட்டத்தின் மூலம் விவசாயிகள் மற்றும் அவர்களைச் சார்ந்த குடும்ப உறுப்பினர்களுக்கு உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. அவற்றை பெறுவதற்கான தகுதி, வழிமுறை குறித்து சமூக பாதுகாப்பு திட்டத் துறை அதிகாரிகள் கூறுவதாவது:

# உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் உறுப்பினராக என்ன தகுதிகள் வேண்டும்?

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தில் உறுப்பினராக தோட்டக்கலை, பட்டுப்புழு வளர்ப்பு, பால் பண்ணை, கோழிப் பண்ணைத் தொழில், கால்நடை வளர்ப்பு, மீன்பிடித் தொழில் போன்ற விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை மேற்கொள்ள வேண்டும். மேலும் விளைநிலத்தில் பயிர், புல், மரம் மற்றும் தோட்ட விளைபொருள் வளர்த்தல், உரவகைப் பயிர் வளர்த்தல், நிலத்தின் ஒரு பகுதி அல்லது நிலம் முழுவதும் மேய்ச்சலுக்கு பயன்படுத்துதல் ஆகியவையும் விவசாயம் சார்ந்த தொழில்களாகும். நன்செய் நிலம் என்றால் 2.50 ஏக்கருக்கு மிகாமலும், புன்செய் நிலம் எனில் 5 ஏக்கருக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

# இத்திட்டத்தில் உறுப்பினராவதற்கு என்ன ஆவணங்கள் தேவை, எங்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்?

அந்தந்த கிராம நிர்வாக அலுவலரிடம் விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பிக்கும்போது குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை, வயது, தொழில், நில அளவு, குடும்ப அட்டை எண் போன்ற விவரங்களை தெரிவித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். குடும்ப அட்டை இல்லாதவர்கள் இத்திட்டத்தின்கீழ் உறுப்பினராக இயலாது. புதிதாக பதிவு செய்பவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் பதிவு செய்தபின் ஒப்புகைச் சீட்டு பெற வேண்டும். மேலும், 18 முதல் 65 வயதுக்குள் இருக்க வேண்டும். திட்டம் குறித்த சந்தேகங்களை அந்தந்த மாவட்ட, வட்ட அளவிலான சமூக பாதுகாப்பு திட்ட அலுவலகத்தை அணுகி நிவர்த்தி செய்து கொள்ளலாம். இப்பதிவு முழுவதும் இலவசமாகும். கட்டணம் எதுவும் கிடையாது.

# உழவர் பாதுகாப்பு திட்ட உறுப்பினருக்கு என்ன விதமான அடையாள அட்டை வழங்கப்படுகிறது?

இத்திட்டத்தின் மூல உறுப்பினருக்கு சிவப்பு வண்ண அட்டையும், அவரைச் சார்ந்து வாழும் குடும்ப உறுப்பினர் களுக்கு சாம்பல் நிற அட்டையும் வழங்கப்படும். குடும்ப உறுப்பினர்களை சேர்க்க வயது வரம்பு எதுவும் கிடையாது. பொருள் ஈட்டாத பெற்றோர், மனைவி அல்லது கணவர், குழந்தைகள், இறந்த மகனுடைய மனைவி, அவரது குழந்தை ஆகியோர் குடும்ப உறுப்பினர்களாக சேர்க்கப்படுகின்றனர்.

# உழவர் பாதுகாப்பு திட்டத்தின்கீழ் என்னென்ன உதவித்தொகை வழங்கப்படுகிறது?

கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவித்தொகை, முதியோர் ஓய்வூதியம், விபத்து நிவாரண உதவித்தொகை, இயற்கை மரண உதவித் தொகை, ஈமச்சடங்கு செலவு போன்றவை பதிவு பெற்ற உறுப்பினர் களுக்கு வழங்கப்படுகிறது.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x