Published : 05 Jun 2019 11:02 AM
Last Updated : 05 Jun 2019 11:02 AM

குழந்தை பிறப்பு; தள்ளிப்போடாதீங்க! - ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்

ஜெமினி தனா

    குழந்தைத் திருமணங்களை எதிர்க்காத காலம் அது.   அப்பத்தாவுக்கு 9 வயதாகும்போதே 15 வயது அத்தை மகனுக்கு மணமுடித்து வைத்தார்களாம்.  5 நாள்  கல்யாணத்தில் ஊருக்கே விருந்து என்று உறவினர்களோடு அமர்க்களப்பட்டது. திருமணம் முடிந்தது. ஆனால் மணப்பெண்  இல்லற வாழ்வுக்கு தகுதி யாகவில்லை. அதாவது பூப்படையவில்லை என்பதால் மணமக்கள்  5 வருடங்களுக்குப் பிறகு இல்லற வாழ்வில் ஈடுபட்டார்கள். ஆண்கள்  ஐந்தும் பெண்கள் நான்குமாய் மொத்தம் 9 பிள்ளைகள்.  ஒவ்வொருவருக்கும் இரண்டு அல்லது ஒன்றரை வருடம்தான் இடைவெளி என்று பழங்கதையை அப்பாத்தா சிலாகித்து சொல்லும்போது கேட்டிருக்கிறேன்.

  முந்தைய மூத்த தலைமுறைக் குடும்பங்களில் வாழைப் பழக்கணக்காய் அரை டஜன், அதற்கும் மேல் அல்லது ஒரு டஜன் எனும் கணக்கில் குழந்தைகளைப் பெற்றுக் கொள்வார்கள். இப்போதைய பெண்களுக்கெல்லாம் அவ்வளவு ஆசையில்லை. இரண்டே குழந்தைகள் போதும்.

ஆனால் இப்போது முதலுக்கே மோசமாகி விடுமோ என்று குழந்தையை நினைத்து ஏங்கும் பெண்கள் அதிகரித்து வருகிறார்கள் என்பதுதான் உண்மை. இயல்பான கருத்தரிப்பு நிகழாமல்,  சிக்கலில் விழும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக ஆய்வு ஒன்று  கூறுகிறது.

  முதல் திருமண நாள் கொண்டாட்டத்தை முதல் குழந்தையுடன் கொண்டாடுபவர்கள் 75 சதவிகிதம்  என்றிருந்தது. இரண்டு ஆண்டுகளில் 85 சதவிகிதம் பேர் குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் என்கிறது ஆய்வு ஒன்று. 15% தம்பதியருக்கு குழந்தைப்பேறு  உண்டாவதில் பிரச்சினை இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த சதவீதத்தின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது என்பது கவலைக்கு உரியதாக இருக்கிறது. இயற்கையோடு இணைந்த வாழ்வில் குழந்தைப்பேறு தாமதமாக எவ்வித சிக்கலுமில்லை. ஆனால் பெரும்பாலான நேரங்களில் இத்தகைய சிக்கலை சிக்கலுக்குரியவர்களே ஏற்படுத்திக்கொள்கிறார்கள்.

தள்ளிபோகும் திருமணம்:

முன்பெல்லாம் பெண் பூப்படைந்தவுடன் உறவினர்களுக்கு சொல்லி  விழா நடத்துவார்கள். எங்கள் வீட்டுப் பெண்  இல்வாழ்க்கைக்கு தயாராகிவிட்டாள் என்பதை உணர்த்தவே இவ்வாறு செய்வார்கள். அதற்கேற்ப பெண்ணுக்கும்  18 வயது முதலே வரன்பார்க்கத் தொடங்கி  திருமணமும் முடித்துவிடுவார்கள். திருமணத்துக்கு அடுத்தடுத்து பெண்ணுக்கு வளைகாப்பு, பிரசவம், குழந்தைக்கு காதணி விழா என்று முடியும் வரை ஓயமாட்டார்கள்.  காரணம் கேட்டால்  ’அதது அந்த காலத்துல  நடக்கணுமே’ என்று நிம்மதி பெருமூச்சு விடுவார்கள் குடும்பப் பெருசுகள்.

கடந்த 15 வருடங்களாகவே  பெரும்பாலோனோர் திருமண வயது தாண்டிய பிறகே திருமணம் செய்யும் சூழல் உருவாகிவருகிறது. பெற்றோர்களின் விருப் பங்களை மீறி திருமண வயதை  சப்பில்லாத காரணங்களுக்காக தள்ளி வைக் கும் பழக்கத்தை இருபாலருமே கடைப்பிடித்து வருகிறார்கள். திருமணம் என்பது தள்ளிப்போகும் போது, குழந்தைபிறப்பு என்பதும் தாமதமாகிறது. சிலநேரங்களில் இந்த தாமதத்தால் குழந்தைப்பேறு இயல்பாகவே தள்ளிப்போகிறது. மேலும் வயது அதிகமாகும் போது  கருப்பை தனது சீரான செயல்பாட்டை செய்யாமல் மலட்டுத்தன்மையை உண்டாக்கிவிடுகிறது.

