Published : 30 May 2019 07:30 PM
Last Updated : 30 May 2019 07:30 PM

புகை பிடிக்கும் பழக்கத்தில் 110 கோடி பேர்; தீர்வுகள் என்னென்ன?- வழிகாட்டும் மனநல ஆலோசகர்

சர்வதேச புகையிலை எதிர்ப்பு நாள் மே 31

உலக சுகாதார தினம் மே 31-ஐ புகை பிடிப்பதற்கு எதிரான நாளாக அறிவித்துள்ளது. இந்த நாளை முன்னிலைப்படுத்தி உடலுக்கு ஏற்படும் ஆபத்துகள் பற்றியும் அதில் ஏற்படும் ஆபத்துகள் பற்றியும் அவற்றில் இருந்து விடுபடுவதற்கான கொள்கைகளைப் பற்றியும் பரிந்துரைத்து புகை பிடிப்பதைக் குறைக்க உதவுகிறது.

இந்த வருடத்திற்கான கருப்பொருள்( தீம் )  'புகையிலை மற்றும் நுரையீரல் ஆரோக்கியம்'

உடலுக்கு ஏற்படும் பல்வேறு நோய்கள் பெரும்பாலும் புகை பிடிப்பதால் உண்டாகிறது. எடுத்துக்காட்டாக நுரையீரல் புற்றுநோய், ஆஸ்துமா, நிமோனியா மற்றும் நுரையீரல் தொற்றுக்கள் இன்னும் பல. பெற்றோர்கள் புகை பிடிப்பதால் குழந்தைகளுக்கு உடல் மற்றும் மனரீதியான பாதிப்புக்கு உள்ளாகின்றன. சிகரெட்டில் நிக்கோடின் என்ற நச்சுப்பொருள் சேர்க்கப்படுகிறது. நிக்கோடின் மிகுதியாக  அடிமையாக்க கூடிய ஒரு பொருள். இதனால் மூளை வளர்ச்சியையும் பாதிக்கிறது.

புகை பிடிப்பதினால் ஏற்படும் பாதிப்புகள்

பெற்றோர்களை முன்மாதிரியாகக் கொண்டு இந்த வகைப் பழக்கத்திற்கு குழந்தைகள் அடிமை ஆகிறார்கள். இதனால் மூளை வளர்ச்சி தாமதம் ஆகிறது. நினைவுத்திறன்,  கவனிப்புத் திறன், சுயக் கட்டுப்பாடு மற்றும் படிக்கும் திறனையும் வெகுவாகப் பாதிக்கிறது .புகை பிடிக்கும் குழந்தைகள் பெரியவர்களானதும் பல்வேறு விஷயங்களுக்கு அடிமை ஆகிறார்கள். பல்வேறு ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பின் படி புகைப்பதற்கான அணுகுமுறைகள், நம்பிக்கைகள், நடத்தைகள் இவை அனைத்தும் பெற்றோரிடமிருந்தே அவர்களை வெகுவாகக் கவர்கிறது. புகைப்பதால் மகிழ்ச்சியாக இருப்பதாகவும், ரிலாக்ஸாக இருப்பதாகவும் அவர்களுக்குத் தோன்றுகிறது.

சமீபத்திய ஆய்வறிக்கையின்படி புகை பிடிக்கும் பழக்கம் உள்ள பெற்றோர்களின் பிள்ளைகள் இந்தப் பழக்கத்திற்கு அடிமை ஆகிறார்கள் என்கிறார்கள். பெரியவர்கள் புகை பிடிப்பதை விட்டு விடுவதால் அடுத்து வரும் தலைமுறைக்கு இதனால் நன்மை ஏற்படுகிறது.

புகைப்பவர்களின் கணக்கெடுப்பு

தோராயமாக உலகில் புகை பிடிப்பவர்களின் எண்ணிக்கை 1.1 பில்லியனாக (110 கோடி) இருக்கிறது. இது 2025-ல் 1.6 பில்லியன் (116 கோடி) அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. வழக்கமாக புகை பிடிப்பவர்களில் 50 சதவீத மக்கள் அகால மரணம் அடைகின்றனர். மற்றும் அவர்கள் வாழ்வதற்கான எதிர்பார்ப்பில் பத்து வருடம் குறைகிறது. சமீபத்திய கணக்கெடுப்பின்படி புகை பிடிக்கும் குடும்பத்தில் உள்ள மூத்த குழந்தைக்கு அடிக்கடி ஆரோக்கியச் சீர்கேடு ஏற்படுகிறது. அவர்களின் நுரையீரல் வளர்ச்சி குறைகிறது. மற்றும் வீசிங், தொடர்ச்சியான இருமல் இவை அனைத்தும் குழந்தைகளிடம் பொதுவாகக் காணப்படும். புகை பிடிக்கும் பழக்கத்தினால் அந்தக் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு சுவாசப் பிரச்சினை மற்றும் நோய்த்தொற்று ஏற்படுகின்றது.

