Last Updated : 30 Sep, 2014 12:42 PM

 

Published : 30 Sep 2014 12:42 PM
Last Updated : 30 Sep 2014 12:42 PM

மார்ட்டினா ஹிங்கிஸ் 10

உலகப் புகழ்பெற்ற சுவிட்சர்லாந்து டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா ஹிங்கிஸின் பிறந்தநாள் இன்று. இந்த நாளில் அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து...

• ஸ்லோவாக்கியா நாட்டில் பிறந்தவர். பெற்றோர் கரோல் ஹிங்கிஸ் மெலனி. இருவரும் டென்னிஸ் வீரர்கள். பிரபல டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவா நினைவாகவே அம்மா மெலனி இவருக்கு ‘மார்ட்டினா’ என்று பெயர் சூட்டினார்.

• டென்னிஸ் மட்டையை ஹிங்கிஸ் பிடித்தபோது அவருக்கு வயது 2. அவரைவிட உயரமாக இருந்தது மட்டை. கூடவே, மூத்த பெண்களுடன் மோதவிட்டு ஹிங்கிஸின் தன்னம்பிக்கையை வளர்த்தார் அன்னை. ஹிங்கிஸுக்கு 6 வயது இருக்கும்போது, பெற்றோர் விவாகரத்து பெற்று பிரிந்தனர். தாயுடன் ஸ்லோவாக்கியாவை விட்டு சுவிட்சர்லாந்துக்கு வந்தார் ஹிங்கிஸ்.

• 12 வயதில் ஜூனியர் விம்பிள்டன் பட்டம், 15 வயதில் ஒற்றையர் கிராண்ட் ஸ்லாம் பட்டம், 209 வாரங்கள் நம்பர் ஒன் வீராங்கனை, ஒற்றையர், இரட்டையர் இரண்டு தரவரிசையிலும் ஒரே நேரத்தில் முதலிடம்.. என்று எக்கச்சக்க சாதனைகளுக்கு சொந்தக்காரர் ஹிங்கிஸ்.

• ஆண்களை பயிற்சியாளராக வைத்துக்கொண்டதே இல்லை. அம்மாவே அவருக்கு நெடுங்காலம் பயிற்சியாளர். சிறந்த பயிற்சியாளருக்கான விருதையும் அவர் வென்றுள்ளார்.

• குதிரைகள் வளர்ப்பதில் பிரியம் அதிகம். கூடவே குதிரை ஏற்றத்திலும் பாய்ச்சல் காட்டுவார். அடிக்கடி கீழே விழுந்து காயப்பட்டாலும் குதிரைகளின் மீதான ஈர்ப்பு மட்டும் குறையவே இல்லை.

• மோனிகா செலஸ் பிடித்த வீராங்கனை. ஆனால், போட்டி என்று வந்துவிட்டால் பயங்கரமாக மோதிக்கொள்வார்கள். ஓய்வு பெற்றிருந்த மோனிகா, இவர் மீண்டும் வந்துவிட்டார் என்று தெரிந்ததும் தானும் தயார் என்று களம் புகுந்தார்.

• 2002-ல் வலது, இடது கணுக்கால்களில் ஏற்பட்ட காயங்களால் டென்னிஸை விட்டு அடுத்த ஆண்டு விலக நேரிட்டது. கோல்ப், டென்னிஸ் வர்ணனை என்று பல்லைக் கடித்துக்கொண்டு காலம் கடத்தினார்.

• மீண்டும் டென்னிஸ் ஆட வந்ததும் ‘‘தேற மாட்டார்!’’ என்று பத்திரிகைகள் எழுதின. ஆஸ்திரேலிய ஓபன் ஒற்றையர் காலியிறுதியில் கிம் க்ளிஸ்டர்ஸிடம் தோற்றபோது கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.

• மீண்டு வந்து மகேஷ் பூபதியுடன் கலப்பு இரட்டையர் பட்டத்தை அதே ஆஸ்திரேலிய ஓபனில் வென்று காட்டினார். அதே ஆண்டு புகழ்பெற்ற லாரஸ் விருதையும் வென்றார்.

• போதை மருந்து பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டு உண்டு. 2 ஆண்டு தடைக்குப் பிறகு ஆட வந்தவர் இந்த ஆண்டின் அமெரிக்க ஓபன் டென்னிஸ் இரட்டையர் பட்ட இறுதிப்போட்டி வரை சென்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x