 திருமண வயதைக் கடந்து படிப்பு, வேலை, வீடு, கார், வங்கியில் இருப்பு என பொருளாதார ரீதியாக தயாராக இருந்தால்தான் வாழ்க்கையை நல்ல முறையில் கடக்க முடியும் என்று  இருபாலரும் நினைக்கிறார்கள். ஆனால் இவையெல்லாம்  நிறைந்து கைமுழுக்க செல்வத்தைப் பெற்று செட்டிலாகும் போது  உடலில் உள்ள உறுப்புகளும் ஓய்வுக்குத் தயாராக இருக்கின்றன. அல்லது தன் செயல்திறனை இழந்துவிடுகின்றன.

கருவுறுதலில் சிக்கல்:

திருமணம் முடிந்த மறுமாதமே கருத்தரிக்கும் பெண்களில் சிலர்  கருவைக் கலைக்க  சுயமாக மாத்திரைகளை வாங்கி சாப்பிடுகிறார்கள். கரு கலைந்தாலும் அதில் எஞ்சியிருக்கும் மிச்சங்கள் கருப்பையில் தங்கிவிடும். இது எண்டோமெட்ரியம் பகுதியில் தொற்றை உண்டாக்கி கருவுறுதலில் பிரச்சினையை உண்டாக்கும்.   அதேபோன்று, இரண்டு மாதங்கள் தாண்டியபிறகு  கருவை அழிக்க மாத்திரைகள் எடுப்பது நல்லதல்ல. மருத்துவரின் ஆலோசனையுடன் டி அண்ட் சி முறையில் கருவைக் கலைப்பதே பாதுகாப்பானது. இயன்றவரை முதல் கருவை  தள்ளிப்போடாமல் இருப்பதே சிறந்தது என்பறு அறிவுறுத்துகிறார்கள் மருத்துவர்கள்.

நார்மலான பெண்கள் 21 வயது முதல் 27 வயதுக்குள் குழந்தைப்பெற்றுக்கொள்ள எவ்வித சிக்கலுமில்லை.  இந்த வயதில் சினைமுட்டைகள் உற்பத்தியில் எவ்வித பாதிப்புமில்லை  என்று சொல்லும் மருத்துவம், இந்த வயது அதிகரிக்கும் போது  இயல்பாக கருத்தரிப்பது கூட சவாலாக இருக்கிறது என எச்சரிக்கிறது.

21 வயதில் திருமணம் செய்த  பெண், இரண்டு, மூன்று வருடங்கள் பிள்ளைப்பிறப்பைத் தள்ளிபோடுவதில் சிக்கலில்லை. ஆனால் 30 வயதைக் கடந்த பெண்கள் குழந்தைப்பேறை தள்ளிப்போடுவது அநேக நேரங்களில் கருவுறுதலில் சிக்கலைத்தான் உண்டாக்கும்.  வயது அதிகரிக்கத் தொடங்கும்போது, சிறிய குறைபாடுகள் பெரிய குறைபாடுகளாக மாறக்கூடும். 32 வயதுக்குப்பிறகு கருத்தரிப் பதற்குரிய திறன் குறைகிறது என்றும் 37 வயதைக் கடந்தபிறகு மிக விரைவாகவே குறைந்துவிடுகிறது என்றும் மருத்துவ  ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

மருத்துவரிடம் ஆலோசனை :

  கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்தாமல் ஒருவருட தாம்பத்திய வாழ்க்கைக்குப் பிறகும் கருத்தரிக்கவில்லையென்றால் மகப்பேறு மருத்துவரை சந்தித்து அவரது ஆலோசனையின் பேரில் பரிசோதனைகள் செய்துகொள்வது நல்லது.  தாம்பத்தியத்தில் பிரச்சினை, வெள்ளைப்படுதல், சீரற்ற மாதவிடாய், அதிக ரத்தப் போக்கு போன்ற பிரச்சினைகள் இருந்தால் அதை வெளிப்படுத்தவும் தயக்கம் காட்டக் கூடாது. இருபாலரும் முழு பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் குறைகளை நிவர்த்தி செய்து விரைவில் தாய்மைப்பேறு பெறலாம்.