செகண்ட் ஹேண்ட் ஸ்மோக்கர்ஸிடம் இருந்து பெற்றோர்கள் பிள்ளைகளைப் பாதுகாப்பது எப்படி?

உங்கள் அருகில் அல்லது உங்கள் வீட்டின் அருகிலோ எவரையும் புகை பிடிக்க அனுமதிக்காதீர்கள். உங்கள் வாகனத்தில் யாரையும் புகை பிடிக்க அனுமதிக்காதீர்கள். பொது இடங்களுக்கு செல்லும் பொழுது புகை பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்ட பகுதிகளுக்கு குழந்தைகளை அழைத்துச் செல்லுங்கள்.

குழந்தைகளுக்கான தடுப்பு முறைகள்

* பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் இந்தப் பழக்கத்தைப் பற்றி பேசும்பொழுது, தண்டனை பற்றியோ அல்லது தீர்ப்பு சொல்வது போன்று இருக்கக் கூடாது.

* புகைப்பதினால் வரும் தீமையைக் குழந்தைகளிடம் பேச வேண்டியது அவசியம். குழந்தைகளை விளையாட்டு மற்றும் வேறுசில ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபடுத்தினால் புகை பிடிக்கும் பழக்கத்தில் இருந்து திசை திருப்பலாம்.

* பிரஷர் காரணமாக இருந்தாலும் குழந்தைகள் உறுதியாக நோ என்றே சொல்ல வேண்டும். குழந்தைகளுக்குத் தீமையைப் பற்றிச் சொல்வதைவிட எது நன்மை என்பதைப் பற்றி சொல்ல வேண்டும்.

* தன்னம்பிக்கை ஒரு குழந்தைக்கு சிறந்த பாதுகாப்பாக அமைகிறது.

* குழந்தைகளை புகை பிடிக்கும் நண்பர்களிடம் இருந்து விலகியிருக்க வேண்டும் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கம் அளிக்க வேண்டும். உதாரணமாக புகை பிடிக்கும் குழந்தையின் தினசரி வாழ்க்கை எந்த அளவுக்குப் பாதிக்கிறது என்பதையும் அவர்களுக்கு எங்கிருந்து பணம் கிடைக்கின்றது. இந்தப் பழக்கத்தினால் நட்பு எப்படி பாதிக்கப்படுகிறது இப்படி இன்னும் பல விஷயங்களைச் சொல்லலாம்.

* புகை பிடிப்பவர்களை பார்க்கும் பொழுது அவர்களின் தோற்றம், புகைக்கும் போது அவர்களிடம் இருந்து வரும் துர்நாற்றம் மற்றும் இதனால் அவர்களுடன் சுற்றியிருப்பவர்களின் ஆரோக்கியத்திற்கும் கேடு விளைகிறது.

புகை பிடிப்பதற்கான ஈர்ப்பு

புகை பிடிப்பதற்கான ஈர்ப்பு  பல்வேறு காரணங்களால் ஏற்படுகின்றது. எடை குறைப்பதற்காகவும், தன்னை கூலாக காண்பிப்பதற்காகவும், முதிர்ச்சியாக காண்பிப்பதற்காகவும், கடுமையான தோற்றமுடையவராக காண்பிப்பதற்காகவும் மற்றும் தான் சுதந்திரமாக இருப்பதாக காண்பிப்பதற்காகவும், பர்சனாலிட்டியாக இருப்பதாகவும் புகை பிடிப்பவர்கள் தங்களைப் பற்றிய மாயத் தோற்றத்தை உருவாக்கிக் கொள்கிறார்கள்.

இதற்கான தீர்வு

புகைப்பதினால் நுரையீரல் புற்றுநோய் வருகிறது என்பது மட்டுமல்லாமல் பல்வேறு உடல் ரீதியான பிரச்சினைகளும் மன ரீதியான பிரச்சினைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு அரசாங்கத்தின் மூலமாக தடை செய்யப்பட வேண்டும். மேலும் தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட வேண்டும். தனிநபரின் மூலமும் விழிப்புணர்வை ஏற்படுத்தி புகைப்பதைக் கட்டுப்படுத்த வேண்டும்.

சிகரெட் விற்பனை செய்வதை அரசாங்கம் முழுமையாக தடை செய்யப்பட வேண்டும் அவ்வாறு செய்வதன் மூலம் இதனை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும்.  புகை பழக்கத்திற்கு அடிமையானவர்களை அதில் இருந்து விடுவிக்க நிபுணர்கள் மற்றும் மனநல  மருத்துவர்களை அணுகி தெரிந்து அவர்களை முழுமையாக புகை பழக்கத்திலிருந்து காப்பாற்ற முடியும். பாதிப்பு அதிகமாக இருக்கும் பட்சத்தில் தேவை ஏற்பட்டால் போதைப் பழக்கத்தில் இருந்து விடுபட மறுவாழ்வு மையத்தில் சேர்ந்து சிகிச்சையினை மேற்கொண்டு போதைப் பழக்கத்தில் இருந்து விடுபடலாம்.

- வந்தனா, மருத்துவ மனநல ஆலோசகர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x