தாய்க்கு மறுமணம் செய்துவைத்த கேரள இளைஞர்; குவியும் பாராட்டு: வைரலான ஃபேஸ்புக் பதிவு

தாய்க்கு மறுமணம் செய்துவைத்த கேரள இளைஞர்; குவியும் பாராட்டு: வைரலான ஃபேஸ்புக் பதிவு
Updated on
1 min read

”மறுமணம் என்பது இன்னும் பலருக்குத் தடையாகவே உள்ளது. என் அம்மா எனக்காக அவரது வாழ்க்கையை ஓரமாக ஒதுக்கிவைத்த பெண். அவருடைய முந்தைய கல்யாணத்தில் அவர் மிகவும் துன்பப்பட்டார்”

கேரளாவைச் சேர்ந்த கோகுல் என்ற இளைஞர் இல்லற வாழ்க்கையில் பெரும் துன்பத்துக்கு ஆளாகி அதிலிருந்த வெளியே வந்த தனது தாய்க்கு மறுமணம் செய்து வைத்து அனைவரது பாராட்டையும் பெற்றுள்ளார்.

கேரளாவின் கொல்லம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் கோகுல்.இன்ஜினீயரான இவர் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது தனது தாயுடன், தந்தை வீட்டிலிருந்து வெளியேறி இருக்கிறார்.

இந்நிலையில் தற்போது தனது தாயின் மறுமணத்தை புகைப்படத்துடன் அவரது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் கோகுல்.

அதில், ''இது என் அம்மாவின் மறுமணம். இதனை நான் பதிவிடலாமா என்று நிறைய யோசித்தேன். மறுமணம் என்பது இன்னும் பலருக்குத் தடையாகவே உள்ளது. என் அம்மா எனக்காக அவரது வாழ்க்கையை ஓரமாக ஒதுக்கிவைத்த பெண்.

அவருடைய முந்தைய திருமணத்தில் அவர் மிகவும் துன்பப்பட்டார். ஒருமுறை என் அம்மா தாக்கப்பட்டு  நெற்றியில் ரத்தக் காயத்துடன் காணப்பட்டார். அதைக் கண்டதும் நான் என் அம்மாவிடம் நீங்கள் ஏன் இதைப் பொறுத்துக் கொண்டு இருக்கிறீர்கள் என்று கேட்டேன். அதற்கு அம்மா என்னிடம் கூறிய பதில் நினைவிருக்கிறது.

நான் உனக்காக வாழ்கிறேன். இதைவிடவும் துன்பங்களை நான் சகித்துக்கொள்ளத் தயாராக இருக்கிறேன் என்றார். பிறகு நான் என் அம்மாவுடன் அந்த வீட்டைவிட்டு வெளியே வரும்போது, ஓர் உறுதியை எடுத்துக் கொண்டேன்.

என் அம்மாவுக்கு மறுமணம் செய்து வைப்பேன் என்று.இதை நான் ரகசியமாக வைத்திருக்க விரும்பவில்லை.

நான் என் அம்மாவிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு பலமுறை கூறினேன். ஆனால் அதற்கு அவர் ஒப்புக் கொள்ளவில்லை. இந்த சம்பந்தம் அவருடன் பணிபுரிபவர்கள் வழியாக அம்மாவுக்கு  வந்தது. முதலில் அவர் ஏற்கவில்லை. பின்னர் ஏற்றுக்கொண்டார்” என்று பதிவிட்டுள்ளார்.

கோகுலின் இந்தப் பதிவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in