பெண்களுக்கு:

  கருப்பையில் நீர்க்கட்டிகள், ஃபைப்ராய்டு, கருப்பையின் சதையில் உருவாகும் கட்டிகள், பாலிசிஸ்டிக் ஓவேரியன் சிஸ்ட், கருக்குழாய் அடைப்பு,  கருமுட்டை கருப்பைக்கு வர தாமதம், ஹார்மோன் குறைபாடு, பரம்பரை போன்ற காரணங்களால் கருத்தரித்தலில் சிக்கல் உண்டாகும்.  இவையெல்லாமே உரிய காலத்தில் மருத்துவரின் ஆலோசனையுடன்  தகுந்த சிகிச்சைகளை செய்துகொள்ளும் போது கருத்தரித்தல் என்பது நிச்சயமாக சாத்தியமாகிறது. வயது கடந்த பிறகு இத்தகைய சிகிச்சைகளை மேற்கொண்டால் பலன் பெறுவதில் தாமதமும், சில நேரங்களில் வாய்ப்பும் குறைந்துவிடுகிறது என்பதே உண்மை.

ஆண்களுக்கு:

குழந்தையின்மைக்கு பெண்கள்தான் காரணம் என்று முத்திரை குத்தப்பட்ட காலம் இருந்தது. ஆனால் ஆய்வு ஒன்று ஆண்களின் மலட்டுத்தன்மையும் தாமதமான குழந்தைப் பிறப்புக்குக் காரணமாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளது. விந்தணுக்களின் எண்ணிக்கை குறைபாடு, ஹார்மோன் குறைபாடு,  நீண்ட கால புகைப்பழக்கம்,  மது, உயிரணுக்கள் குறைவு, பரம்பரை ரீதியிலான குறைபாடு, உறுப்பு குறைபாடு போன்றவையும் குழந்தைப்பேறை உண்டாக்குவதில் மிகப்பெரிய தடையாக இருக்கிறது.  ஆண்மைக் குறைபாடு என்று சொல்லப்படும் இவற்றையும் ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்தால் விரைவில் பலன்  அடையலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.

பொதுவான காரணங்கள்:

  இருபாலருக்கும் இருக்கும் பிரச்சினையில் முக்கிய பங்கு வகிப்பது உடல் பருமன். எல்லா நோய்களிலுமே ஏதோ ஒரு வகையில்   தொடர்பு கொண்டிருக்கும் உடல்பருமன், குழந்தைப்பேறைத் தாமதப்படுத்துவதிலும் மிகப்பெரிய தடையாக இருக்கிறது.  

மன அழுத்தம், மாறிவரும் உணவுப் பழக்கவழக்கங்கள், ஜங்க் ஃபுட் உணவுகள், மரபு இதன் காரணமாக உடல்பருமனைச் சந்திக்கும் பெண்கள் சினைப்பையில் நீர்க்கட்டிகள் பிரச்சினைகளையும்  அதிகம் சந்திக்கிறார்கள். ஹார்மோன் குறைபாடு, தைராய்டு குறைபாடு போன்றவையும் குழந்தை பேறை தாமதப்படுத்திவிடுகிறது.

தாமதமின்றி குழந்தைப்பேறை விரும்பும் தம்பதியர் உடல்பருமனாக இருந்தால் சமச்சீர் சத்துக்கள் குறையாமல் உடலை  குறைப்பதில் தீவிரம் காட்ட வேண்டும். இருபாலரில் யாரிடம் குறைகள் இருந்தாலும் வேறுபாடு காட்டாமல்,  நம்பிக்கையுடன்   சிகிச்சையைத் தொடர்ந்தால் நிச்சயம் குழந்தைப்பேறு கிடைத்தே தீரும் என்கிறார்கள் மகப்பேறு மருத்துவர்கள். மன அழுத்தங்களை அதிகரித்துக் கொள்ளாமல் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் அன்பு காட்டி தாம்பத்ய வாழ்வை மேற்கொண்டாலே குழந்தைப்பேறு கிடைத்துவிடும் என்கிறார்கள் உளவியலாளர்கள்.

 பெண்கள் முழுமை அடைவது தாய்மையில்தான். ஆனால் அத்தகைய தாய்மையை உரிய காலத்தில் இயற்கையாக பெறுவதை விடுத்து  இயல்புக்கு மாறாக செயல்படுவதால்தான் இன்று பலருக்கும்  குழந்தைப்பேறு கிடைப்பதில் சிக்கல்கள் உண்டாகின்றன.

பெருகிக் கொண்டிருக்கும் குழந்தையின்மை சிகிச்சை மருத்துவமனைகள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. அதை நோக்கி படையெடுக்கும் தம்பதியரும் பெருகிக் கொண்டிருக்கின்றனர்.

‘காலத்தே பயிர் செய்’ என்று சும்மாவா சொன்னார்கள்?!

 

 

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x